ஆச்சரியம் தரும் குறைந்த பட்ஜெட் ஆயத்த வீடுகள்...


ஆச்சரியம் தரும் குறைந்த பட்ஜெட் ஆயத்த வீடுகள்...
x
தினத்தந்தி 24 Sep 2021 5:48 PM GMT (Updated: 24 Sep 2021 5:48 PM GMT)

ஆயத்த ஆடைகள் அறிந்திருக்கிறோம். ஆனால், அது என்னஆயத்த வீடுகள்? அதுவும் குறைந்த விலையில் கிடைக்கும் வீடுகள் என்றால் ஆச்சரியமாகத்தானே இருக்கிறது.வாங்க அதுபத்தி தெரிஞ்சிக்கலாம்.

ஆயத்த வீடுகளை “ப்ரீகாஸ்ட் வீடுகள்” என்று அழைக்கிறார்கள். இதன்மூலம் சாதாரண வீடுகள், கட்டப்பட்ட வீடுகளின் மேல் புதிய வீடுகளை அமைப்பது, பள்ளிகள், கல்லூரிகள், பெரிய வணிக வளாகங்கள் ,ஆடம்பரமான புதுமையான பங்களாக்கள், அலுவலகங்கள் மற்றும் நகரக்கூடிய வீடுகளையும் அமைக்க முடியும் என்று சவால் விடுகிறார்கள் இத்துறையின் திறமைவாய்ந்த கட்டுமான பொறியாளர்கள்.

தோற்றத்திலும் செயல் திறனிலும் கட்டுமானத் துறையின் வருங்காலம் என்று அழைக்கப்படுகின்ற “பிரீஃபேபிரிகேட்டட்” அமைப்புகளைக் கொண்டு கட்டுமானம் நடைபெறுகின்ற இடங்களில்கான்கிரீட், கம்பி, செங்கல், மணல், ஜல்லி இவை இல்லாமல் இந்த வீடுகள் கட்டப்படுகின்றன.ஆயத்த வீடுகளை அமைப்பதற்கான சுவர்கள், பீம்கள் காலங்கள் மற்றும் ஸ்லாப்புகள் என அனைத்துமே தொழிற்சாலைகளில் செய்யப்பட்டு வீடு கட்ட வேண்டிய இடத்திற்கு வாகனங்கள் மூலம் எடுத்துவரப்பட்டு கிரேன் உதவியுடன் மிகவும் அழகாக, அற்புதமாக மற்றும் உறுதியாக அந்த அந்த இடங்களில் அமைத்து அவற்றை பொருத்தி தரும் முறைக்கு “பிரீஃபேபிரிகேட்டட்” கட்டுமானம் என்று அழைக்கிறார்கள்.

இதுபோன்ற ஆயத்த வீடுகளில் பங்களா வகை வீடுகள், பண்ணை வீடுகள், சிறிய வீடுகள், பெரிய வணிக வளாகங்கள்,கடைகள்,டிசைனர் வீடுகள், தங்கும் விடுதிகள் என எதை வேண்டுமானாலும் கட்டித் தர முடியும் என்று ஆணித்தரமாகக் கூறுகிறார்கள் இத்துறை வல்லுனர்கள்.

*கட்டுமானம் நடைபெற வேண்டிய இடங்களில் இத்துறை வல்லுனர்கள் வந்து கள ஆய்வு செய்து நம்முடைய கட்டுமான வரைவு திட்டங்களுக்கு தகுந்தார்போல் அளவுகளை எடுத்துக் கொண்டு செல்கிறார்கள்.அதுமட்டுமல்லாமல் அந்த நிலத்தை ஆய்வு செய்து எத்தனை அடுக்கு மாடிகள் வரை கட்டலாம், எத்தனை காலங்கள் போட வேண்டும் எத்தனை தூண்கள் அமைக்க வேண்டும் என்பது போன்ற திட்டத்தையும் எந்தெந்த இடங்களில் ஜன்னல்கள், கதவுகள், அலமாரிகள் மற்றும் பரண்கள்அமைக்க வேண்டும் என்ற நமது விருப்பத்தையும் திட்டமிடுகிறார்கள்.

