முப்பரிமாண அச்சு வீடுகள்


முப்பரிமாண அச்சு வீடுகள்
x

பல தொழில்நுட்பங்கள் வளர்ந்து வரும் இக்காலகட்டத்தில் 3டி பிரிண்டிங் மூலம் கட்டப்படும் வீடுகள் புதிய திருப்புமுனையாக உள்ளது. இவ்வகை 3டி பிரிண்ட்கள் எதிர்காலத்தில் கட்டுமான பணிகளில் புதிய தாக்கத்தை உருவாக்குவதுடன் நல்ல மாற்றத்தையும் உருவாக்கும்.

மூன்று பரிமாணங்களில் அச்சிடும் இயந்திரங்கள் மூலம் காலணி முதல் கார் வரை தயாரிக்கலாம். இந்த புதிய தொழில்நுட்பம் தான் நமது எதிர்கால உலகில் மாற்றத்தை உருவாக்க போகிறது. 3D முறையில் அச்சிடும் இயந்திரத்தை 3டி பிரிண்டர் என்று கூறுகின்றனர்.

இதில் 3டி முறையில் அச்சிடப்பட வேண்டிய பொருளின் முப்பரிமாண வடிவத்தை கம்ப்யூட்டரில் CAD (Computer Aided Design) என்ற மென்பொருள் உதவியோடு கம்ப்யூட்டரில் வரையப்பட்ட இந்த 3D மாடலிங் வடிவத்தை டிஜிட்டல் கோப்பு என்கிறார்கள்.

அடுத்து இந்த டிஜிட்டல் கோப்பு முப்பரிமாணத்தில் அச்சிடும் இயந்திரத்திற்குள் அனுப்பப்படுகிறது. அந்த இயந்திரம், டிஜிட்டல் கோப்பில் உள்ள 3D மாடலிங் வடிவத்தை நிஜமான பொருளாக உருவாக்குகிறது.

பிளாஸ்டிக், கண்ணாடி உலோகம், பாலிமர், மெழுகு, சாக்லேட், கேக் முதல் இடுப்பு எலும்பு இணைப்பும், முழங்கால் எலும்பு இணைப்பு வரை அச்சடிக்கலாம். மருத்துவத்துறையில் மாத்திரைகள் அச்சடிக்கவும் பயன்ப்படுகின்றன. ராணுவக் கருவிகள் உபகரணங்கள் உருவாக்கத்திலும் முக்கிய பங்கு வகிக்கிறது.

பிரிண்டரில் மை இருப்பதுபோல முப்பரிமாண அச்சு இயந்திரத்தில் பாலிஅசிட்டைட், அக்ரைலோ நைட்ரைல் ப்யூடாடின் ஸ்டைரின் உள்ளிட்ட பாலிமர் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. சூடாக்கி உருக்கப்பட்ட இந்த பாலிமரைக் கொண்டு வடிவமைக்க நினைக்கும் பொருளின் தோற்றத்தை அடுக்கடுக்காக வரைவதின் மூலம் முழுப்பொருளும் உருவாக்கப்படும்.

முப்பரிமாண வீடுகள் 3D அச்சு பொறிகளால் உருவாக்கப்படுகிறது. இவ்வகை வீடுகள் மலிவான விலையில் கிடைக்கிறது. 3டி பிரிண்டிங் மூலம் கட்டப்படும் வீடுகளால் கட்டுமான நிறுவனங்கள் லாபத்தை அடைவதுடன் கட்டடங்கள் கட்டுவதற்கு எளிதாகவும் சுலபமாகவும் உள்ளது. கட்டுமான பணிகள் செய்ய ஆகும் கால அளவையும் குறைக்கிறது.

இந்த முப்பரிமாண கட்டிட வளர்ச்சி எதிர்காலத்தில் ரியல் எஸ்டேட்டில் முன்னேற்றத்தை ஏற்படுத்துகிறது. 3டி பிரிண்டிங் மலிவு விலையில் வீடுகளை உருவாக்கிறது.

முப்பரிமாண அச்சுப்பொறிகள் அடுக்கு மாடி கட்டிடங்கள் உருவாக்கவும் உதவுகிறது. முப்பரிமாண அச்சுப்பொறிகளே விலை உயர்ந்தவையாக இருந்தாலும், பாரம்பரிய கட்டுமான செயல்முறைகளை விட இந்த தொழில்நுட்பம் மலிவானதாகக் கருதப்படுகிறது.

பொருள் பற்றாக்குறை, பணியாளர் பற்றாக்குறை, வானிலை சிக்கல்கள், தளவாடச் சிக்கல்கள், திறமையான தொழிலாளர்கள் கிடைப்பது போன்ற இடர்பாடுகளை தவிர்க்கலாம். குறைந்தபட்ச தொழிலாளர்கள் கொண்டு ஒரு சிறிய வீட்டை 3D பிரிண்டிங்கில் அச்சிடலாம்.

வளரும் நாடுகளில் அங்கு வாழும் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட குடிமக்களுக்கு மலிவாகவும் விரைவாகவும் முப்பரிமாண வீடுகளை அமைத்து தரலாம்.

சாதாரணமாக கட்டும் கட்டுமான பணிகளை ஒப்பிடும் பொழுது இது மிகவும் வசதியானதாக உள்ளது. 3டி பிரிண்டிங் கட்டுமானத்திற்கு குறைந்த இட வசதியும் வளங்களும் போதுமானது.

அதிக இடவசதிக்காக மரங்களை வெட்டுவதற்குப் பதிலாக, பிரிண்டிங் மூலம், குறைந்த வசதியான இடத்தில் கட்டலாம். எந்த பகுதியிலும் எளிதாக கட்டி வேறு இடத்திற்கு மாற்றலாம். மேலும், தாமதப்படுத்தாமல் விரைவில் வீடுகளை உருவாக்கலாம்.

ஆஃப்சைட் கட்டுமானம் கட்டுமான தளத்தில் கழிவுகளை குறைக்க உதவும். கட்டுமான குழப்பங்களை குறைக்கிறது.உலகம் முழுவதும் பல 3டி அச்சிடப்பட்ட வீடுகள் பெருகி வருகிறது.

ஒரு மாடி கட்டிடம் முதல் பெரிய வளாகங்கள் வரை 3D பிரிண்டர்கள் மிகப்பெரிய திட்டங்களை நிறைவேற்றி உள்ளது. ரியல் எஸ்டேட் துறையை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும் முக்கிய தொழில்நுட்பங்களில் ஒன்றாக இப்முப்பரிமாண கட்டுமானங்கள் அமையும்.

உலகை ஆளப்போகும் தொழில்நுட்பங்களில் 3டி பிரிண்டிங்கும் ஒன்றாகும். தனியார் மற்றும் அரசுத் துறைகளில் வரும் காலங்களில் முப்பரிமாண அச்சுத்துறை பெரும் பங்கு வகிக்கும். இது வளர்ந்து வரும் துறை என்பதால் சுய தொழில் வாய்ப்புகளும் அதிகரித்து உள்ளன.

3டி பிரிண்டிங் தொழில்நுட்பத்தின் உதவியுடன் பல முன்னேற்றங்களும் மற்றும் ரியல் எஸ்டேட் மாறுபட்ட புதிய இலக்கையும் அடைய போகிறது.


Next Story