மனம் தளர்த்தும் பண்ணை வீடுகள்


மனம் தளர்த்தும் பண்ணை வீடுகள்
x
தினத்தந்தி 17 Sep 2021 4:49 PM GMT (Updated: 17 Sep 2021 4:49 PM GMT)

பண்ணை வீடுகள் என்பவை நகரத்தில் இருக்கும் வீடுகள் போல அனைத்து வசதிகளுடனும் இருப்பது போன்றும் அமைக்கிறார்கள்.

பணக்காரர்களுக்கு மட்டுமே சாத்தியமாக இருந்த ஒன்று இப்பொழுது அனைத்து மக்களுக்கும் சாத்தியமானதாக இருக்கின்றது. ஆம், வாடகை வீட்டில் இருப்பவர்கள் கூட தங்களது சக்திக்கு ஏற்றார் போல் கிராமங்களிலும், நகருக்கு ஒதுக்குப்புறமாக இருக்கும் இடங்களிலும் சிறிய அளவில் இடங்களை வாங்கி அதில் சுற்றியும் செடிகள் மற்றும் மரக்கன்றுகளை வைத்து நடுவில் தங்களது சக்திக்கு ஏற்றார்போல் சிறிய வீடுகளை கட்டிக் கொள்கிறார்கள்.

பெருநிறுவனங்கள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களில் வேலை செய்பவர்களில் பெரும்பாலானவர்கள் இதுபோன்ற பண்ணை வீடுகளை வாங்குவதில் மிகவும் ஆர்வம் காட்டுகிறார்கள். இன்றைய பரபரப்பான நகர வாழ்க்கையில் மாற்றம் வேண்டும் என்று நினைப்பவர்கள் இது போன்ற பண்ணை வீடுகளுக்கு வாரம் ஒரு முறையோ, மாதத்திற்கு ஒரு முறையோ அல்லது மூன்று நான்கு மாதங்களுக்கு ஒரு முறையோ சென்று குடும்பத்துடன் தங்கி மிகவும் சந்தோஷமாக வாழ்க்கையை அனுபவிக்கிறார்கள். 

நகரை விட்டு தள்ளிச் சென்று இடம் வாங்கும் பொழுது குறைந்த விலையில் ஏக்கர் கணக்கில் இடத்தை வாங்கி அதில் தேக்கு,மா,பலா மற்றும் தென்னை மரங்களைப் பயிரிடுகிறார்கள். அந்த இடத்தின் நடுவே பங்களா வகை வீடுகளோ அல்லது தேவைக்கு ஏற்றார் போன்ற சிறிய வீடுகளையோ கட்டிக் கொள்கிறார்கள். சிலர் இது போன்ற பண்ணை வீடுகளில் சிறிய நீச்சல் குளங்களையும் அமைத்துக் கொள்கிறார்கள். மன அமைதி வேண்டி பண்ணை வீடுகளுக்கு செல்லும் பொழுது அங்கு இருக்கும் இடத்தில் செடிகளும் மரங்களும் பச்சை பசேலென்று கண்களுக்கு விருந்து அளிப்பதுடன் அவை நமக்கு பயன் தருவதாகவும் இருக்கும் பட்சத்தில் மனதின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை என்று சொல்லலாம்.

பண்ணை வீடுகளை அமைப்பதற்கு ஏக்கர் கணக்கில்தான் இடம் வாங்க வேண்டும் என்று அவசியமில்லை. 20 சென்ட் இடம் இருந்தால் கூட அதற்குத் தகுந்தார்போல் பண்ணை வீட்டை அமைத்துக் கொள்ளலாம்.

பண்ணை வீடுகள் என்பவை நகரத்தில் இருக்கும் வீடுகள் போல அனைத்து வசதிகளுடனும் இருப்பது போன்றும் அமைக்கிறார்கள். சிலரோ பண்ணை வீடுகளை கிராமத்து வீடுகள் போன்ற தோற்றத்துடன் எளிமையானதாக கட்டிக் கொள்கிறார்கள்.இன்னும் சிலரோ கன்டெய்னர் வீடுகளையும் பண்ணைகளுக்கு நடுவே அமைத்து பண்ணை வீடுகளாக மாற்றிக்கொள்கிறார்கள். இதுவும் ஒரு புதுமையான அனுபவமாகவே இருக்கும்.

இன்னும் சிலர் இதுபோன்ற பண்ணை வீடுகளில் சிறிய குளங்களை அமைத்து அதில் மீன்களை வளர்க்கிறார்கள். அந்த மீன்களின் எச்சமானது அங்கு வளர்க்கப்படும் செடி கொடிகளுக்கு உணவாக போடப்படுகின்றது.இதனால் செடி கொடிகள் மிகவும் செழுமையாக வளர்கின்றது. அதேபோல் பெரும்பாலான பண்ணை வீடுகளில் இருக்கும் இடத்தை பயன்படுத்தி ஆடு மாடு, கோழிப் பண்ணைகள் மற்றும் முயல் பண்ணைகளையும் அமைக்கிறார்கள்.

