கட்டுமானத்துறையினருக்கு அரசு அளிக்கும் திறன் மேம்பாட்டு பயிற்சிகள்


கட்டுமானத்துறையினருக்கு அரசு அளிக்கும் திறன் மேம்பாட்டு பயிற்சிகள்
x
தினத்தந்தி 7 Aug 2021 11:58 AM IST (Updated: 7 Aug 2021 11:58 AM IST)
t-max-icont-min-icon

தொழில் நுட்ப வளர்ச்சி சார்ந்த திறன் மேம்பாட்டு பயிற்சி மற்றும் தொழில் பயிற்சி அளிக்கப்பட வேண்டியதன் அவசியத்தை அரசு உணர்ந்துள்ளது.

பொதுமக்களின் குடியிருப்பு தேவைகளை நிறைவேற்றி வரும் கட்டுமான துறை வளர்ச்சி காரணமாக அதிக எண்ணிக்கையில் வேலை வாய்ப்புகள் உருவாகி வருகின்றன. அதன் அடிப்படையில் ஏற்கெனவே கட்டுமான பணிகளை மேற்கொண்டு வருபவர்களுக்கும், புதிதாக நுழைபவர்களுக்கும் இன்றைய தொழில் நுட்ப வளர்ச்சி சார்ந்த திறன் மேம்பாட்டு பயிற்சி மற்றும் தொழில் பயிற்சி அளிக்கப்பட வேண்டியதன் அவசியத்தை அரசு உணர்ந்துள்ளது.

அந்த வகையில், கட்டுமான துறையில் உள்ளவர்களுக்கு தொழில் மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சிகளை மத்திய திட்டக்குழு (தற்போது நிதி ஆயோக்) மற்றும் கட்டுமான தொழில் துறை ஆகியவை இணைந்து உருவாக்கியுள்ள கட்டுமான தொழில் மேம்பாட்டு கவுன்சில்
(Construction Industry Development Council - CIDC)
வழங்கி வருகிறது. அதில், சாதாரண கட்டிட தொழிலாளி முதல் கட்டிட வரைபடம் வரைபவர், கட்டுமான பொறியாளர் வரை கட்டுமான துறையில் உள்ள அனைத்து பிரிவினருக்கும் ஒரு குழுவுக்கு 3 மாதங்கள் என பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.

அந்த வகையில், கார்பென்டர், எலக்ட்ரிஷியன், மேசன், பெயிண்டர், பிளம்பர், வெல்டர், கிரேன் ஆப்பரேட்டர், கான்கிரீட் மிக்ஸர் ஆபரேட்டர், சைட் அக்கவுண்டண்டு, சேப்டி இன்ஸ்பெக்டர், கான்கிரீட் வைப்ரேட்டர் ஆபரேட்டர் மற்றும் பிட்டர் உள்ளிட்ட 50 வகையான பணிகளுக்கு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. நேரடியாக கட்டுமான பணிகள் நடைபெறும் இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டு பயிற்சிகள் தரப்படுகின்றன.

பயிற்சியை முடித்தவர்களுக்கு மத்திய அரசின் தொழிலாளர் நலத்துறை மற்றும் கட்டுமான தொழில் மேம்பாட்டு கழகம் ஆகியவை இணைந்து சான்றிதழ் வழங்குகின்றன. அந்த சான்றிதழின் அடிப்படையில் கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டுள்ள நிறுவனத்தில் வேலை வாய்ப்பு பெறலாம் அல்லது நேரடியாக தொழில் தொடங்கி வருமானம் ஈட்டலாம். வெளிநாடுகளில் கட்டுமான பணிகளை மேற்கொள்ளும் நிறுவனங்களில் பணியாற்ற இந்த சான்றிதழ் முக்கியமான தகுதியாக எடுத்துக்கொள்ளப்படுவது கவனிக்கத்தக்கது. பயிற்சி பெற விரும்புபவர்கள்
http://www.cidc.in/
என்ற இணையதளத்தை அணுகலாம்.

தமிழக அரசின் திறன் மேம்பாட்டு கழகம் (Tamil Nadu Skill Development Corporation) மற்றும் மத்திய அரசின் கட்டுமான தொழில் மேம்பாட்டு கவுன்சில் ஆகியவை இணைந்து TNSDC-CIDC Skill Development Program
என்ற பயிற்சியை தமிழகத்தின் பல நகரங்களில் அளித்து வருவது குறிப்பிடத்தக்கது. பயிற்சி பெற விரும்புபவர்கள் https://www.tnskill.tn.gov.in/ என்ற இணைய தளம் மூலம் தங்கள் சுய விவரங்களை உள்ளீடு செய்து பதிவு செய்து பயன் பெறலாம்.

Next Story