வீடு வாங்குவதற்கான சட்டப்பூர்வ செயல்முறைகள்…


வீடு வாங்குவதற்கான சட்டப்பூர்வ செயல்முறைகள்…
x
தினத்தந்தி 17 March 2022 5:42 PM IST (Updated: 17 March 2022 5:42 PM IST)
t-max-icont-min-icon

வீடு வாங்குவது என்பது நம்முடைய வாழ்நாளில் நடக்கும் மிக முக்கியமான நிகழ்வாக இருப்பதால், அதை மிகவும் கவனமாக ஆராய்ந்து அதில் சட்ட சிக்கல்கள் எதுவும் இல்லையா என்பதை உறுதி செய்து வாங்க வேண்டியுள்ளது. வீடு வாங்கும்போது கவனிக்க வேண்டிய மற்றும் செய்ய வேண்டிய சட்டப்பூர்வ செயல்முறைகளை இப்பொழுது பார்க்கலாம்.

*ஒருவரது தனிப்பட்ட அல்லது குடும்பத் தேவைகளுக்கு ஏற்ப வீடு வாங்குவதற்கான பட்ஜெட், வீடு வாங்க கூடிய இடம் மற்றும் நாம் வாங்க கூடிய வீட்டில் இருக்க வேண்டிய வசதிகள் ஆகியவற்றை முதலில் முடிவு செய்து கொள்ள வேண்டும்.அதன் பின்னர் அந்த வீட்டை வாங்குவதற்கான சட்டபூர்வ செயல்முறைகளை மிகவும் உன்னிப்பாக கவனித்து எந்தவித பிரச்சனையும் இல்லாதவாறு வாங்குவதே சாலச் சிறந்ததாகும்.

*தலைப்பு சரிபார்ப்பு(டைட்டில் வெரிஃபிகேஷன்):

வீடு வாங்குவதில் முதல் கட்டமாக சொத்து தலைப்பின் இருப்பு மற்றும் செல்லுபடி(வேலிடிட்டி)ஆகியவற்றை உறுதிப்படுத்த வேண்டும்.நாம் வாங்க கூடிய வீடானது அடமானத்தில் இருக்கிறதா அல்லது வீட்டின் மேல் முந்தைய செலுத்தப்படாத நிலுவைத்தொகை கடன்கள் ஏதாவது இருக்கின்றதா என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.குறைந்தபட்சம் கடந்த பன்னிரண்டு ஆண்டுகளில் ஏதேனும் சட்ட முரண்பாடுகள் இருக்கின்றதா என்பதை அந்த வீட்டின் அனைத்து ஆவணங்களையும் சரி பார்த்துத் தெரிந்து கொள்வது அவசியமாகும்.

*விற்பனையாளரின் அடையாள சரிபார்ப்பு (செல்லர்ஸ் ஐடென்டிட்டி வெரிஃபிகேஷன்):

வீட்டின் தலைப்பு ஆவணங்களைச் சரிபார்ப்பது எவ்வளவு முக்கியமோ அதே அளவு முக்கியமானது, விற்பனையாளரின் அடையாளத்தை சரி பார்ப்பதுமாகும்.பான் அட்டை, ஆதார் அட்டை போன்ற செல்லுபடியாகும் சட்ட ஆவணங்களை முதலில் ஆய்வு செய்ய வேண்டும்.விற்பனையாளர் ஒரு நிறுவனமாக இருந்தால், நிறுவனத்தின் பதிவு,டேன் எண் போன்றவை தொடர்பான சட்ட ஆவணங்களைச் சரி பார்க்க வேண்டும்.

*நிலப் பயன்பாடு தொடர்பான ஆவணங்கள்:

நிலத்தின் வகையைக் கண்டறிவது- குடியிருப்பு, வணிகம், தொழில்துறை, விவசாயம் அல்லாத, கலப்பு பயன்பாடு போன்றவவற்றில் நாம் வாங்கக்கூடிய வீடானது எதில் அடங்கும் என்பதை கண்டறிவது முதல் படியாகும்.பல மாநில மற்றும் தேசிய சட்டங்கள் நிலத்தை எதற்காக பயன்படுத்தப்படுகிறதோ அதைத் தவிர வேறு நோக்கங்களுக்காகப் பயன்படுத்துவதை தடை செய்கின்றன.நிலம் மற்றும் அதன் பயன்பாடு சட்டபூர்வமாக மாற்றப்பட்டு இருந்தால், நில மாற்ற ஆவணங்களைக் கண்டறிய வேண்டும்.

பொது, குடியிருப்பு, பூங்காக்கள் மற்றும் திறந்த வெளிகள்,வணிக, தொழில்துறை அனைத்தையும் கருத்தில் கொண்டு முதன்மை திட்டத்தை ஆய்வு செய்து, மண்டல திட்டத்தின்படி சொத்து உருவாக்கப்பட்டுள்ளதா என்பதைச் சரி பார்ப்பது அவசியமாகும்.