பண்ணைகளில் வளர்க்கப்படும் செடி கொடிகள் ஆடு, மாடு, முயல்,கோழி போன்றவற்றுக்கு உணவாக பயன்படுத்தப்படுகின்றது.இதுபோன்ற ஒருங்கிணைந்த பண்ணைகளை அமைப்பதால் நம்முடைய வியாபாரம் பெருகும் வாய்ப்பும் உள்ளது. பண்ணைகளில்.வளர்க்கப்படும் அனைத்து உயிரினங்களுக்குத் தேவையான உணவுகளும் பண்ணைகளிலேயே இயற்கை முறையில் கிடைத்துவிடும். இதுபோன்ற வியாபார நோக்கில் அமைக்கப்படும் பண்ணை வீடுகள் நமக்கு பணத்தை தருவதுடன் மனதிற்கு அமைதியையும் தருகின்றன.

அனைத்து வசதியுடன் கூடிய பண்ணை வீடுகளில் சில வார இறுதி நாட்கள், பத்து பதினைந்து நாட்கள் என நாட்கணக்கில் மட்டுமல்லாது மாதக்கணக்கிலும் வாடகைக்கு விடப்படுகின்றன. இதன் மூலம் பண்ணை வீடுகளில் தங்கி இயற்கையை அனுபவித்து வாழ வேண்டும் என்று நினைப்பவர்கள் சொந்தமாக பண்ணை வீடுகள் இல்லாவிட்டாலும் இது போன்ற பண்ணை வீடுகளில் தங்கி மன நிம்மதியைப் பெற முடியும். 

வாடகைக்கு விடப்படும் பெரும்பாலான பண்ணை வீடுகளில் அங்கு தங்குபவர்கள் அவர்களே சென்று அங்கு விளையும் காய்கறிகளை பறித்துக் கொண்டுவந்து அங்கு வேலை செய்பவர்களிடம் கொடுத்து சமைத்து சாப்பிடுவது போன்ற வசதிகளும் செய்யப்படுகின்றன.

பண்ணை வீடுகள் என்பது முக்கியமாக குடும்பங்கள் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களுக்கான இல்லமாக விளங்கும் ஒரு அமைப்பாகும். இன்றைய காலகட்டத்தில் அனைத்து மக்களுமே இதுபோன்ற பண்ணை வீடுகளை அமைக்க பெரிதும் ஆர்வம் காட்டி வருகின்றனர். மரம் செடிகொடிகளை வைப்பது மட்டுமல்லாமல் ஆடு, மாடு, கோழி என அவற்றிற்குத் தனியான கொட்டகைகளையும் வீடுகளையும் அமைத்து அவற்றின் மூலம் வருமானத்தையும் ஈட்டுகின்றனர். இது போன்ற பண்ணை வீடுகள் நிகழ்காலத்தில் மட்டுமல்லாது வயதான காலத்தில் அமைதியான வாழ்க்கையை விரும்புபவர்களுக்கு நிச்சயம் மனநிம்மதியை அளிக்கக்கூடிய ஒன்றாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

நன்கு படித்து நல்ல வேலையில் இருக்கும் பெரும்பாலான இளைஞர்கள் கூட இதுபோன்ற பண்ணை வீடுகளை அமைத்து அதில் விவசாயம் செய்தும், மாடு, ஆடு மற்றும் கோழிப் பண்ணைகளை அமைத்தும் அதன்மூலம் வருமானத்தை ஈட்டுவதில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். பண்ணை மாட்டுப்பால்,நாட்டுக் கோழி மற்றும் பண்ணை ஆடுகள் நல்ல விலை போவதால் இதுபோன்ற வியாபாரமானது இப்பொழுது சூடு பிடிக்கத் துவங்கிவிட்டது. 

நம்மால் நேரடியாக இதில் ஈடுபட முடியாவிட்டாலும் வேலைக்கு ஆட்களை வைத்து நிர்வாகம் செய்யும் திறமை இருந்தால் பண்ணை வீடுகளும் பூலோக சொர்க்கமே. பல பில்டர்கள் சிறிய இடங்களில் நடுவில் சின்ன வீடும் சுற்றிலும் மரங்கள் வைத்தும் பண்ணை வீடுகள் கட்டி விற்பனை செய்கிறார்கள். இப்படிப்பட்ட பண்ணை வீடுகளை நாம் நம் விருபத்திற்கு ஏற்ப பார்த்து வாங்கிக்கொள்ளலாம்.

Next Story