கட்டுமானத்துறையின் வரப்பிரசாதம் ப்ரீகாஸ்ட் டெக்னாலஜி


கட்டுமானத்துறையின் வரப்பிரசாதம் ப்ரீகாஸ்ட் டெக்னாலஜி
x

21 ஆம் நூற்றாண்டில் கட்டுமான துறை பலவிதமான முன்னணி தொழில்நுட்பங்களை கையாண்டுபிரம்மாண்டமான முறையில் வளர்ந்து வந்துள்ளது யாவரும் அறிந்ததே. இதில் முக்கியமான பங்கு பிரீகாஸ்ட் டெக்னாலஜி என்ற ப்ரீகாஸ்ட் கான்கிரீட் டெக்னாலஜி என்றும் அழைக்கப்படும் இந்த புதிய தொழில்நுட்பமே.

கட்டுமானத்துறையில் ப்ரீகாஸ்ட் டெக்னாலஜி வந்த பிறகு கட்டுமான துறையின் வேகமும் சிக்கனமும் மிக அதிக அளவில் வளர்ந்து வந்தது குறிப்பிடத்தக்கது. இது முதன் முதலில் வடக்கு ஐரோப்பிய நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்டு பின்பு உலகம் முழுவதும் பரவி வந்தது. இந்த ப்ரீ காஸ்ட் டெக்னாலஜி முறையில் பெரிய கட்டுமான கான்கிரீட் பலகைகள், டைல்ஸ், ஜன்னல்கள், கதவுகள் என்று அனைத்துமே கட்டுமானத்தின் தேவைக்கேற்ப ஓரிடத்தில் முன்கூட்டியே தயாரிக்கப்பட்டு அது கட்டுமான இடத்தில் கொண்டு வந்து பொருத்தப்படுகிறது. இதனால் இந்த கான்கிரீட் கூரைகள். டைல்கள். ஜன்னல். கதவு போன்றவற்றை கட்டுமானம் செய்யும் இடத்திலேயே தயாரிக்க ஆகும் செலவை விட மிகக் குறைந்த அளவு செலவே இதற்கு தேவைப்படுகிறது. இது முழுக்க முழுக்க கணினியின் உதவியுடன் செய்யப்படும் பொறியியல் தொழில்நுட்பம் ஆகும். கட்டுமானத்தின் செலவை கணிசமான அளவு குறைப்பதுடன் பொருட்கள் வீணாவதையும் தடுக்கிறது. இப்படி தயாரிக்கப்படும் பொருட்கள் மிக துல்லியமான அளவுகளில் கிடைப்பது மேலும் தேவையற்ற உடல் உழைப்புகளை குறைக்கவும் உதவுகிறது.

ஒரு கட்டிடத்தில் மேல் கூரை சுவர்கள் ஜன்னல் மற்றும் கதவுகள் அமைக்க தேவைப்படும் கான்கிரீட் பிலின்த் பீம்கள்,, தூண்கள் தரை அமைக்கப்பட பயன்படும் டைல்கள் என்று அனைத்துமே துல்லியமான அளவுகளில் ஆயத்த முறையில் தயார் செய்யப்பட்டு அது கட்டிடத்தில் சுலபமாக பொருத்தப்படுகிறது.

ப்ரீகாஸ்ட் தொழில்நுட்பத்தின் அனுகூலங்கள்

1. ப்ரீ காஸ்ட் கான்கிரீட் பொருட்கள் மிகவும் வலிமையானதாகவும் துல்லியமான அளவுகளிலும் இருப்பதால் இதை கையாள்வது மிகவும் சுலபமாகவும் எளிமையாகவும் இருக்கிறது. மேலும் கட்டுமான இடத்தில் கூடுதலாக சப்போர்ட்டுகள் அமைக்க வேண்டிய அவசியமும் இல்லாமல் இருக்கிறது.

