வீடுகளை இனி தூக்குவதும் நகர்த்துவதும் சாத்தியமே !!


வீடுகளை இனி தூக்குவதும் நகர்த்துவதும் சாத்தியமே !!
x
தினத்தந்தி 23 Oct 2021 4:55 AM GMT (Updated: 23 Oct 2021 4:55 AM GMT)

வீட்டை இடிக்காமல் வீட்டை நகர்த்தும், உயர்த்தும் தொழில்நுட்பமானது இப்பொழுது மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

தரை மட்டத்தை விட உயரமாக கட்டப்பட்ட வீடுகள் காலப்போக்கில் சாலை உயரத்திலிருந்து குறைந்து பள்ளமாக அமைந்திருப்பதை பார்க்க முடியும். புயல், வெள்ளம் வரும் பொழுது தரைமட்டத்திலிருந்து பள்ளத்தில் அமைந்திருக்கும் வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்து பெரிய அளவில் சேதத்தை ஏற்படுத்துகின்றது. இது மட்டுமல்லாமல் சாலை விரிவாக்கம் மற்றும் வேறு சில காரணங்களுக்காக கட்டிடங்களின் இடமானது கையகப்படுத்தப்படும் பொழுது வீட்டை முற்றிலும் இடிக்காமல் வேறு ஏதாவது வழிமுறை இருந்தால் அதனைச் செய்து வீட்டை காப்பாற்றலாம் என்று நம் மனது துடிக்கும்.

இதுபோன்ற சந்தர்ப்பங்களில் வீடுகளை உயர்த்துவதற்கும் நகர்த்துவதற்கும் வழிமுறை இருக்கின்றது என்பதை கேட்கும்பொழுது எவ்வளவு ஆச்சரியமாக இருக்கின்றது. வீட்டை இடிக்காமல் வீட்டை நகர்த்தும், உயர்த்தும் தொழில்நுட்பமானது இப்பொழுது மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இவ்வாறு ஒரு வீட்டை உயரப் படுத்துவது (ஹவுஸ் லிஃப்டிங்,ஹவுஸ் ஜாக்கிங், பார்ன் ஜாக்கிங், பில்டிங் ஜாக்கிங்) என்று பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகின்றது. ஹைட்ராலிக் ஸ்க்ரூ ஜாக் மூலம் ஒரு கட்டிடத்தை அஸ்திவாரத்தில் இருந்து பிரித்து உயர்த்தும் செயல் முறை இப்பொழுது பிரபலமாகி வருகின்றது.கட்டிடங்களின் அளவைப் பொருத்து அதற்கு உபயோகப்படுத்தப்படும் ஹைட்ராலிக் ஸ்க்ரூக்கள் மற்றும் ஜாக்கிகளின் எண்ணிக்கையும் மாறுபடுகின்றது.

யூனிஃபார்ம் டிஸ்ட்ரிபியூட்டட் லோட் (UDI) மற்றும் பாயின்ட் லோட் ஜாக்கிகள் இதுபோன்ற வேலைகளில் பெரிதும் பயன்படுத்தப்படுகின்றன. இதுமட்டுமல்லாமல் “ப” சேனல்கள் மற்றும் பேரிங் சேனல்களைப் பயன்படுத்தப்படுவதால் கட்டிடங்களை உயர்த்தும் போது விரிசல் வருவது தடுக்கப்படுவதோடு அவற்றை நகர்த்துவதும் எளிதாகின்றது. ஒரு கட்டிடமானது உறுதியாக இருக்கும் பட்சத்தில் சிறிய வீடு, பெரிய வீடு, கோவில்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், கல்லூரிகள், வணிக வளாகங்கள் என எதுவாக இருந்தாலும் அவற்றை குறைந்தபட்சம் 10 நாட்கள் முதல் அதிகபட்சம் சில மாதங்களுக்குள் உயர்த்திக் கொடுத்து விட முடியும் என்று கூறுகிறார்கள், இதற்கென பிரத்தியேகமாகப் பணி புரியும் கட்டுமான வல்லுனர்கள். ஒரு வீட்டை தூக்கி அடித்தளத்தை மாற்றுவதற்கு ஆகும் செலவானது அந்த வீட்டின் அடித்தளம் மற்றும் அமைந்திருக்கும் இடம், கட்டிடம் எத்தனை தளங்களை கொண்டிருக்கின்றது, எத்தனை வருடங்கள் பழமையானது மற்றும் அதில் இருக்கும் சிக்கல்கள் ஆகியவற்றைப் பொருத்து மாறுபடும்.அதேபோல் புதிதாக ஒரு கட்டிடத்தை கட்டுவதற்கு ஆகும் செலவைக் காட்டிலும் இது போன்று தொழில் நுட்பத்தின் மூலம் வீட்டை உயர்த்துவதற்கும் நகர்த்துவதற்கு ஆகும் செலவு மிகக் குறைவே.ஒரு சதுர அடிக்கு இவ்வளவு என்ற கணக்கில் இதற்காகும் செலவு மற்றும் கூலியானது கணக்கிடப்படுகின்றது.

