கட்டிட பொறியாளர்கள் பரிந்துரைக்கும் ‘ எம்-சாண்ட்’


கட்டிட பொறியாளர்கள் பரிந்துரைக்கும் ‘ எம்-சாண்ட்’
x
தினத்தந்தி 1 Feb 2020 9:05 AM GMT (Updated: 1 Feb 2020 9:05 AM GMT)

கட்டுமான பணிகளில் ‘எம்-சாண்ட்’ பயன்படுத்துவது பற்றி கடந்த 15 ஆண்டுகளாக வல்லுனர்கள் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு, கட்டுமான பணிகளுக்கு ஏற்றது என்றும் சான்றளித்துள்ளார்கள்.

வீடுகள் உள்ளிட்ட கட்டமைப்புகளின் கட்டுமான பணிகளில், ஆற்று மணலுக்கு பதிலாக ‘குவாரி டஸ்ட்’ மற்றும் ‘எம்-சாண்ட்’ ஆகியவற்றை பயன்படுத்துவது பற்றி அனுபவம் வாய்ந்த சிவில் பொறியாளர்கள் வலியுறுத்தி இருக்கிறார்கள். கட்டுமான பணிகளில் ‘எம்-சாண்ட்’ பயன்படுத்துவது பற்றி கடந்த 15 ஆண்டுகளாக வல்லுனர்கள் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு, கட்டுமான பணிகளுக்கு ஏற்றது என்றும் சான்றளித்துள்ளார்கள்.

இருப்பினும், அனுபவ ரீதியாக ‘எம்-சாண்ட்’, ‘ஸ்டோன் கிரஷர் டஸ்ட்’, ‘குவாரி டஸ்ட்’ ஆகியவற்றை பயன்படுத்துவது பற்றிய குழப்பம் பொதுமக்கள் பலருக்கும் உள்ளது. அதாவது, ‘எம்-சாண்ட்’ (Manufactured sand) என்ற செயற்கை மணல், கருங்கல் பாறைகளை இயந்திரங்களின் மூலம் 2.35 மி.மீ முதல் 4.75 மி.மீ அளவு கொண்டதாக உடைத்து, தண்ணீரில் கழுவி, மூட்டைகளில் அடைத்து சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. அதில் கோண வடிவத்திலான நுண் துகள்கள் (Angular fine Particles) நிறைய அடங்கியுள்ளன. அதன் காரணமாக, சிமெண்டு கலவை மற்றும் கான்கிரீட் ஆகியவற்றில் வெற்றிடம் குறைந்து, உறுதியான கட்டமைப்பு உருவாகிறது.

சுவர் மேல் பூச்சு பணிகளில் ‘எம்-சாண்ட்’ பயன்படுத்தும்போது, 10 முதல் 15 சதவிகிதம் வரை ஆற்று மணல் அல்லது சலிக்கப்பட்ட ‘குவாரி டஸ்ட்’ ஆகியவற்றை கலக்கவேண்டும். இந்த மணல் கலவைக்கு, ஒரு மூட்டை சிமெண்டுக்கு 150 மி.லி ‘சூப்பர் பிளாஸ்டிசைசர்’ கலந்து பயன்படுத்தினால், சுவர் பூச்சு பணிகளை எளிதாக செய்ய இயலும்.

‘ஸ்டோன் கிரஷர்’ மற்றும் ‘குவாரி டஸ்ட்’ ஆகிய இரண்டும் தயாரிப்பு மற்றும் பயன்பாடு ஆகிய நிலைகளில் வெவ்வேறானவை. ‘குவாரி டஸ்ட்’ என்பது 40 மி.மீ, 20 மி.மீ, 12 மி.மீ ஆகிய அளவு கொண்ட கருங்கல் ஜல்லிகள் தயாரிப்பின்போது மீதமாகும் பொருளாகும். கான்கிரீட் மற்றும் கட்டுமான பணிகளுக்கு இவற்றை தண்ணீர் ஊற்றிக்கழுவி சுத்தம் செய்யாமல் பயன்படுத்தலாம்.

ஆனால், சுவர்களுக்கான மேல்பூச்சு பணிகளில் ‘குவாரி டஸ்ட்’ சல்லடை கொண்டு சலித்து, நீரால் சுத்தப்படுத்தி பயன்படுத்த வேண்டும். குறிப்பாக, அதில் ‘சூப்பர் பிளாஸ்டிசைசர்’ (Super plasticiser) ரசாயனத்தை கலந்து, அரைமணி நேர கால அவகாசத்திற்குள் சுவர் மேற்பூச்சு பணிகளை மேற்கொள்ளலாம்.

Next Story