நிலத்தடி நீர் தொட்டி அமைப்பதற்கான வழிமுறைகள்


நிலத்தடி நீர் தொட்டி அமைப்பதற்கான வழிமுறைகள்
x

ஒரு வீட்டை கட்டும்பொழுது நமக்கு தண்ணீர் சேமிப்பிற்காக இரண்டு தொட்டிகள் தேவைப்படும். ஒன்று நிலத்தடி நீர் தொட்டி. அதாவது நமக்கு மெட்ரோ வாட்டர் அல்லது பஞ்சாயத்து நீரை சேமித்து வைக்கும் நிலத்தடி நீர் தொட்டி அதாவது சம்ப் மற்றும் மேல்நிலை நீர் தொட்டி அதாவது ஓவர் ஹெட் டேங்க். இது இரண்டில் குடிநீரை சேமிக்க முதலில் கட்டப்படுவது நிலத்தடி நீர் தொட்டியான சம்ப் தான். அதை எப்படி அமைக்க வேண்டும் எப்பொழுது அமைக்க வேண்டும் போன்ற பல தகவல்களை இக்கட்டுரையில் காணலாம்.

வீட்டின் கடைக்கால் தோண்டுவதற்கு முன்பாகவே சம்ப் கட்டுவதற்கான இடத்தை தேர்வு செய்து பள்ளம் தோண்டுவது முக்கியம். இதனால் அந்த இடத்தை அகழாய்வு செய்ய உதவும். அடித்தள நிலத்தடி தொட்டியை அமைக்க ஏற்ற இடத்தை தேர்வு செய்யும் பொழுது அது வீட்டின் முன்புறம், சாலைக்கு அருகாமையில் இருக்க வேண்டும். ஏனெனில் சாலையில் நீர் பாதைகள் ஓடுகின்றன. இந்த வழியில் நீர் இணைப்புகளில் இருந்து சம்புக்கு ஒரு குறுகிய இணைப்பு போதுமானது மற்றும் இணைப்புக் குழாயில் சரியான சாய்வை பெறுவது அவசியம். சாலைக்கு அருகாமையில் அடித்தளத்தொட்டி அமைப்பதால் சாலையில் செல்லும் குடிநீர் குழாயில் இருந்து பெரும், இணைப்பு நீளம் குறைவானதாகவும் பிரஷர் அதிகமாகவும் கிடைக்கும். மேலும் அடித்தள தொட்டியை நிரப்புவதற்கு ஒரு தண்ணீர் டேங்கர் வாடகைக்கு அமர்த்தும் பொழுதும் சாலைக்கு அருகில் இருப்பது நன்மை பயக்கும்.

பொதுவாக அடித்தள தொட்டியை அமைக்கும் பொழுது அதை கார் நிறுத்தும் போர்ட்டிக்கோவின் கீழே அமைப்பது வழக்கம். ஏனென்றால் கார் நிறுத்துமிடம் சாலைக்கு அருகாமையில் வீட்டின் முன்புறமாக இருக்கும்.

