தவிர்க்க முடியாத கட்டுமான பொருட்கள்


தவிர்க்க முடியாத கட்டுமான பொருட்கள்
x
தினத்தந்தி 19 March 2022 6:31 PM IST (Updated: 19 March 2022 6:31 PM IST)
t-max-icont-min-icon

தரமான கட்டுமானப் பொருட்களை கொண்டு கட்டப்படும் கட்டிடமானது பல ஆண்டுகள் வலிமையாகவும் உறுதியாகவும்,இருக்கும். எனவே கட்டிடங்களை கட்டும் பொழுது தரமான பொருட்களை தேர்ந்தெடுத்து அவற்றைப் பயன்படுத்த வேண்டும். கட்டிடங்களை கட்டுவதற்கு சிமெண்ட்,மரம், இரும்பு, மணல் மற்றும் ஜல்லி, செங்கல், கண்ணாடி போன்றவை தவிர்க்கமுடியாத பொருட்களாக இருக்கின்றன.

சிமெண்ட்

சிமெண்ட் என்பது அனைத்து ஆர் சி சி வகை கட்டுமானத்திற்கும் அடிப்படையான பொருளாகும்.அடித்தளம், தூண்கள், நெடுவரிசை மற்றும் ஸ்லாப் போன்ற கட்டமைப்புகளுக்கு தரமான சிமெண்ட்டை பயன்படுத்துவது அவசியமாகும்.எங்கெல்லாம் வலிமையான கட்டமைப்பு தேவையாக இருக்கின்றதோ அங்கெல்லாம் தரமான சிமெண்ட்டை பயன்படுத்துவதே சிறந்ததாகும்.கொத்து வேலை, பிளாஸ்டர் அல்லது டைலிங் போன்ற பிற வேலைகளுக்கும் சிமெண்ட் இன்றியமையாத கட்டுமானப் பொருளாக உள்ளது.

இரும்பு

கட்டிடத்திற்கு வலிமையைக் கொடுக்கும் மற்றொரு முக்கியமான பொருள் இரும்பாகும்.கூடுதல் இழுவிசை வலிமை, நிலநடுக்கம் மற்றும் அரிப்பைத் தடுக்கும் பண்புகளைக் கொண்டிருப்பதால் கட்டுமான வேலைகளுக்கு கையாள்வதற்கு எளிதாக இருக்கும் சிறந்த தரமான இரும்புக் கம்பிகள் பயன்படுத்தப் படுகின்றன.

மணல் மற்றும் ஜல்லி

மணல் மற்றும் ஜல்லி, சரளை ஆகியவை ஆற்றின் படுகைகள், கடற்கரைகள் மற்றும் ஏரியின் கரைகளில் காணப்படும் இயற்கையான பொருள் ஆகும். இவை கான்கிரீட் கலவையின் இன்றியமையாத பொருளாக இருக்கின்றது.எனவே சிமெண்ட்டும், மணலும் இல்லாத கட்டமைப்பே இல்லை என்று சொல்லலாம். வீட்டின் உட்புறக் கட்டமைப்புக்கு மட்டுமல்லாமல் வீட்டின் வெளிப்புறம் நிர்மாணிக்கப்படும் லேண்ட் ஸ்கேப்பிங் மற்றும் வெளிப்புறக் கட்டமைப்பிற்கும் மணலானது பயன்படுத்தப்படுகின்றது.

செங்கற்கள்

ஆர் சி சி கட்டமைப்புகளில் மற்றொரு அடிப்படையான பொருள் செங்கல் ஆகும்.கட்டுமானத் தேவைகளுக்கு ஏற்ப இவை பல்வேறு வகைகள், வடிவங்கள் மற்றும் அளவுகளில் கிடைக்கின்றன.பல ஆண்டுகளாக கட்டுமானத்தில் செங்கற்களைப் பயன்படுத்தி வருகிறார்கள்.இதிலும் களிமண்ணாலான செங்கல், கான்கிரீட் செங்கல் என பல வகைகள் உள்ளன.

கண்ணாடி

நீண்டகால மற்றும் மிக வலிமையான பொருட்களுடன், ஒரு கட்டிடத்தின் தோற்றப்பொலிவுக்காக மிகவும் கவனத்துடன் கையாளக்கூடிய கண்ணாடியையும் பயன்படுத்துகிறார்கள். கண்ணாடியில் வண்ண வண்ண டிசைன்கள் செய்யப்பட்டு கதவுகள், ஜன்னல்கள் மற்றும் பிரிவினை பகுதியாக சுவர்களின் மேல் வைக்கப்பட்டு கண்ணாடிகள் பயன்படுத்தப்படுகின்றன. அதிலும் குறிப்பாக பல வீடுகளில் அலமாரிக்கதவுகள் கண்ணாடியில் செய்யப்பட்டிருப்பதை பார்க்கலாம்.கட்டுமான பணிகளில் எளிதில் உடையாத பலம் கொண்ட கண்ணாடிகளை பயன்படுத்துகிறார்கள்.ஃப்ராஸ்டட் கிளாஸ் ,கலர்டு கிளாஸ் மற்றும் எட்ச்சிட் கிளாஸ் போன்றவை வலிமையான கண்ணாடிகளாக கட்டுமானத்தில் பயன்படுத்தப்படுகின்றன.

மரம்

பல நூற்றாண்டுகளாக கட்டுமானத்தில் மரம் முதன்மையான கட்டுமானப் பொருளாக இருந்து வருகிறது. ஆர் சி சி கட்டுமானத்தில் கதவுகள், ஜன்னல்கள் மற்றும் அலங்காரத்திற்காக மரம் பயன்படுத்தப்படுகிறது.பயன்பாடு எதுவாக இருந்தாலும் வலிமையான, வயது அதிகமான மரங்களைப் பயன்படுத்தும் பொழுது கரையான் சிகிச்சை செய்து பயன்படுத்துவது சிறந்தது.இன்றளவும் பல வீடுகளில் உறுதியான மர அலமாரிகள் அமைப்பதை பார்க்கமுடியும்.

பிளாஸ்டிக்

ஒவ்வொரு கட்டிடத்திலும் பிளாஸ்டிக்கானது குழாய்கள் மற்றும் தாள்கள் வடிவில் பயன்படுத்தப்படுகின்றது.இது மிகவும் பயனுள்ள மற்றும் பல்துறை பொருளாக இருப்பதால் அனைத்து கட்டுமானங்களிலும் இன்றியமையாத பொருளாக பயன்படுத்தப்படுகிறது.

மேலே குறிப்பிட்டவை மட்டுமல்லாமல் ஒவ்வொரு நாளும் புதிது புதிதான பொருள்கள் கட்டுமானத்தில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகக் கருதப்படும் பொருட்களை இப்பொழுது கட்டுமானத்தில் பயன்படுத்துவதை மக்கள் பெரிதும் விரும்புகிறார்கள்.

Next Story