* வீட்டை உயர்த்துவதற்கான முதல் படியாக வீட்டின் அஸ்திவாரம் முழுவதும் குழிகள் தோண்டப்படுகின்றது.

* பின்னர் எஃகு கம்பிகள் கீழே நுழைக்கப்படுகின்றன.

*பின்னர் தேவைப்பட்டால் 200 முதல் 250 ஜாக்கிகளைப் பயன்படுத்தி வீடு ஒவ்வொரு அடியாக மேலே உயர்த்தப்படுகிறது.

*வீட்டை நகர்த்த வேண்டும் என்றால் வீட்டை ஒட்டி இருக்கும் இடத்தில் புது அடித்தளமானது அமைக்கப்பட்டு சிறிதுசிறிதாக வீடு நகர்த்தப்பட்டு அந்த அடித்தளத்தின் மேல் உட்கார வைக்கப்படுகின்றது.

*வீட்டை நகர்த்துவதற்கு முன்னால் வீட்டில் இருக்கும் பழைய தூண்களானது அடித்தளத்தில் அறுக்கப்பட்டு புதிய அடித்தளத்தின் புதுத் தூண்களுடன் கம்பிகள் மூலம் இணைக்கப்பட்டு ஜல்லி கற்களைக் கொண்டு கட்டுமானம் செய்யப்படுகின்றது.

ஒரு வீட்டை எவ்வளவு அடி உயரம் வரை உயர்த்த முடியும்?எவ்வளவு அடி தூரம் நகர்த்த முடியும் ?

உயர்த்துவது, நகர்த்துவது என்பது வெவ்வேறு அம்சங்களின் அடிப்படையில் மாறுபடுகின்றது. வீடு கட்டப்பட்டு எத்தனை வருடங்கள் ஆகின்றன மற்றும் இன்னும் எத்தனை வருட காலங்கள் அந்த வீடானது உறுதியுடன் இருக்கும் என்பதைப் பொருத்தும் வீட்டின் சீலிங்கின் உயரம் மற்றும் அடித்தளம் அமைக்கப்பட்டிருக்கும் முறை அதுமட்டுமல்லாது வீட்டிற்கு கொடுக்கப்பட்டிருக்கும் தூண்கள் அவற்றின் உறுதித்தன்மை இவற்றை பொருத்தம் ஒரு வீட்டை உயர்த்துவதும் நகர்த்துவதும் மாறுபடுகின்றது. ஒரு அடிமுதல் வீடானது ஆறு அடிகள்கூட உயர்த்தப்படுகிறது. அதேபோல் 5, 10, 15, 25 அடி வரை கூட கட்டிடங்களை நகர்த்த முடியும்.

முன்பு இந்தியாவின் வட மாநிலங்களில் மட்டும் பிரபலமாக இருந்த இந்த தொழில்நுட்பம் இப்பொழுது தமிழ்நாட்டிலும் பிரபலமாகி வருகின்றது. கடந்த 10 ஆண்டுகளில் இதுபோன்ற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பல கட்டிடங்கள் உயர்த்தப்படுவதும் நகர்த்தப்படுவதும் சிறப்பாக நடைபெற்று வந்திருக்கின்றது.. இதுபோன்று கட்டிடங்களை உயர்த்துவதாலும் நகர்த்துவதாலும் அந்த கட்டிடமானது உடைந்து விடுமோ, சரிந்து விடுமோ, விரிசல் ஏற்பட்டு விடுமோ என்று பயம் கொள்ள தேவை இல்லை. திறமைவாய்ந்த பொறியியல் வல்லுனர்கள் இந்த வேலைகளை மிகச் சிறப்பாகவும் நேர்த்தியாகவும் செய்து முடிக்கிறார்கள். இதற்கென பிரத்யேகமாக இருக்கும் பொறியியல் வல்லுனர்களிடம் நம்முடைய கட்டிடத்தின் உண்மையான நிலவரங்களை கூறி அதற்காக ஆகும் செலவை முன்கூட்டியே தெரிந்துகொண்டு அவற்றை நம்மால் செயல்படுத்த முடியுமா என்பதை அறிந்துகொண்டு இந்த செயலில் இறங்கினோம் என்றால் நம்முடைய வீடானது துளியளவு சேதமும் இல்லாமல் பழமை மாறாமல் நமக்கு அப்படியே கிடைக்கும் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.

நன்மைகள்

* புது வீடு கட்டுவதற்கு பல லட்சங்கள் செலவாகும் பொழுது இதுபோன்று வீட்டை உயர்த்துவதற்கும் நகர்த்துவதற்கும் ஆகும் செலவு சில லட்சங்களே ஆகும்.

*நாம் நினைத்தபடி கட்டிய வீட்டை அப்படியே எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் சில அடிகள் மட்டும் உயர்த்தினால் போதும் என்று நினைத்தோம் என்றால் அதற்கு இது போன்ற தொழில் நுட்பங்கள் கைகொடுக்கும் என்று சொல்லலாம்..

*புது வீடு கட்டுவதற்கு ஆகும் காலத்தைவிட இது போன்று வீட்டை உயர்த்துவதற்கு ஆகும் காலம் மிகவும் குறைவாகவே இருக்கும் என்று உறுதியாகச் சொல்லலாம்.

Next Story