அழகான வீடுகளுக்கு ஏற்ற விதவிதமா போர்டிகோ டிசைன்கள்


அழகான வீடுகளுக்கு ஏற்ற விதவிதமா போர்டிகோ டிசைன்கள்
x
தினத்தந்தி 30 April 2022 4:12 PM GMT (Updated: 30 April 2022 4:12 PM GMT)

ஒரு வீடு, எவ்வளவு பெரிய வீடாக இருந்தாலும், சரி அதன் முகப்பு தான் அந்த வீட்டிற்கு அழகையும் கம்பீரத்தையும் கவர்ச்சியையும் கொடுக்கக்கூடியது. அந்தவகையில் வீட்டின் முன்புறம் அமைக்கப்படும் போர்டிகோ என்பது அந்த காலம் தொட்டு வீடுகளின் அழகை பலவிதமான முறைகளில் மேம்படுத்திக் கொடுக்கக்கூடிய பல கட்டுமான டிசைன்களை உள்ளடக்கி வந்துள்ளது.

போர்டிகோ என்பது வீட்டின் முகப்பில் மேற்கூரையும் சுற்றிலும் தூண்கள் கொண்ட ஒரு அமைப்பு என்பதாகும். இது சிறிய அளவில் இருந்து மிகப்பெரிய அளவில் வரை அமைக்க கூடியதாக இருக்கும். வீட்டிற்கு வரும் விருந்தினர்கள் அல்லது வெளி ஆட்கள் எடுத்தவுடன் வீட்டின் உள்ளே நுழைந்து விடாமல் கதவு திறக்கும் வரை காத்திருக்க கூடிய இடமாக இருப்பதால், இந்த இடத்தை பொலிவுடன், பராமரிக்க சுலபமான முறையில் அமைக்கப்படும். இங்கு நின்று கொண்டு தான் வீட்டின் அழைப்பு மணியை ஒருவர் உபயோகிக்க வேண்டும் என்பதால் அங்கு வரவேற்பு அம்சங்கள் இருப்பதும் முக்கியமானதாக கருதப்படுகிறது.

சரி! போர்டிகோ அமைப்பதில் எத்தனை விதமான டிசைன்கள் இருக்கிறது என்று பார்ப்போம்.

அரைவட்ட போர்டிகோ : இது பெரிய அளவிலான வீடுகளின் முன்புறமாக அரை வட்ட வடிவில் தரைதளமும் மேற்கூரையும் அமைக்கப்படும். அந்த அறை வட்டத்தை சுற்றிலும் தூண்கள் இடைவெளிவிட்டு அமைக்கப்படும். இந்த அரைவட்ட கூரையின் மேற்பகுதியில் அழகான ஜாலி அல்லது கிரில் வைக்கப்பட்டு மேல்தளம் இருக்கும்.

காலம் ஹவுஸ் போர்டிகோ டிசைன்: இது சதுர வடிவில் இருக்கக்கூடிய ஒரு வெளிப்புற அமைப்பு. இரண்டு புறங்களிலும் இரட்டை தூண்கள் அமைக்கப்பட்டிருக்கும். வீட்டின் முன்புற கதவில் இருந்து சன்ஷேட் போல பெரிய அளவில் முன்புறமாக நீண்டிருக்கும் கூரையிலிருந்து இரண்டு புறங்களிலும் இரண்டு தூண்கள் அமைக்கப்பட்டு இருப்பதே இந்த டிசைன் ஆகும். இதற்கு ரோமன் காலம் என்று அழைக்கப்படும் தூண்களை கொடுக்கும்போது மிகவும் அழகாக காட்சியளிக்கும்.

என்க்ளோஸ்ட் போர்டிகோ: சில போர்டிகோகளை சிறிய ஒரு அறை போல அமைத்து, அந்த அறையின் மூன்று புறங்களிலும் பெரிய அளவிலான பிரென்ச் விண்டோஸ் என்று அழைக்கப்படும் நீளமான ஜன்னல்களை வைத்து, காற்றோட்டமாகவும் வெளிச்சம் உள்ளதாகவும் அமைக்கப்படும் போர்டிகோகளும் அழகாகவே இருக்கும். என்க்ளோஸ்ட் போர்டிகோ என்பது இந்த வகை போர்டிகோ ஆகும்.

டிரைவ் - வே போர்டிகோ டிசைன்: இது பொதுவாக வீட்டின் முன்புறம் இருக்கும் ஒரு பகுதியாக பெரிய அளவில் இருக்கும். இதன் முன் புறங்களில் தூண்கள் அதிக இடைவெளியில் அமைக்கப்பட்டிருக்கும். இங்கு கார், இருசக்கர வாகனங்களை நிறுத்தி கொள்ளக்கூடியதாக இந்த போர்டிகோ இருக்கும். வீட்டுடன் சேர்ந்து அழகான கார்களை பார்க்கும் பொழுது அந்த வீட்டிற்கு ஒரு தனி கம்பீரத்தை இந்த போர்டிகோ டிசைன் கொடுக்கிறது.

போர்டிகோகளுக்கு மேற்புற கூரைகளை விதவிதமாக அலங்கரிக்கலாம். சிலர் மேற்புற கூரையை கூம்பு வடிவத்தில் டெரகோட்டா டைல்ஸ் வேய்ந்து அழகாக வடிவமைக்கிறார்கள். ஒருசிலர் போர்டிகோவின் மேற்கூரை மீது ரெயிலிங் அல்லது ஜாலி அல்லது கிரில்களை அமைத்து ஒரு சிட்அவுட் போல அதை முதல் தளத்தில் பயன்படுத்துகிறார்கள். மேலும் சிலர் போர்டிகோவில் தூண்களை ஒரு ஆர்ச் போல் அமைத்து அதன்மேல் பெர்கோலா டிசைன்களை அமைத்தோ அல்லது வெறும் கூரை வேய்ந்தோ அழகு செய்கிறார்கள்.

Next Story