கனவு வீட்டை கட்டுவதில் சிக்கன நடவடிக்கைகள்


கனவு வீட்டை கட்டுவதில் சிக்கன நடவடிக்கைகள்
x
தினத்தந்தி 6 March 2021 6:22 AM GMT (Updated: 6 March 2021 6:22 AM GMT)

வங்கி கடன், கட்டுமான அனுமதி, மணல், செங்கல், கம்பி, சிமெண்டு, எலெக்ட்ரிக்கல், போர்வெல் அமைத்தல் உள்ளிட்ட இதர செலவினங்கள் கொண்ட கட்டுமான பணிகளை மேற்கொள்ளுபவர்கள், கையிலிருந்தும் குறிப்பிட்ட தொகையை செலவு செய்ய வேண்டும்.

அவர்களுடைய பட்ஜெட்டுக்கு ஏற்ப கட்டுமான பொறியாளர்கள் மற்றும் வல்லுனர்கள் சிக்கன செலவில் பணிகளை செய்து முடிப்பதற்காக குறிப்பிட்டுள்ள வழிகளை இங்கே காணலாம்.

அஸ்திவாரம்
குறிப்பிட்ட அளவுக்கு பள்ளம் எடுத்து அரை ஜல்லி, பெரிய ஜல்லி போட்டு, கருங்கல் அடுக்கி சிமெண்டு கலவை கொண்டு அஸ்திவாரத்தை உருவாக்கும் முறை பொதுவானது. ‘ஆர்ச் பவுண்டேஷன்’ முறையை பயன்படுத்தினால் குறைவான ஆழத்தில் உறுதியான அஸ்திவாரத்தை அமைக்க இயலும். ‘அண்டர் ரீம் பைல் பவுண்டேஷன்’ முறையிலும் அஸ்திவாரம் அமைக்கலாம். இந்த முறைகளால் அஸ்திவார செலவில் சுமார் 25 சதவிகிதம் சேமிக்கப்படும். இந்த முறைகளை கட்டுமான பொறியாளரது ஆலோசனை மற்றும் மேற்பார்வையில் அமைக்க வேண்டும்.

சுற்றுச்சுவர்
சுற்றுச்சுவர் அமைக்க செங்கலுக்கு பதிலாக கான்கிரீட் சாலிட் பிளாக் கல்லைப் பயன்படுத்தலாம். செங்கல் சுவரை ஒரே நேரத்தில் ஒரு மீட்டர் உயரத்துக்கு மேல் அடுக்கி சுவர் எழுப்ப இயலாது. ஆனால், சாலிட் பிளாக் கல்லை கொண்டு ஒரே நேரத்தில் 15 கல் உயர சுவர் கட்டலாம். ஒரு சாலிட் பிளாக் கல் 4 முதல் 5 செங்கல்களுக்குச் சமம் என்ற நிலையில் வேலை விரைவாக முடிவதுடன், கட்டுமான நேரம் மற்றும் லேபர் எண்ணிக்கையும் குறையும். சாலிட் பிளாக் சுவர் மேல் பூச்சு வேலையில் சிமெண்டு பூச்சை கொஞ்சம் குறைவாகப் பூசலாம். மேலும், சாலிட் பிளாக் கல்லை ரீயூஸ் செய்ய முடியும். சாலிட் பிளாக் கல் எண்ணிக்கையில் குறைவு என்பதால் ஏற்றி இறக்கும் வேலைகள் விரைவில் முடியும்.

ஜன்னல் மற்று கதவு
தற்போது, வீடுகளுக்கான கதவு, ஜன்னல் போன்றவற்றை ரெடிமேடாக தேர்வு செய்வது பரவலாக உள்ளது. கதவு மரத்தால் இருந்தாலும், ஜன்னல்களும் மரத்தால் அமைப்பது அதிக செலவாகும். மேலும், மரத்தாலான பொருட்களுக்கான பராமரிப்பு மற்றும் அவற்றை அவற்றை பொருத்துவதற்கு முன்னர் மேற்கொள்ள வேண்டிய பூச்சி தடுப்பு நடவடிக்கைகள் ஆகியவற்றில் கவனமாக செயல்பட வேண்டும். ஆரம்ப செலவு மற்றும் பின்னர் செய்ய வேண்டிய பராமரிப்புகள் ஆகியவற்றை மனதில் கொண்டு திட்டமிட வேண்டும். அதனால், ஜன்னல் அமைப்பில் இரும்பு அல்லது யு.பி.வி.சி ஜன்னல்களை தேர்வு செய்யலாம்.

மேற்கூரை அமைப்பு
ஒரு மாடி மட்டும் கொண்ட வீட்டின் கட்டுமான பணிகளில் கூரை அமைக்கும் செலவை சிக்கனமாக செய்ய இயலும். அதாவது, ‘கட்லின்டல் சன் ஷேடு’ அமைக்கப்பட்ட பின்னர் சிலாப் டெக்னாலஜி மூலம் கூரையை அமைக்கலாம். மற்றொரு தளம் அமைக்கும் நிலையில், அடித்தளம் அமைக்கப்பட்ட அதே ’மோல்டிங் டெக்னாலஜி’ மூலம் பிளிந்த் பீம் அமைக்கலாம். இந்த முறை செலவு குறைவாகவும், கட்டுமானங்களின் பாது காப்புக்கு ஏற்றதாகவும் இருக்கும். கூரை அமைப்பதில் செலவை குறைக்க பெர்ரோ சிமெண்டு சேனல், ஜாக் ஆர்ச் போன்ற தொழில்நுட்பங்களை பயன்படுத்தி கான்கிரீட் செலவைக் குறைக்கலாம்.

கட்டுமான பொருட்கள் கொள்முதல்
கட்டுமான செலவை குறைக்க வேண்டுமென்றால் வீட்டுக்குத் தேவையான மொத்த பொருட்களையும் ஒரே தடவையில் வாங்கக்கூடாது. மழை, லேபர் பிரச்சினை போன்ற காரணங்களால் கட்டுமான பணிகள் தாமதமாகும் சமயங்களில் சிமெண்டு, கம்பி மற்றும் செங்கல் போன்றவை சேதமாகலாம். அதனால், பொருட்கள் கொள்முதலில் சரியான திட்டம் அவசியம். இரும்பு கம்பிகளில் ஐ.எஸ்.ஐ, ஐ.எஸ்.ஓ தரச்சான்று பெற்ற எந்த நிறுவனத்தின் கம்பிகளையும் பயன்படுத்தலாம். அதே போல ஆற்று மணலே வேண்டும் என்று இல்லாமல், எம் சாண்ட் பயன்படுத்தலாம். அருகிலிருந்தே பொருட்களை வாங்குவது போக்குவரத்துச் செலவை மிச்சப்படுத்தும்.

Next Story