வாஸ்து சாஸ்திரம் குறிப்பிடும் மனைப்பொருத்தம்


வாஸ்து சாஸ்திரம் குறிப்பிடும் மனைப்பொருத்தம்
x
தினத்தந்தி 1 Feb 2020 9:36 AM GMT (Updated: 1 Feb 2020 9:36 AM GMT)

வாஸ்து பற்றி விளக்கம் அளிக்கும் பழமையான நூல்களில் ‘விஸ்வகர்ம வாஸ்து சாஸ்திரம்’ என்பதும் ஒன்று. அக்காலத்தில் கடைப்பிடிக்கப்பட்ட கட்டுமான யுக்திகள் மற்றும் தொழில்நுட்பங்கள் பற்றி அதில் விளக்கப்பட்டுள்ளன.

வாஸ்து பற்றி விளக்கம் அளிக்கும் பழமையான நூல்களில் ‘விஸ்வகர்ம வாஸ்து சாஸ்திரம்’ என்பதும் ஒன்று. அக்காலத்தில் கடைப்பிடிக்கப்பட்ட கட்டுமான யுக்திகள் மற்றும் தொழில்நுட்பங்கள் பற்றி அதில் விளக்கப்பட்டுள்ளன. அந்த நூலின் 5-வது அத்தியாயத்தில், வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்கள் அமைக்க பொருத்தமான மனையின் தன்மைகள் பற்றி சொல்லப்பட்டுள்ள குறிப்புகளை இங்கே காணலாம்.

* மல்லிகை, முல்லை போன்ற மலர் கொடிகள் சுற்றி வளர்ந்த மரங்களும், மாதுளை, வில்வம் போன்ற தாவரங்களும், திராட்சை கொடிகளும் வளர்ந்துள்ள அல்லது நன்றாக வளரக்கூடிய நிலத்தில் அனைத்து வகை கட்டிடங்களையும் அமைக்கலாம்.

* பசுக்கள், காளைகள், குதிரைகள், செம்மறி ஆடுகள், யானைகள் கட்டப்பட்டிருந்த இடங்கள், புறாக்கள், கிளிகள், குயில்கள், மயில்கள் போன்ற பறவைகள் வாழும் இடங்கள் ஆகியவை வாஸ்து சாஸ்திரப்படி கட்டமைப்புகளை அமைக்க ஏற்ற இடமாகும்.

* மிக கெட்டியாகவும், மிக இளகிய தன்மை இல்லாமல் மிருதுவான மணல் அமைப்பு கொண்ட நிலப்பகுதிகள், 10 அடி முதல் 30 அடி ஆழத்திற்குள் நல்ல நிலத்தடி நீர் கிடைக்கும் பகுதிகள், நெய், தேன் மற்றும் மலர்களின் மணம் கொண்ட மனைகள், குழி எடுக்கும்போது ஒரே நிறமுள்ள மண் கொண்ட நிலங்கள் ஆகியவற்றில் அனைத்து கட்டிடங்களையும் அமைக்கலாம்.

மேலும், மயமதம் என்ற வாஸ்து நூலில் வீடுகள் கட்ட தேர்வு செய்யப்படும் நிலத்தை 1) கஜ பிருஷ்டம், 2) கூர்ம பிருஷ்டம், 3) தைத்ய பிருஷ்டம் (4) நாக பிருஷ்டம் என்று நான்கு வகையாக பிரித்து குறிப்பிடப்பட்டுள்ளன. அவை பற்றிய தகவல்கள் வருமாறு :

‘கஜ பிருஷ்டம்’

மனையின் மைய பகுதிக்கு தெற்கு, மேற்கு, தென்மேற்கு, வடமேற்கு ஆகிய திசைகளில் பூமி சற்று மேடாக இருந்தால் அந்த இடம் ‘கஜ பிருஷ்டம்’ என்று சொல்லப்படும். அத்தகைய இடத்தில் வீடு அமைத்து வசிப்பவர் எல்லா வகையான செல்வ வளமும் நிறைந்தவராக இருப்பதுடன், நீண்ட ஆயுள் உள்ளவராகவும் வாழ்வார்.

‘கூர்ம பிருஷ்டம்’

வீடு கட்ட தேர்வு செய்யப்பட்ட மனையின் மைய பகுதி மட்டும் மேடாகவும், அதன் நான்கு திசைகளும் தாழ்வாகவும் அமைந்திருப்பது ‘கூர்ம பிருஷ்டம்’ எனப்படும். அத்தகைய அமைப்பில் வீடு அமைத்து வசிப்பவர்களுக்கு எப்போதும் உற்சாகம். சவுக்கியம், தன, தான்ய விருத்தி ஏற்படும்.

‘தைத்ய பிருஷ்டம்’

மனையின் மையப்பகுதிக்கு கிழக்கு, தென்கிழக்கு, வடகிழக்கு திசைகளில் பூமி உயர்ந்தும், மேற்கு பகுதி தாழ்ந்தும் இருந்தால் அந்த பூமி ‘தைத்ய பிருஷ்டம்’ எனப்படும். அத்தகைய இடத்தில் குடியிருப்புகள் அமைத்து வசிப்பது நன்மைகளை தராது என்று சொல்லப்பட்டுள்ளது.

‘நாக பிருஷ்டம்’

கிழக்கு, மேற்கு திசைகள் நீளாமாகவும், தெற்கு, வடக்கு பகுதிகள் உயரமாகவும் உள்ள பூமி ‘நாக பிருஷ்டம்’ எனப்படும். அத்தகைய இடங்களில் குடியிருப்புகள் உள்ளிட்ட வீடுகள் அமைப்பது நல்ல பலன்களை அளிப்பதில்லை என்பதுடன் பல சிக்கல்களையும் உண்டாக்கி விடும் என்று குறிப்பிடப் பட்டுள்ளது.

Next Story