வீட்டை அழகாக்கும் எளிமையான உள் அலங்காரம்


வீட்டை அழகாக்கும் எளிமையான உள் அலங்காரம்
x
தினத்தந்தி 16 April 2021 5:27 PM GMT (Updated: 16 April 2021 5:27 PM GMT)

குடியிருப்பது சிறிய வீடாக இருந்தாலும் அழகாக இருக்கவேண்டும் என்பது இன்றைய நகர வாழ்வில் அனைவரது விருப்பமாக உள்ளது.

சிறிய குடித்தனமாக இருந்தாலும், பெரிய வீடாக இருந்தாலும் அவற்றின் அமைப்பிற்கு ஏற்ப பொருத்தமான உள் அலங்கார பணிகளை செய்தால், வீடுகள் அழகாக தோற்றமளிக்கும் என்பது உள் அலங்கார நிபுணர்களின் கருத்தாகும். அதற்கேற்ப அவர்கள் அளிக்கும் எளிமையான குறிப்புகளை காணலாம்.

* வரவேற்பறை சுவர்களுக்கு அடர்த்தியான நிறம் கொண்ட ‘பெயிண்டிங்’ செய்வது பொருத்தமாக இருக்காது. அடர்த்தியான நிறங்கள் சம்பந்தப்பட்ட அறையை வெளிச்சம் குறைவானதாகவும், சிறிய அளவு கொண்டதாகவும் வெளிப்படுத்தும் தன்மை கொண்டவை. அதனால், வீடுகளின் முன் அறைகளுக்கு அடர்த்தியான நிற ‘பெயிண்டிங்’ பொருத்தமாக இருக்காது.

* வெளிர் நிறங்கள் அறைகளுக்கு ‘பளிச்’ என்ற தோற்றத்தை அளிக்கின்றன. அதனால், வரவேற்பறைகளுக்கு வெளிர் நிற ‘பெயிண்டிங்’ செய்து கொள்ளலாம். அதனால், சிறிய அறையாக இருந்தாலும்கூட, அது அழகாகவும், வெளிச்சமாகவும், பெரியதாகவும் காட்சி தரும்.

*வரவேற்பறையில் டி.வி, சோபா செட், டீபாய் போன்றவையும், படுக்கை அறையில் ‘வார்டுரோப்’ மற்றும் ‘டிரஸ்ஸிங் டேபிள்’ ஆகியவையும், சமையலறையில் மிக்சி, கிரைண்டர், பிரிட்ஜ் ஆகியவற்றையும் கணக்கில் கொண்டு உள் அலங்கார பணிகளை திட்டமிட்டுக் கொள்ளவேண்டும்.

* இப்போது சந்தையில் பல வடிவங்களில் கிடைக்கக்கூடிய சிறிய ‘ஷெல்ப்’ அமைப்பை ஆங்காங்கே சுவர்களில் பொருத்தி வைத்து, அதில் கலைப்பொருட்கள் மற்றும் புகைப்படங்களை அழகாக இடம் பெறச் செய்யலாம்.

* அறைகளின் ‘கார்னர்’ பகுதிகளில் ‘ட’ வடிவ ‘வார்டுரோப்’ அமைத்தால், நிறையப் பொருட்களை உள்ளே வைப்பதற்கு வசதியாக இருக்கும்.

* அடுக்குமாடி குடியிருப்புகளில் மாடித்தோட்டம் அமைக்க விரும்புபவர்கள், ‘வெர்ட்டிகல் கார்டன்’ என்ற நவீன தோட்டக்கலை மூலம்சுவர்களில் செங்குத்தாக தொட்டிகளை பொருத்தி அதில் செடிகளை வளர்க்கும் முறையை கடைபிடிக்கலாம்.

* நவீன ‘வெர்டிகல் கார்டன்’முறையில் வீட்டின் பால்கனி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் சிறிய அளவு கொண்ட தொட்டிகளில் செடிகளை வளர்த்து அழகு செய்யலாம். பால்கனி இல்லாத நிலையில் வீட்டின் வரவேற்பறை பகுதியில், இடத்திற்கு பொருத்தமாகவும் இந்த முறையை அமைத்துக் கொள்ளலாம்.

Next Story