அடித்தள தொட்டியின் அளவை தீர்மானித்தல்

அடித்தள தொட்டியை திட்டமிடும்போது நீங்கள் அங்கே வசிக்கக்கூடிய மக்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப திட்டமிட வேண்டும். ஒரே ஒரு வீடு இருந்தால் 6000 லிட்டர் முதல் 8000 லிட்டர் கொள்ளளவு கொண்ட தொட்டி போதுமானது. வாடகைக்கு விடும் நோக்கம் உங்களுக்கு இருந்தால் ஒவ்வொரு கூடுதல் வீட்டிற்கும் 4000 முதல் 5000 லிட்டர்கள் கூடுதலாக இருக்கும்படி ஒரு பெரிய தொட்டி கட்ட வேண்டி இருக்கும். இந்த அளவில் அடித்தள தொட்டியை அமைக்கும் பொழுது அது தண்ணீர் பற்றாக்குறை இருக்கும் போதும் பயனுள்ளதாக இருக்கும். இந்த அடித்தள தொட்டியின் ஆழம் பொதுவாக ஐந்தடி என்று வைப்பது வழக்கம். ஒரு மனிதன் சம்பின் உள் நிற்கும்பொழுது மூச்சு திணறலை உணராதவாறு தலையை வெளியே நீட்டிக்கொண்டு நிற்க வேண்டும். அந்த அளவிற்கு ஆழமுள்ள தொட்டியை கட்டுவது நல்லது. அந்த அளவில் பார்த்தோம் ஆனால் ஒரு கன அடி இடத்தில் 28 லிட்டர் தண்ணீர் இருக்கும் என்பதை நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டும். 6000 லிட்டர் கொள்ளளவு இருக்க வேண்டும் என நாம் முடிவு செய்தால் அதை 28 ஆல் வகுத்தால் 215 கன அடி கிடைக்கும் இதுவே பொதுவாக எல்லோரும் விரும்பும் தொட்டியின் அளவு. பின்னர் இந்த எண்ணிக்கையை 5 அடி ஆழத்தால் வகுத்தால் 43 சதுர அடி கிடைக்கும். இப்போது இருக்கும் இடத்துக்கு ஏற்ப சம்பின் நீளம் மற்றும் அகலத்தை நாம் தீர்மானிக்கலாம். இது 4'×11' அல்லது 5'× 8.5'பரிமாணங்களின் செவ்வக வடிவமாக இருக்கலாம். அல்லது 6.5'×6.5' போன்ற பரிமாணங்களுடன் சதுரமாகவும் இருக்கலாம்.

நிலத்தடி தொட்டிக்கு கான்கிரீட் கொண்டு கட்டுவது சிறப்பாக இருக்கும். ஏனென்றால் மண்ணிலிருந்து நிலத்தடி நீர் அல்லது கழிவு நீர் கசிவு ஏற்பட்டு நாம் சேமித்து வைக்கும் நல்ல குடிநீர் மாசுபடலாம். எனவே நீர் கசிவை பற்றி நாம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டி இருப்பதால் கான்கிரீட் கொண்டு இந்த தொட்டியை கட்டுவது நல்லது. செங்கற்கள் போன்றவற்றைக் கொண்டும் சம்புகளை கட்டலாம். ஆனால் இதில் நீர்க்கசிவு ஏற்படலாம் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். செங்கற்களை கொண்டு அடித்தள தொட்டியை கட்டும் பொழுது பூசு வேலை செய்யும் பொழுது பிளாஸ்டிரிங் மேஷ பயன்படுத்துவதை உறுதி செய்து கொள்ளுங்கள். ஏனென்றால் இது விரிசல்களை தவிர்க்க உதவும்.

ஆயத்த பிளாஸ்டிக் தொட்டிகள், சின்டெக்ஸ் போன்ற பிளாஸ்டிக் தொட்டி பல்வேறு அளவுகளில் கிடைக்கும். நாம் அடித்தள தொட்டிக்காக தோண்டிய பள்ளத்தில் கான்கீட்டோ செங்கல் கட்டுமானம் போட்டு பூசு வேலை செய்வதோ இல்லாமல் இந்த பிளாஸ்டிக் தொட்டியை பயன்படுத்துவோரும் உண்டு. ஆனால் பிளாஸ்டிக் தொட்டியில் நீண்ட நாட்கள் தண்ணீர் சேமிப்பது எந்த அளவிற்கு நன்மை பயக்கும் என்பதையும் நாம் பார்க்க வேண்டும். மேலும் கார் நிறுத்தும் இடத்தின் கீழே அடித்தள தொட்டியை அமைக்கும் பொழுது ஒரு காரின் அழுத்தத்தை அந்த பிளாஸ்டிக் தொட்டி தாங்குமா என்பதையும் நாம் பார்க்க வேண்டும்.

அடித்தள தொட்டியை கட்டும் பொழுது அதன் ஓரங்களை 90 டிகிரி கொண்ட ஓரம் கொண்டதாக கட்டுவதை தவிர்த்து வட்டமான மூலைகளை வைத்து கட்டினால் நீரின் அழுத்தம் ஒரு பெரிய பகுதியில் விநியோகிக்கப்பட்டு நீரின் அழுத்தம் குறைவாக இருக்கும். மேலும் டேங்கின் மூலைகளை சுத்தம் செய்வதும் எளிதாக இருக்கும். அடித்தளத் தொட்டியை கட்டி முடித்த பின் வீட்டிற்க்கான அடித்தளத்தை அமைப்பது சிறப்பு.


Next Story