ரசாயனம் குறைந்த பெயிண்ட் வகைகளை தேர்வு செய்வது நல்லது


ரசாயனம் குறைந்த பெயிண்ட் வகைகளை தேர்வு செய்வது நல்லது
x

வீடுகளுக்கு ரசாயனம் குறைந்த பெயிண்ட் வகைகளை தேர்வு செய்வது மிகவும் நல்லது.

குடியிருப்புகள் மற்றும் வர்த்தக கட்டுமானங்கள் ஆகியவற்றின் சுவர்களுக்கான அழகு, பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு ஆகிய அம்சங்கள் முக்கியமானவை. அதன் அடிப்படையில் கட்டுமானங்களின் வெளிப்புறம் மற்றும் உள்புறம் ஆகிய இரு பகுதிகளுக்கும் வெவ்வேறு ரசாயனங்கள் கலக்கப்பட்ட பெயிண்ட் வகைகள் உபயோகிக்கப்படுகின்றன. அவை பயன்படுத்தப்படும் இடங்களின் தன்மைக்கேற்ப வெவ்வேறு ரசாயன தன்மைகளை வெளிப்படுத்துவதாக ஆய்வுகளில் அறியப்பட்டுள்ளது.

கட்டிடங்களின் உள்புற இன்டீரியர் பெயிண்ட் வகைகள் அழுக்குகளை சுத்தம் செய்ய எளிதாக இருக்க வேண்டும். வெளிப்புற எக்ஸ்டீரியர் பெயிண்ட் வகைகள் நிறம் வெளுத்துப் போகாமலும், பூஞ்சை, பாசிகள் போன்றவற்றால் பாதிக்கப்படாத தன்மை கொண்டதாக இருக்க வேண்டும்.

பெயிண்ட் வகைகளில் சேர்மானமாக உள்ள நிறமிகள் (Pigments), கரைப்பான்கள் (Solvents), கூட்டுப் பொருள்கள் (Additives) மற்றும் ரெசின்கள் (Resin) போன்ற ரசாயனங்களின் அடிப்படையில் அவற்றின் பாதிப்பை உருவாக்கும் தன்மைகள் தீர்மானிக்கப்படுகின்றன.

லேட்டக்ஸ் பெயிண்ட் வகையில் தண்ணீர் கரைப்பானாக பயன்படுத்தப்படும். ஆயில் பேஸ்டு பெயிண்ட் வகைகளில் மினரல் ஸ்பிரிட் கரைப்பானாக இருக்கும். அப்போது, பெயிண்ட் பூச்சு உலர்ந்து கரைப்பான்கள் ஆவியாகி விடும் நிலையில் அவற்றின் ரசாயன பொருள்கள் மீதமாகி காற்றோடு கலக்கின்றன.

வெளிப்புற பெயிண்ட் வகைகள் வெப்பம் மற்றும் ஈரப்பதம் ஆகியவற்றை தாங்கி நிற்கும் வகையிலும், உரிந்து போகாமலும், வெப்பத்தால் மங்கி விடாமலும் இருக்க வேண்டும். அதற்காக அவற்றில் சேர்க்கப்பட்ட ரெசின்கள் உள்ளிட்ட இதர கரிமப் பொருள்கள் சிறிய அளவில் எப்போதும் ஆவியாகிக் கொண்டிருக்கும். அதனால் அவை கட்டிடங்களின் உள்புற பயன்பாட்டுக்கு நிபுணர்களால் பரிந்துரைக்கப்படுவதில்லை.

இன்டீரியர் வகை பெயிண்ட் என்பது அவ்வாறு ரசாயனங்களை வெளியேற்றாமல் இருக்கும். அறைகளுக்கு பெயிண்ட் பயன்படுத்தும்போது நல்ல காற்றோட்ட வசதி செய்யப்பட்டு, அதன் ஆவிகல் காற்றில் கலந்து வெளியேறும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும்.

தற்போது நவீன தொழில் நுட்ப முறையில் கட்டமைப்புகளின் உள்புறம் மற்றும் வெளிப்புறம் ஆகிய இரண்டு பகுதிகளிலும் ஒரே தயாரிப்பை பயன்படுத்தும் பெயிண்ட் வகைகள் சந்தையில் கிடைக்கின்றன. விரைவில் ஆவியாகும் கரிமப் பொருள்கள் அவற்றில் குறைவாக உள்ளதால் ரசாயன வாசனை குறைவாக இருக்கும். அதன் அடிப்படையில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாத தொழில் நுட்பத்துடன் அவை தயாரிக்கப்படுவதாக தயாரிப்பாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

எப்போதுமே வீடுகளுக்கு தேர்வு செய்த பெயிண்ட் வகைகளை சாம்பிள் கலர் பெற்று பயன்படுத்தி பார்த்த பின்னர் முடிவு செய்வதே நல்லது. அதனால் பல சிக்கல்களை தவிர்க்க முடியும்.

இருவகை பயன்பாடு கொண்ட பெயிண்டுகளை உட்புற பகுதிகளுக்கு பிரஷ் மூலம் பூசுவதற்கு பதிலாக ரோலர் முறையில் மேற்பூச்சாக பூசலாம். சமையலறைகளுக்கு இவ்வகை ஆயில் பெயிண்ட் அடித்து, அதன் மீது சாட்டின் பினிஷ் (பெயிண்டு பூசப்பட்டு காய்ந்த பின்னர் அதன் தோற்றத்தை காட்டும் பினிஷ் வகைகளில் மேட், சாட்டின், செமி குளோஸ் மற்றும் குளோஸ் ஆகியவை உள்ளன) செய்தால் சுத்தம் செய்ய சுலபமாக இருக்கும்.


Next Story