உள்ளம் கொள்ளை கொள்ளும் வாசனை இல்லங்களுக்கு தேவை


உள்ளம் கொள்ளை கொள்ளும் வாசனை இல்லங்களுக்கு தேவை
x

சிறிய வீடாக இருந்தாலும், பெரிய பங்களாவாக இருந்தாலும், வீடு என்பது எவ்வளவு அழகாக இருந்தாலும், அதற்குள் அமைந்துள்ள அறைகளுக்குள் நல்ல வாசனை இருந்தால் தான் அனைவரையும் அது கவரக்கூடியதாக அமையும்.

நல்ல வீட்டு பயன்பாட்டுப் பொருட்களும் அழகான, புதுமையான அலங்காரங்களும் மட்டுமே ஒரு சிறந்த வீட்டிற்கான நல்ல தோற்றத்தை அளிப்பதில்லை.

நன்கு வடிவமைக்கப்பட்ட வீடானது அழகான தன்மையுடன் பிறரைக் கவரும் வகையில் அமைந்திருக்க வேண்டும். ஒரு வீட்டை பிறர் ஈர்க்கும் வகையில் வைப்பதற்கு வாசனை என்பது முக்கியம். வீட்டின் உள் அலங்காரத்தில் குறிப்பிடத்தக்க அம்சமாக சொல்லப்படுவது 'ரூம் பிராக்ரன்ஸ்' என்ற வாசனை பொருட்கள் பயன்பாடு ஆகும்.

எப்படிப்பட்ட வாசனைப் பொருட்களைப் பயன்படுத்தினாலும், அந்த இடத்தில் காற்றோட்டம், வெளிச்சம் இருக்க வேண்டியது அவசியம். எவ்வளவு சிறப்பான நறுமணப் பொருளாக இருந்தாலும், இயற்கையான வெளிச்சமும், காற்றோட்டமும் இல்லாத இடத்தில் பயன்படுத்தினால் எந்தப் பலனும் இருக்காது. அத்துடன், இந்த நறுமணப் பொருட்கள் அறையில் இருக்கும் கிருமிகளை அழிக்கவும் உதவும்.

ஆயில் டிப்யூஸர்கள்

இல்லங்களை வாசனையாக வைத்துக் கொள்வதற்கு தனிப்பட்ட முக்கியத்துவம் இருக்கிறது. ஆயில் டிப்யூஸர்களில் தண்ணீரை நிரப்பி அதில் நல்ல மணமுடைய வாசனை திரவியத்தை கொஞ்சம் கலக்கவேண்டும். பின்னர், அவற்றை திறந்து வைத்தால் அவை காற்றோடு கலந்து வீடு முழுவதும் வாசனை பரவும்.

ஆயில் டிப்யூஸர்கள் இல்லையென்றால் ஸ்பிரே பாட்டில்களில் தண்ணீரை நிரப்பி அதில் 5 மில்லி அல்லது 10 மில்லி வரை நல்ல மணமுடைய வாசனை திரவியத்தைக் கலந்து வீடுகளில் ஸ்பிரே செய்யலாம். ஸ்பிரே செய்தவுடன் மின் விசிறியை ஓடவிட்டால் வாசனை விரைவாகப் பரவி வீடு முழுக்க வாசனை நிரம்பும். சுற்றுப்புறத்தில் உள்ள கெட்ட வாடைகள் வீட்டிற்குள் பரவும் சமயங்களில் இந்த முறையை கடைபிடிக்கலாம்.

'ரூம் ஸ்பிரேயர்' பயன்படுத்தி திரைகள், பெட், புளோர் மேட் ஆகியவற்றின் மீது வாசனை திரவத்தை ஸ்பிரே செய்து விடுவது வழக்கம். அதை தவிர வீட்டை வாசனையாக வைத்துக்கொள்ள பயன்படுத்தப்படுன் வழிமுறைகள் பற்றி இங்கே பார்க்கலாம்.

வாசனை மெழுகுவர்த்திகள்

வரவேற்பறை, சமையலறை ஆகிய இரண்டு அறைகளும் வாசனை மெழுகுவர்த்திகளைப் பயன்படுத்துவதற்குச் சிறந்தவை. நீண்ட நேரம் அறையில் வாசம் தங்க வேண்டுமென விரும்பினால், வாசனை மெழுகுவர்த்தியைக் குறைந்தது மூன்று மணி நேரமாவது எரியவிட வேண்டும். மெழுகுவர்த்தி உருக உருக அறையில் வாசனை பரவத் தொடங்கும். வீட்டில் அதிகமான நேரத்தை எந்த அறையில் செலவிடுகிறோமோ, அந்த அறையில் வாசனை மெழுவர்த்திகளைப் பயன்படுத்துவது சிறந்தது.

வீடுகளில் லாவண்டர் வாசனையே பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. சிட்ரஸ் அமிலம் நிறைந்த எலுமிச்சை மற்றும் திராட்சை சுவை கொண்ட திரவங்களும் வீடுகள் உள்ளிட்ட வர்த்தக நிறுவனங்களில் பயன்படுத்தப்படுகின்றன.

மின் விளக்கு மூலம் வாசனை

வீடுகளில் மின் விளக்குகள் இருந்தால் அதைப் பயன்படுத்தி வீட்டுக்குள் வாசனையை பரவச்செய்யும் வழியும் சில இடங்களில் இருக்கிறது. அதாவது, மின் விளக்குகளை அணைத்துவிட்டு வென்னிலா மணமுடைய வாசனை திரவத்தை விளக்குகளின் கீழ்ப்புறம் பூசப்படுகிறது. பின்னர் விளக்குகளை ஆன் செய்தால் விளக்குகள் சூடேறும்போது வாசனை அறை முழுவதும் பரவும். இந்த முறையை பல தங்கும் விடுதிகளிலும் பின்பற்றி வரப்படுகிறது.


Next Story