வெட்டிவேர் மூங்கில் மறைப்புகள்
வீட்டு நுழைவாயில் முதற்கொண்டு எல்லா ஜன்னல்களுக்கும் திரைசீலைகள் உபயோகிக்கின்றோம். இவைகள் பெரும்பாலும் நைலான் மற்றும் சிந்தடிக் பிளாஸ்டிக் போன்றவற்றால் தயாரிக்கப்பட்டதாக உள்ளன. இதற்கான காரணம் எளிதில் இவற்றை உடனே சுத்தப்படுத்த முடியும் மேலும் குறைந்த விலையில் கச்சிதமாக கிடைக்கின்றன என்பதுதான். மேலும் இயற்கையான பொருட்களால் செய்யப்பட்டது போன்ற தோற்றத்தை உடையதுமாக இருக்கின்றது. எல்லாம் சரிதான் ஆனால் உண்மையில் நம்முடைய உடல் மற்றும் சுற்றுச்சூழல் ஆரோக்கியத்திற்கு இவை சரியா என்றால் இல்லை. ஏற்கனவே வெயில் காலத்தில் வெப்பம் அதிகமாக இருக்கும் போது பிளாஸ்டிக்கினால் செய்யப்பட்ட ஜன்னல் மறைப்புகள் மேலும் வெப்பத்தை கூட்டாதா என்பது சிந்திக்க வேண்டிய விஷயம். பிளாஸ்டிக் உபயோகத்தை குறைக்க வேண்டும் எனும்போது இவைகளை எல்லாம் தவிர்க்கலாம் அல்லவா.
இயற்கை மறைப்புகள்:- முக்கியமாக மூங்கில் மற்றும் வெட்டிவேரினால் செய்யப்பட்ட திரை மறைப்புகள் இருக்கும் சூழலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்வதோடு நிஜமாகவே நீங்கள் ஒரு இயற்கை சூழலில் இருக்கிறீர்கள் என்பதை மறந்து விட வேண்டாம்.
வெப்ப காற்று மூங்கில் மற்றும் வெட்டிவேர் மறைப்புகள் பட்டு திரும்பும் போது காற்று குளிர்விக்கப்பட்டு அந்த குறிப்பிட்ட இடத்தில் வெப்பநிலை குறைகிறது. நல்ல வெயில் காலத்தில் ஜன்னல் வெட்டிவேர் மறைப்புகள் மீது தண்ணீரை ஸ்பிரே செய்தோம் என்றால் வெப்ப காற்று வெளியில் இருந்து வெட்டிவேர் மறைப்புகள் ஊடே உள்ளே வரும்போது குளிர்ச்சியான காற்றாகவும் மனதுக்கு இதமான வாசத்தையும் கொண்டு சேர்க்கும் என்பதில் ஐயமில்லை.
மூங்கில் மறைப்புகள் தற்போது வண்ண ஓவியங்களுடன் விற்பனைக்கு கிடைக்கிறது. இவை வீட்டு அழகை மேலும் கூட்டும். வீட்டு வராண்டாக்கள் அலுவலக நுழைவுக் கூடங்கள் போன்ற இடங்களில் பச்சை வண்ணத்தில் மிகப்பெரிய அளவிற்கு கூட மூங்கில் பூச்சிகளால் வேயப்பட்ட சிறப்பான மறைப்பான்கள் கிடைக்கின்றன இவை மேற்புறம் நோக்கி சுருட்டும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன எனவே தேவைக்கேற்ப உபயோகப்படுத்தலாம்.