12-வது உலகக் கோப்பை கிரிக்கெட்: இங்கிலாந்தின் ஏக்கம் தணிந்தது (2019)


12-வது உலகக் கோப்பை கிரிக்கெட்: இங்கிலாந்தின் ஏக்கம் தணிந்தது (2019)
x

விராட் கோலி தலைமையில் பங்கேற்ற இந்தியா, லீக் சுற்றில் 15 புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடத்தை பிடித்தது.


12-வது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் 2019-ம் ஆண்டு மே 30-ந்தேதி முதல் ஜூலை 14-ந்தேதி வரை இங்கிலாந்தில் அரங்கேறியது. உலகக் கோப்பையை அந்த நாடு நடத்தியது இது 5-வது முறையாகும். சில ஆட்டங்கள் அண்டை நாடான வேல்சிலும் நடத்தப்பட்டது.

அணிகளின் எண்ணிக்கை 14-ல் இருந்து 10 ஆக குறைக்கப்பட்டு ரவுண்ட் ராபின் முறையில் சந்தித்தன. அதாவது ஒவ்வொரு அணியும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோதி அதில் டாப்-4 இடங்களை பிடித்த அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெற்றன.

விராட் கோலி தலைமையில் பங்கேற்ற இந்தியா லீக் சுற்றில் 7 வெற்றி, ஒரு தோல்வி, ஒரு முடிவில்லை என்று 15 புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடத்தை பிடித்தது. தென்ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், வங்காளதேசம், இலங்கை ஆகிய அணிகளை தோற்கடித்தது. நியூசிலாந்துக்கு எதிரான மோதல் மழையால் ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது. இங்கிலாந்துக்கு எதிராக மட்டும் 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.


இதில் லண்டன் ஓவலில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா 5 விக்கெட்டுக்கு 352 ரன்கள் குவித்து 36 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதை குறிப்பிட்டாக வேண்டும். உலகக்கோப்பையில் ஆஸ்திரேலிய பவுலர்கள் 350 ரன்களுக்கு மேல் வாரி வழங்கியது இதுவே முதல் முறையாகும். ஷிகர் தவானின் சதமும்(117 ரன்), ரோகித் சர்மா (57 ரன்), கேப்டன் விராட் கோலி (82 ரன்) அரைசதமும், புவனேஷ்வர்குமார், பும்ரா தலா 3 விக்கெட் வீழ்த்தியதும் இந்தியாவின் சாதனை வெற்றிக்கு வித்திட்டனர்.

மான்செஸ்டரில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் ரோகித் சர்மாவின் (140 ரன்) அதிரடியால் 5 விக்கெட்டுக்கு 336 ரன்கள் சேர்த்த இந்தியா 89 ரன் வித்தியாசத்தில் வாகை சூடியது. உலகக் கோப்பை போட்டிகளில் பாகிஸ்தானை 7-வது முறையாக உதைத்து இந்தியா தனது ஆதிக்கத்தை மீண்டும் ஒரு முறை நிலைநாட்டியது.

லீக் முடிவில் இந்தியாவுடன், ஆஸ்திரேலியா (14 புள்ளி), இங்கிலாந்து (12 புள்ளி), நியூசிலாந்து (11 புள்ளி) ஆகிய அணிகளும் அரைஇறுதியை எட்டின. நியூசிலாந்துடன் சமனில் இருந்த பாகிஸ்தான் (11 புள்ளி) ரன்ரேட்டில் பின்தங்கியதால் அரைஇறுதி வாய்ப்பை இழந்தது.


முதலாவது அரைஇறுதியில் இந்திய அணி, நியூசிலாந்தை மான்செஸ்டரில் எதிர்கொண்டது. இதில் நியூசிலாந்து முதலில் பேட் செய்த போது 47-வது ஓவரில் மழை குறுக்கிட்டு நீண்ட நேரம் மழை கொட்டியதால் ஆட்டம் மறுநாளுக்கு நகர்ந்தது. தொடர்ந்து ஆடிய நியூசிலாந்து 8 விக்கெட்டுக்கு 239 ரன்கள் சேர்த்தது. ராஸ் டெய்லர் 74 ரன்களும், கேப்டன் கேன் வில்லியம்சன் 67 ரன்களும் எடுத்தனர். பின்னர் ஆடிய இந்திய அணியில் டாப்-3 வீரர்களான லோகேஷ் ராகுல், ரோகித் சர்மா, கோலி தலா ஒரு ரன்னில் வேகப்பந்து வீச்சுக்கு இரையாயினர்.

ஒரு கட்டத்தில் 92 ரன்னுக்குள் 6 விக்கெட்டுகளை இழந்து ஊசலாடிய இந்திய அணியை காப்பாற்ற விக்கெட் கீப்பர் டோனியும், ரவீந்திர ஜடேஜாவும் போராடினர். அரைசதத்தை கடந்த இவர்கள் செஞ்சுரி பார்ட்னர்ஷிப்புடன் இலக்ைக ஓரளவு நெருங்கினர். கடைசி 3 ஓவரில் வெற்றிக்கு 37 ரன் தேவைப்பட்ட போது, ஜடேஜா (77 ரன், 4 பவுண்டரி, 4 சிக்சர்) கேட்ச் ஆனார். தொடர்ந்து டோனி (50 ரன், 72 பந்து) ரன்-அவுட் செய்யப்பட, அத்துடன் இந்தியாவின் கனவு தகர்ந்தது. இந்தியா 49.3 ஓவர்களில் 221 ரன்னில் ஆல்-அவுட் ஆகி நடையை கட்டியது. டோனி இந்திய அணிக்காக விளையாடிய கடைசி போட்டி இதுவாகும். இத்துடன் தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை முடித்துக் கொண்டார்.

