சுற்றுச்சூழல் பாதுகாப்பு வீட்டுக்குள்ளிருந்து தொடங்க வேண்டும் !


சுற்றுச்சூழல் பாதுகாப்பு வீட்டுக்குள்ளிருந்து தொடங்க வேண்டும் !
x

வாகனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் தவிரவும் குடியிருக்கும் வீடுகள், அலுவலகங்கள் ஆகியவற்றின் மூலமாக சத்தமில்லாமல் காற்று மண்டலத்தில் சேருகின்ற மாசு காரணமாக பல்வேறு ஆரோக்கிய குறைபாடுகள் ஏற்படுவதை நிபுணர்கள் கண்டறிந்துள்ளார்கள். உலக நாடுகள் அனைத்திற்கும் முக்கியமான பிரச்சினையாக "பொல்யூஷன்" எனப்படும் காற்று மாசு இருந்து வருகிறது. கிராமங்களை விடவும் பெருநகரங்கள்தான் காற்று மாசு பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதாக அவர்கள் குறிப்பிடுவது கவனிக்கத்தக்கது.

சமையலறையிலிருந்து வெளியாகும் புகை, ஹாலில் இருக்கும் தொலைக்காட்சி பெட்டியிலிருந்து வெளிப்படும் "சவுண்ட் பொல்யூஷன்", கழிவு நீர்க்குழாய்களிலிருந்து வெளிப்படும் "பொல்யூஷன்", "ரெப்ரிஜிரேட்டர்" மற்றும் "ஏ.சி" என்று ஓசைப்படாமல் காற்றில் மாசு கலந்து கொண்டிருப்பதை வல்லுனர்கள் "இண்டோர் பொல்யூஷன்" என்கிறார்கள்.

"ரெப்ரிஜிரேட்டர்" மற்றும் ஏ.சி ஆகியவற்றின் மூலமாக வெளியாகும் "கார்பன்" வகை வாயுக்களும் ஆரோக்கிய குறைவை உண்டாக்குகின்றன. அதனால் சமையலறை உள்ளிட்ட எல்லா அறைகளையும் நல்ல காற்றோட்ட வசதியுள்ளதாகவும் சுத்தமானதாகவும் வைத்திருப்பது அவசியம். மின் சாதனங்களை தேவைப்படும்போது மட்டும் பயன்படுத்த வேண்டும்.

கரப்பான் மற்றும் சிறிய வகை பூச்சிகளை அழிக்கவும், குளியலறை சுத்தத்துக்காகவும் பல்வேறு ரசாயனங்களை பயன்படுத்துவது வழக்கத்தில் இருந்து வருகிறது. அவற்றில் இயற்கையான பொருட்களை விடவும் செயற்கையான பொருட்கள் அதிகமாக இருக்கின்றன. அடிப்படையான சுகாதார வழிகளையும், குளியலறை மற்றும் கழிவறை ஆகியவற்றில் இயற்கையான பொருட்களையும் பயன்படுத்துவதால் பல பிரச்சினைகள் தீர்ந்து விடும். காற்று மாசு பெரிய சிக்கலாக மாறியிருக்கும் இந்த காலகட்டத்தில் வீடுகளுக்கு உள்ளேயிருந்து சுற்றுச்சூழல் பாதிப்பை தவிர்க்க முயற்சிப்பது நல்ல வழியாக இருக்கும்.

இல்லத்தரசிகள் தங்களது பெரும்பாலான நேரத்தை செலவிடும் அறையான சமையலறையில் உருவாகும் காற்று மாசுகளால் ஆரோக்கியக்குறைவு ஏற்படக்கூடிய வாய்ப்புகள் இருப்பதை நிபுணர்கள் எச்சரிக்கை செய்கிறார்கள். பழைய காலங்களைப்போல புகை மண்டலத்தை உண்டாக்கும் விறகு அடுப்பு உபயோகம் இப்போது இல்லை. தற்போது எல்லா வீடுகளிலும் சமையல் பணிகளுக்கு பெட்ரோலிய எரிவாயு பயன்படுத்தப்படுகிறது. பெட்ரோலிய வாயு இயல்பில் வாசனைகளற்றது. அதனுடன் கலக்கப்படும் பொருள்தான் வாசனையை உண்டாக்குவதோடு ஒவ்வாமையையும் ஏற்படுத்துகிறது.

வீட்டு பராமரிப்பில் வழக்கமான பயன்பாட்டில் உள்ள திரவ வடிவ "கிளீனர்கள்" அனைத்திலும் உடலுக்கு பாதிப்பு தரும் ரசாயனங்களின் கலப்பு உள்ளது. அதன் வாசனை அல்லது தொடர்பு ஆகியவற்றின் வாயிலாகவும் ஆரோக்கிய பாதிப்பு உண்டாகலாம். எல்லா இடங்களிலும் இருக்கும் கொசு விரட்டிகள், மற்ற பூச்சிகளை விரட்டும் "ஸ்பிரேயர்கள்" ஆகியவற்றாலும் பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்புகள் உண்டு. பூச்சிகளை விரட்ட இயற்கையான வழிகளை பயன்படுத்துவதன் மூலமாக ஆரோக்கிய குறைவு உண்டாவதை தவிர்த்து விடலாம்.

குப்பைகளை எரிப்பதால் வரும் புகை, பல்வேறு ரசாயனங்களின் வாடை, கட்டுமான பணிகள் நடக்கும் இடங்களில் உண்டாகும் தூசு போன்றவையும் வீட்டில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. அவற்றின் காரணமாக வீட்டில் இருப்பவர்களுக்கு வரக்கூடிய சாதாரண சளி இருமல் காய்ச்சலாகவும் மாறிவிடக்கூடிய வாய்ப்புகள் உள்ளன. அதனால் வீடுகளுக்கு ஒட்டு மொத்தமான பராமரிப்பு என்பது அவசியமான ஒன்றாகும். வீடுகளில் வளர்க்கப்படும் செல்ல பிராணிகளால் பலருக்கு சுவாச கோளாறுகள் ஏற்படும் வாய்ப்புகள் இருப்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.


Next Story