2. ப்ரீகாஸ்ட் தொழில்நுட்பத்தின் மூலம் 10 முதல் 15 சதவிகித கட்டுமான செலவு குறைகிறது என்பது வரவேற்க வேண்டிய ஒன்றாக உள்ளது. இது உயரமான கட்டிடங்கள் குறைவான தளங்கள் கொண்ட வில்லாக்கள், வணிக வளாகங்கள், வாகன நிறுத்துமிடங்கள் என்று பல கட்டுமான பணிகளுக்கும் பொருந்தக்கூடிய தொழில்நுட்பமாக இருக்கிறது. இந்த ப்ரீகாஸ்ட் டெக்னாலஜியில் கான்கிரீட் ஊற்றப்படுவதற்கு முன்பாகவே எலக்ட்ரிக்கல், பிளம்பிங், டிவி மற்றும் டெலிபோன்களுக்கான இடம் வைக்கப்படுகிறது. இவற்றை கணினி சரியான முறையில் கண்காணித்து கட்டுப்படுத்துகிறது. எனவே கட்டுமானத்தில் சிக்கனம் என்பது கிடைக்கிறத

3. சுற்றுச்சூழலுக்கு உகந்தது: தீ, இயற்கை சீற்றங்கள், பூச்சிகளின் தொல்லை,போன்றவை இந்த ப்ரீகான்கிரீட் கட்டுமானங்களில் தவிர்க்கப்படுகிறது. இது மழை, காற்று, பூகம்பம், கரையான், போன்றவற்றை எதிர்க்க உதவுவதால் இதற்கு பராமரிப்பு செலவும் மிகவும் குறைவாகவே தேவைப்படுகிறது

4. இந்த ப்ரீ காஸ்ட் டெக்னாலஜியில் உபயோகப்படுத்தப்படும் கான்கிரீட் சுற்றுச்சூழலின் தட்பவெட்பத்திற்கு மிக நிதானமாக எதிர்செயல் புரிவதால் அதிகப்பட்ச சூட்டையும் குளிர்ச்சியையும் மிக நிதானமாகவே எடுத்துக் கொள்கிறது. இதனால் கட்டுமானத்தின் சூட்டை குறைக்கும் கூட்டும் செயல்பாடுகளுக்கான செலவுகளும் குறைகிறது.

5. வைஃபை இணக்கம் கொண்ட தொழில்நுட்பம் தற்போதைய காலங்களில் தகவல் பரிமாற்ற தொழில்நுட்பம் வீடுகள் அலுவலகங்கள் என்று எல்லா இடங்களிலும் மிகவும் தேவையான அத்தியாவசியமான ஒன்றாகி விட்டது. இந்த நிலையில் இந்த ப்ரீகாஸ்ட் கட்டிடங்கள் ரேடியோ சிக்னல் வைஃபை மற்றும் இன்டர்நெட் நெட்வொர்க் போன்றவற்றின் செயல்பாடுகளுடன் ஒத்துப் போகிறது.

6. நீடித்த வலிமை இந்த ப்ரீகாஸ்ட் கான்கிரீட் கட்டுமானங்கள் எடை குறைவாக இருப்பதால் இவற்றை உபயோகப்படுத்தப்படும் கட்டுமானங்களுக்கு ஆழமான கடைகால்கள் தேவையில்லை. இதன் எடை குறைவாக இருந்தாலும் இதன் வலிமை குறைவானது அல்ல. சரியான முறையில் இந்த கட்டுமானங்களை நிறுவும் பொழுது இவை எடையை குறைத்து, கட்டுமானங்களுக்கு அதிக வலிமையை சேர்ப்பதால் 80 தளங்கள் வரையில் கூட சுலபமாக கட்டுமானங்களை வலிமையாக கட்ட முடிகிறது.

7. இந்த தொழில்நுட்பம் அதிர்வுகளை குறைவாகவே கடத்துகிறது. எனவே திறந்த வெளியாக உள்ள ஹால்கள் போன்றவற்றிலும் கூட அதிக மக்கள் வந்து போவதால் ஏற்படும் அதிர்வுகளை இது சுலபமாக தாங்கிக் கொள்கிறது.


Next Story