*கட்டுமான ஒப்புதல்கள்:

ஏற்கனவே கட்டப்பட்ட கட்டிடத்தில்,கட்டிடம் மற்றும் அந்தக் கட்டிடத்தின் தளவமைப்பு(பிளான்) திட்டத்தை சரிபார்ப்பது அவசியமாகும்.மின்சாரம், தண்ணீர், சுற்றுச்சூழல் அனுமதி, தீ பாதுகாப்பு போன்றவற்றை வழங்குவதற்கு நகராட்சி அதிகாரிகள், அரசு அமைப்புகள், சட்டபூர்வ மற்றும் ஒழுங்குமுறை அதிகாரிகள் போன்றவர்களிடம் கட்டாயம் அனுமதி பெற்றிருக்க வேண்டும்.

*வரி செலுத்துதல்:

வீட்டை வாங்குவதற்கு முன் வீட்டை விற்பனை செய்பவர் சொத்து வரி, தண்ணீர் வரி, கழிவுநீர் வரி என அனைத்தையும் எந்த வித இருப்பும் வைக்காமல் முழுவதுமாக கட்டி முடித்துள்ளனரா என்பதை நகராட்சி அதிகாரிகளுடன் சரி பார்த்து பின்னர் வாங்குவது நல்லது.

*அடமானங்கள் மற்றும் பிற உரிமை கோரல்கள்:

சொத்து பதிவு தகவல்கள் இடம்பெற்றிருக்கும் அரசு இணையதளங்களில் நாம் வாங்கக்கூடிய சொத்து பற்றிய தகவல்களை சரி பார்ப்பதன் மூலம் ஃபிளாட் அல்லது கட்டிடம் அல்லது நிலம் சர்ச்சைக்குரியதாக இருக்கும்பட்சத்தில் பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள்முற்றிலும் தவிர்க்கப்பட்டு விடும்.நிதி பரிவர்த்தனையை முடிப்பதற்கு முன், செய்தித்தாள்களில் நாம் வாங்கக்கூடிய சொத்து பற்றிய பொது அறிவிப்பை வெளியிடலாம்.மூன்றாம் தரப்பு உரிமை கோரல்கள்,ஏதேனும் இருந்தால் ஆரம்பத்திலேயே எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

*ஃபிசிகல் சர்வே மற்றும் சொத்துக்கான அணுகல்:

சொத்தை வாங்குபவர் ஒரு பிசிக்கல் சர்வேயர் வருகையின் மூலம் சொத்தை ஆய்வுசெய்து அதன் பின்னர் வாங்குவது மிகவும் சிறந்ததாகும்.சொத்துப் பத்திரங்களில் குறிப்பிட்ட அளவீடுகளுடன் சர்வேயரின் அளவீடுகள் பொருந்துகிறதா என்பதை முதலில் சரி பார்க்க வேண்டும்.நாம் வாங்கக்கூடிய வீடு, நிலம் போன்றவற்றிற்கான பாதை, சுற்றியுள்ள பகுதிகள், இணைப்புகள் போன்ற பிற பண்புகளை ஆய்வு செய்வதற்கும் சர்வேயரின் வருகை மிகவும் அவசியமானதாக அமைகின்றது.

*தடையில்லா சான்றிதழ்கள் (நோ அப்ஜெக்ஷன் சர்டிபிகேட்):

மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், சுற்றுச்சூழல் துறை, கழிவுநீர் வாரியம், போக்குவரத்து மற்றும் ஒருங்கிணைப்புத் துறை போன்ற பல்வேறு துறைகளால் வழங்கப்படும் பல்வேறு தடையில்லா சான்றிதழ்களின் நகல்களைக் காட்டுமாறு டெவலப்பர்/ விற்பனையாளரிடம் கேட்டு வாங்கி அவற்றைச் சரி பார்க்க வேண்டும்.

*நில விற்பனை ஒழுங்குமுறை ஆணையத்தின் கீழ் உடன்பாடு:

நீங்கள் வாங்கக்கூடிய நிலம் அல்லது வீடானது உங்கள் மாநிலத்தின் ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம்(ஆர்இஆர்எ)இன் கீழ் சொத்து பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதைச் சரி பார்க்கவும்.டெவலப்பருக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் அல்லது புகார்கள், டெவலப்பரால் செலுத்தப்படாத பணம் போன்றவற்றைப் பற்றிய தகவல்களையும் ஆர்இஆர்எ இணையத்தளமானது வழங்குகிறது. முதலீட்டின் தன்மை அதிகமாக இருக்கும் பட்சத்தில் ஃபிளாட் அல்லது சொத்தை வாங்கும்போது கூடுதல் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. அனைத்து சட்ட ஆவணங்களை முறையாக ஆய்வு செய்வதற்கும் முக்கியமான தகவல்களைப் பெறுவதற்கும் தொழில்முறை சட்ட ஆலோசகரை அணுகி ஆலோசனையைப் பெறுவது நல்லது. சொத்தை விற்பவர் அந்த குறிப்பிட்ட சொத்தை தனது அனுபோகத்தில் வைத்திருக்கின்றாரா என்பதை உறுதி செய்துக்கொள்ள வேண்டும்.

இதுபோன்று ஒவ்வொரு சிறிய சட்ட அம்சங்களையும் ஆராய்ந்து ஒரு சொத்தை வாங்குவதற்கு சிறிது காலம் தாமதப்பட்டாலும் முறையான ஆலோசனை பெற்று சரியான சொத்தை தேர்ந்தெடுத்து வாங்குவதன் மூலம் மன நிம்மதியைப் பெற முடியும் என்று உறுதியாக நம்பலாம்.

Next Story