தரமான கட்டுமானமே நற்பெயரை தரும்


தரமான கட்டுமானமே நற்பெயரை தரும்
x

கட்டுமானத் தொழிலில், கட்டுமான பொருட்களின் தரம், போதுமான கட்டுமான தொழில்நுட்பங்கள், கட்டுமானத்தின் ஒட்டுமொத்த தரம் இவை மிக முக்கியம்.

கட்டுமானத்தின் தரம் குறையும் என்றால் பல ஆண்டுகள் மக்களிடையே குறிப்பிட்ட நிறுவனம் ஏற்படுத்தி இருக்கும் நற்பெயர் கெடும். அந்த வணிக நிறுவனம் நட்டத்தின் பாதையில் செல்ல ஆரம்பிக்கும்.

மேற்படி நிலை ஏற்படாமல் சிறப்பாக செயல்பட பின்வரும் குறிப்புகளை காண்போம்.

பில்டர் தன்னுடைய வாடிக்கையாளர்களிடம் என்ன மாதிரியான பொருட்களை உபயோகப்படுத்தப் போகிறோம் என கட்டுமான ஒப்பந்தத்தில் குறிப்பிட்டிருப்பார். அதில் எந்த வகையிலும் சமரசம் செய்யாமல் அதே தரமான பொருள்களை உபயோகிக்க வேண்டும். கட்டுமானம் நடக்கும் போது குறிப்பிட்ட மூலப் பொருட்கள் விலை ஏறிவிட்டால் ஒப்பந்தப்படி வாடிக்கையாளர்களிடம் பேசி பிரச்சினையை தீர்த்துக் கொள்ள வேண்டும் மாறாக தரம் குறைந்த பொருட்களை உபயோகிக்க கூடாது.

சில நிறுவனங்களில் மேற்பார்வை பார்க்கும் பொறியாளர்கள் போதுமான முன் அனுபவம் இல்லாத போது அவர்களின் கீழ் பணி புரியும் வேலையாட்கள் செய்கின்ற சிறிய சிறிய தவறுகள் கூட பெரிய பிரச்சினைகளை கொண்டு வந்து நிறுத்தும்.

தரமற்ற கட்டுமானங்கள் அமைவதற்கு 55 சதவிகிதம் திறமையற்ற பணியாளர்கள் தான் காரணம் 12 சதவிகிதம் தரமற்ற பொருட்கள் மற்றும் முறையாக திட்டமிடாமல் காரணம் என்று ஒரு ஆய்வு தெரிவிக்கின்றது.

கட்டுமானத்தில் பெரும்பாலான தவறுகளை தவிர்க்க வேண்டும் என்றால் கட்டுமானம் துவங்குவதற்கு முன்பே என்ன மாதிரியான பொருட்களை உபயோகிக்கிறோம், எந்த காலகட்டத்திற்குள் பணிகளை நிறைவு செய்ய வேண்டும் எவ்வளவு பணியாளர்கள் தேவை போதுமான நிதி மேலாண்மை உள்ளதா என்பதை சரியாக திட்டமிட்டுக்கொண்டு அதன்படி படிப்படியாக செயல்படுத்த வேண்டும்.

கட்டுமானத்தின் தன்மை என்ன மாதிரியான பொருட்கள் எந்த இடத்திற்கு தேவை என்பதோடு வடிவமைப்பு பொறியாளர் கொடுத்த வரைபடம் மாறாமல் மற்றும் குறிப்பிட்ட மூலப் பொருட்கள் சரியாக உபயோகப்படுத்தப்படுகிறதா என்பதை கவனிக்க வேண்டும்.

பூமி பூஜை ஆரம்பித்து கடகால் போடும்பொழுது பைல் பவுண்டேஷன் போடும்போது சுவர் எழுப்பும்போது ரூப் போடும்போது என ஒவ்வொரு செயல்பாடு செய்யும் போதும் பணியாளர் குழு உடன் சரியாக கலந்தாலோசித்து செயல்படுத்துவது சிறப்பாக அமையும்.

காலத்திற்கு ஏற்ப நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்துவது நன்மையே தரும் இது எல்லா தொழில் நிறுவனங்களுக்கும் பொருந்தும் கட்டுமான தொழில் முக்கியமாக பொறியாளர்கள் கட்டுமான பொருட்களை வாங்குபவர்கள் கணக்கு வழக்கு பார்ப்பவர்கள் நிறுவனத்தின் அடுத்த வீடுகளோ அல்லது தனி வீடுகளையோ விற்பனை செய்வதற்காக அமர்த்தப்பட்ட விற்பனையாளர் குழு கட்டிடம் கட்டுவதற்கு முக்கிய காரணமாக இருந்த கட்டுமான தொழிலாளர்கள் என இவர்கள் அனைவரையும் சரியாக அரவணைத்து குறித்த நேரத்தில் ஊதியம் கொடுத்து திறன் அற்றவர்களை அவ்வப்போது நீக்கி திறமையானவர்களை ஊக்குவித்து செயல்படுத்துவதன் மூலமே கட்டுமான தொழில் நிறுவனம் வெற்றி நடை போடும்.

சரியான தரமான மூலப் பொருட்களை உபயோகப்படுத்துகிறோம் என்பது ஒவ்வொரு நிலையிலும் சோதிக்க வேண்டும் எந்த இடத்திலும் யார் வேண்டுமானாலும் மூலப் பொருட்களின் தரத்தில் சமரசம் செய்து லாபம் பார்க்க நேரிடலாம் இது ஒட்டுமொத்த கட்டுமானத்தை சீர்குலைத்து விடும்.

தரமான கட்டுமானம் என்பது காலத்தால் அந்த கட்டுமான குழுவிற்கு நற்பெயரை தேடி தரும். இன்றைக்கும் நம் கண் முன்னே நூற்றாண்டுகளைக் கடந்து நிற்கும் கட்டிடங்கள் இவற்றிற்கு சாட்சி. திறமையான பணியாளர்கள் முழுமையாக தன்னை ஈடுபடுத்திக் கொண்ட நிர்வாகம் சரியான நேரத்திற்கு தரமான பொருட்களை அளிக்கும் மூலப் பொருட்கள் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனை செய்பவர்கள் இவைகளை தாண்டி நிறுவனத்தின் கீழே வேலை செய்யும் துணை ஒப்பந்ததாரர்கள் என அனைவரின் கூட்டு உழைப்பே தரமான கட்டுமானத்தை நல்கும்.


Next Story