100-வது டெஸ்ட் போட்டி: அஸ்வின் படைத்த சாதனைகள்


100-வது டெஸ்ட் போட்டி: அஸ்வின் படைத்த சாதனைகள்
x

image courtesy: twitter/@BCCI

இங்கிலாந்துக்கு எதிரான 5-வது டெஸ்ட் போட்டி இந்திய வீரர் அஸ்வினின் 100-வது சர்வதேச டெஸ்டாக அமைந்தது.

தர்மசாலா,

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் முதல் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்ற நிலையில், மற்ற அனைத்திலும் இந்தியா வெற்றி பெற்று தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இதில் தர்மசாலாவில் நடைபெற்ற 5-வது மற்றும் கடைசி போட்டி இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினின் 100-வது சர்வதேச டெஸ்டாக அமைந்தது. இந்த போட்டியில் அஸ்வின் முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுகள், 2-வது இன்னிங்சில் 5 விக்கெட்டுகள் என்று மொத்தம் 9 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

இதன் மூலம் 100-வது சர்வதேச டெஸ்ட் போட்டியில் விளையாடிய அஸ்வின் சில சாதனைகளை படைத்துள்ளார். அவைகள்;-

1. இங்கிலாந்துக்கு எதிரான 2-வது இன்னிங்சில் நேற்று இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். 100-வது டெஸ்ட் போட்டியில் ஆடிய அவர் ஒரு இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றுவது இது 36-வது முறையாகும். இதன் மூலம் டெஸ்ட் வரலாற்றில் இந்தியா தரப்பில் அதிக முறை 5-விக்கெட்டுகள் கைப்பற்றிய வீரர் என்ற வரலாற்று சாதனையை படைத்துள்ளார்.

2. தர்மசாலா டெஸ்ட் போட்டியில் அஸ்வின் இரு இன்னிங்சிலும் சேர்த்து 128 ரன்கள் விட்டுக்கொடுத்து 9 விக்கெட்டுகள் (4, 5) வீழ்த்தினார். 100-வது டெஸ்டில் ஒரு வீரரின் சிறந்த பந்து வீச்சு இதுவாகும். இதற்கு முன்பு 100-வது டெஸ்டில் முரளிதரன் 141 ரன் வழங்கி 9 விக்கெட் சாய்த்ததே (2006-ம் ஆண்டு வங்காளதேசத்துக்கு எதிராக) சாதனையாக இருந்தது.

3. மேலும் 100-வது டெஸ்டில் இரு இன்னிங்சிலும் 4 மற்றும் அதற்கு மேலான விக்கெட்டை வீழ்த்திய முதல் வீரர் என்ற சிறப்பையும் அஸ்வின் பெற்றார்.

4. இந்திய வீரர் அஸ்வின் தனது 100-வது டெஸ்டில் 2-வது இன்னிங்சில் 5 விக்கெட் வீழ்த்தினார். அவர் தனது அறிமுக டெஸ்டின் (2011-ம் ஆண்டு டெல்லியில் நடந்த வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான) 2-வது இன்னிங்சில் 6 விக்கெட்டுகள் கைப்பற்றி இருந்தார். இதன் மூலம் அறிமுக மற்றும் 100-வது டெஸ்டில் 5 விக்கெட்டுகள் வீழ்த்தி முதல் வீரர் என்ற அரிய சாதனையை அஸ்வின் படைத்துள்ளார்.


Next Story