கட்டுமானத்துறையில் ‘செயற்கை நுண்ணறிவு’ தொழில்நுட்பம்
பல்வேறு துறைகளில் முத்திரை பதித்து வரும் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) என்ற அதிநவீன தொழில்நுட்பம் தற்போது கட்டுமான துறையிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
‘செயற்கை நுண்ணறிவு’ தொழில்நுட்பம் மூலம், மனித உழைப்பால் பல வாரங்களில் செய்து முடிக்கப்பட வேண்டிய பணிகள் சில மணி நேரத்திற்குள் செய்யப்படுகின்றன. அந்த வகையில், 2020ம் ஆண்டில் ரியல் எஸ்டேட் சந்தை மற்றும் கட்டுமானத்துறை ஆகியவற்றில் இந்த தொழில்நுட்பம் சிறப்பான முத்திரை பதிக்க உள்ளதாக நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
செயற்கை நுண்ணறிவு என்பது, கிடைத்த தகவல்களில் அடிப்படையில் நடைமுறைக்கு ஏற்ப மனித மூளை செய்வது போன்ற முடிவுகளை எடுக்கும் ஆற்றலை கம்ப்யூட்டர்களுக்கு அளிக்கிறது. இதன் மூலம்,ரியல் எஸ்டேட் துறையின் விளம்பரங்கள், சந்தை பகுப்பாய்வு மற்றும் வாடிக்கையாளர் பிரிவு ஆகியவற்றை வர்த்தக ரீதியாக ஒருங்கிணைப்பது எளிதான விஷயமாகும்.
சமீபத்தில் வெளியான ஒரு அறிக்கையில், செயற்கை நுண்ணறிவு மற்றும் மனித உழைப்பு ஆகியவற்றின் மூலம், ஒரு நிறுவனத்தின் வருவாயை 38 சதவிகிதம் வரை அதிகமாக்குவதுடன், பணிகளின் தர நிலையையும் 10 சதவிகிதம் வரை அதிகரிக்க இயலும் என்று சொல்லப் பட்டுள்ளது.
குறிப்பாக, ரியல் எஸ்டேட் துறையினருக்கு வணிக ரீதியான ஆலோசனை, மக்களின் பொதுவான மன நிலை, வீடுகள், அலுவலகங்கள், வணிக வளாகங்கள், தொழிற்சாலை மற்றும் சேமிப்பு கிடங்குகள் ஆகிய நிலைகளில் வாடகை அல்லது சொந்த தேவை கொண்ட மக்களை தேடிக்கண்டறிவது அவசியமானது. இந்த விஷயங்களை வாடிக்கையாளர்களின் இணைய தள பயன்பாடு அடிப்படையிலான தரவுகளை மையமாகக் கொண்டுதான் ரியல் எஸ்டேட் விளம்பரங்கள் செய்யப்படுகின்றன.
செயற்கை நுண்ணறிவு பயன்பாடு எந்த அளவுக்கு நடைமுறை சாத்தியமானது என்பதை கண்டறிய அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதில், பயன்படுத்தப்பட்ட ‘ரோபோ’ பல்வேறு ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் அளித்த அவர்களது கட்டுமானத் திட்டங்களின் அனைத்து விபரங்களின் அடிப்படையில், பல தரப்பு வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கு ஏற்ற வீடுகள் அல்லது குடியிருப்புகளை குறுகிய காலத்தில் தேர்வு செய்து, அவை பற்றிய அனைத்து தகவல்களையும் அளித்தது. அதன் அடிப்படையில், கட்டுமான நிறுவனங்களின் புதிய திட்டங்களுக்கு தேவையான அனைத்து தகவல்களையும் ஒருங்கிணைத்து அளிப்பது பற்றியும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
Related Tags :
Next Story