* சாதாரண வீடுகளை விட இதுபோன்ற ஆயத்தவீடுகளை கட்டும் பொழுது அதற்காகும் கட்டுமான செலவானது சராசரியாக 10 முதல் 25 சதவீதம் குறைவாகவே உள்ளது.

* கட்டுமான தளங்களுக்கு தச்சர்கள், பிளம்பர்கள் மற்றும் எலக்டிரீஷியன்கள் வந்து வேலை செய்ய வேண்டிய அவசியம் இல்லாததால் தொழிலாளர் செலவு குறைவாகவே உள்ளது.

* குறைவான நாட்களில் ஒரு முழு கட்டுமானத்தையும் விரைவில் கட்டி முடிப்பதால் பணம் சேமிக்கப்படுவதுடன் அதிக அளவில் நேரமும் சேமிக்கப்படுகிறது என்று சொல்லலாம்..

* இதுபோன்ற ஆயத்த வீடுகள் அதிக மதிப்புள்ளவையாக இருப்பதுடன் அதிக ஆற்றல் திறன் கொண்டவையாக இருக்கின்றன. இந்த வீடுகளில் காணப்படும் இறுக்கமான சீம்கள் மற்றும் அதிநவீன ஜன்னல்கள் வெப்பத்தை தக்க வைத்து செயல்பாட்டில் உங்கள் மின்சார கட்டணத்தை குறைக்கின்றன. இப்படி கட்டப்படுகின்ற இறுக்கமான கட்டுமானம் கொண்ட ஆயத்த வீடுகள் இயற்கை பேரழிவுகளை தாங்கும் திறன் கொண்டவையாக இருப்பது மற்றொரு கூடுதல் சிறப்பு என்று சொல்லலாம்.

* நாம் சாதாரணமாக கட்டும் வீடுகளை போன்றே இந்த ஆயத்தை வீடுகளும் அதிக ஆயுட்காலம் கொண்டவையாக இருக்கின்றன.சரியான பராமரிப்புடன் இருக்கும் வீடுகள் பல ஆண்டுகள் ஆயுட்காலம் கொண்டவையாக இருக்கும் என்பது இந்த வீடுகளுக்கும் பொருந்தும்.

* ஆயத்த வீடுகளுக்கும் சாதாரண வீடுகளை போலவே வீட்டுக் கடன்கள் வழங்கப்படுகின்றன.

* இந்த வீடுகளின் மறுவிற்பனை மதிப்பானது காலம் செல்லச் செல்ல அதிகமாகுமே தவிர குறைவதில்லை. இதனால் இந்த வீடுகளை விற்பனை செய்யும் பொழுது குறைந்த பணம் கிடைக்கும் என்று கவலை கொள்ளத் தேவையில்ல..

* மாற்றுக் கட்டுமானப் பொருட்கள் மற்றும் பயன்படுத்தப்படும் முறைகள் காரணமாக பாரம்பரிய வீடுகள் போல இதுபோன்ற ஆயத்த வீடுகளும் முற்றிலும் பாதுகாப்பானவையாக இருக்கின்றன.முதலாவதாக, இதுபோன்ற பிரீஃபேபிரிகேட்டட் கட்டிடங்களானது கட்டிட குறியீடுகள் மற்றும் விதிமுறைகளின்படி கட்டப்படுவதால் இவற்றின் பாதுகாப்பு குறித்து எந்தவித அச்சமும் கொள்ளத் தேவையில்லை.

* இதுபோன்ற கட்டிடங்களை கட்டுவதற்கு என்று சிறிய மற்றும் பெரிய அளவிலான பல கட்டுமான நிறுவனங்கள் உள்ளன.சாதாரண வீடுகள் போலவே இவ்வகை வீடுகளுக்கும் முன்கூட்டியே திட்ட ஒப்புதல் பெற்று கட்டுமானமானது தொடங்கப்படுகிறது.

Next Story