ஈரோட்டில் மண்டல அளவிலான கூடைப்பந்து போட்டி- கோவை அணிகள் வெற்றி


ஈரோட்டில் மண்டல அளவிலான கூடைப்பந்து போட்டி- கோவை அணிகள் வெற்றி
x

ஈரோட்டில் நடந்த மண்டல அளவிலான கூடைப்பந்து போட்டியில் கோவை அணிகள் வெற்றி பெற்றது.

ஈரோடு
ஈரோட்டில் நடந்த மண்டல அளவிலான கூடைப்பந்து போட்டியில் கோவை அணிகள் வெற்றி பெற்றது. 
கூடைபந்து
ஈரோடு மாவட்ட கூடைப்பந்து சங்கம் சார்பில் கோவை மண்டல அளவிலான 18 வயதுக்கு உள்பட்டோர் கூடைப்பந்து போட்டி நடத்தப்பட்டது. ஈரோடு திண்டலில் நடந்த இந்த போட்டியில் கோவை மண்டலத்தை சேர்ந்த ஈரோடு, கோவை, திருப்பூர், நீலகிரி, சேலம், நாமக்கல், தர்மபுரி ஆகிய 7 மாவட்ட அணிகள் பங்கேற்றன. ஆண்கள் பிரிவு, பெண்கள் பிரிவு என தனித்தனியாக போட்டிகள் நடந்தன.
சிறப்பாக நடந்த இந்த போட்டியில் ஆண்கள் பிரிவில் கோவை மாவட்ட அணி முதல் பரிசை வென்றது. சேலம் அணி 2-ம் இடமும், நாமக்கல் அணி 3-ம் இடமும் பிடித்தன. பெண்கள் பிரிவிலும் சிறப்பாக ஆடிய கோவை மாவட்ட அணி முதல் பரிசை வென்றது. சேலம் மாவட்ட அணி 2-ம் இடத்தை பிடித்தது. இந்த போட்டியில் ஈரோடு மாவட்ட பெண்கள் கூடைப்பந்து அணி 3-வது பரிசு பெற்றது.
மாநில அணிக்கு தேர்வு
இந்தபோட்டியில் வெற்றி பெற்று முதல் 2- இடங்களை பிடித்த அணிகள் மண்டலங்களுக்கு இடையேயான போட்டியில் பங்கேற்கும். இதுபோல் இந்த போட்டிகளில் சிறப்பாக விளையாடிய வீரர்-வீராங்கனைகள் தமிழ்நாடு மாநில அணிக்கு தேர்வு செய்யப்பட்டனர்.
போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்-வீராங்கனைகளுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. ஈரோடு மாவட்ட கூடைப்பந்து சங்க தலைவரும், சுதா ஆஸ்பத்திரி நிர்வாக இயக்குனருமான டாக்டர் கே.சுதாகர் தலைமை தாங்கினார். செயலாளர் கோபிநாத் முன்னிலை வகித்தார். விழாவில் டாக்டர் எல்.எம்.ராமகிருஷ்ணன் கலந்து கொண்டு பரிசுகள் வழங்கினார். ஈரோடு ஸ்பைஸ் ரவுண்ட் டேபிள் சங்க நிர்வாகிகள் செல்வகுமார், காமேஷ், தனுஷ்கோடி உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக ஈரோடு மாவட்ட கூடைப்பந்து சங்க துணை செயலாளர்கள் முத்துராஜா, சங்கர் ஆகியோர் வரவேற்றனர். முடிவில் பொருளாளர் வருண் நன்றி கூறினார்.

Next Story