மற்றொரு அரைஇறுதியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை பந்தாடியது.

இதைத் தொடர்ந்து ஜூன் 14-ந்தேதி லண்டன் லார்ட்சில் இங்கிலாந்து- நியூசிலாந்து அணிகள் இறுதிப்போட்டியில் மல்லுக்கட்டின. முதலில் பேட் செய்த நியூசிலாந்து 8 விக்கெட்டுக்கு 241 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக ஹென்ரி நிகோல்ஸ் 55 ரன்கள் எடுத்தார். அடுத்து உள்ளூர் ரசிகர்களின் அமோக ஆதரவுடன் பேட்டிங்கை தொடங்கிய இங்கிலாந்துக்கு சீரான இடைவெளியில் விக்கெட் சரிந்தது. பென் ஸ்டோக்ஸ் தனிவீராக அணியை நிமிர வைத்தார். பரபரப்பான கடைசி ஓவரில் இங்கிலாந்தின் வெற்றிக்கு 15 ரன் தேவைப்பட்டது. இறுதி ஓவரை வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் பவுல்ட் வீசினார். முதல் இரு பந்தில் ரன் இல்லை.

3-வது பந்தை சிக்சருக்கு விரட்டிய பென் ஸ்டோக்சுக்கு 4-வது பந்தில் அதிர்ஷ்டவசமாக 6 ரன் கிடைத்தது. அதாவது 2-வது ரன்னுக்கு ஓடிய பென் ஸ்டோக்ஸ் ரன்-அவுட்டில் இருந்து தப்பிக்க பாய்ந்து விழுந்தார். அப்போது மார்ட்டின் கப்தில் ஸ்டம்பை நோக்கி எறிந்த பந்து அவரது பேட்டில் பட்டு பவுண்டரிக்கு ஓடியதால் அதையும் கணக்கிட்டு 6 ரன் வழங்கப்பட்டது. ஆனால் உண்மையில் இதற்கு 5 ரன் தான் வழங்கியிருக்க வேண்டும். 2-வது ரன்னுக்கு இருவரும் கிராஸ் செய்வதற்கு முன்பே 'த்ரோ' செய்யப்பட்டு விட்டதால் ஒரு ரன்கணக்கில் கிடையாது. நடுவர் தர்மசேனாவின் தவறான தீர்ப்பு நியூசிலாந்துக்கு பாதகமாக அமைந்தது. கடைசி இரு பந்தில் இரண்டு வீரர்கள் ரன்-அவுட் ஆனாலும் அதில் தலா ஒரு ரன் வீதம் எடுத்தனர். முடிவில் இங்கிலாந்து 50 ஓவர்களில் 241 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆகி போட்டி சமனில் (டை) முடிந்தது. உலகக் கோப்பை வரலாற்றில் சமனில் முடிந்த முதல் இறுதிப்போட்டி இதுதான். பென் ஸ்டோக்ஸ் 84 ரன்களுடன் (98 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்) களத்தில் இருந்தார்.


பின்னர் வெற்றி தோல்வியை நிர்ணயிக்க சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்பட்டது. சூப்பர் ஓவரில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து 15 ரன் எடுத்தது. 16 ரன் இலக்குடன் ஆடிய நியூசிலாந்து சூப்பர் ஓவரிலும் சமன் (15 ரன்) செய்தது. அதாவது கடைசி பந்தில் வெற்றிக்கு 2 ரன் தேவைப்பட்ட போது, 2-வது ரன் எடுக்க முயற்சித்த கப்தில் ரன்-அவுட் செய்யப்பட்டார். திக்...திக்... சூப்பர் ஓவரும் சமன் ஆனதால் வெற்றியாளரை தீர்மானிக்க விதிமுறைப்படி அதிக பவுண்டரி (சிக்சரையும் சேர்த்து) கணக்கிடப்பட்டது. இதில் நியூசிலாந்தை (17 பவுண்டரி) விட இங்கிலாந்து (26 பவுண்டரி) அதிகம் அடித்து இருந்தது.

இதையடுத்து இயான் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து முதல் முறையாக உலகக் கோப்பையை உச்சிமுகர்ந்தது. 'கிரிக்கெட்டின் தாயகம்' கோப்பையை வென்றதில்லை என்ற 44 ஆண்டு கால ஏக்கம் ஒரு வழியாக தணிந்தது. அதே சமயம் நியூசிலாந்து தொடர்ந்து 2-வது முறையாக இறுதி ஆட்டத்தில் தோற்று ஏமாற்றத்திற்கு உள்ளானது. பரபரப்பும், திரில்லிங்கும் நிறைந்த இந்த உலகக் கோப்பை மறக்க முடியாத ஒரு போட்டியாக கிரிக்கெட் வரலாற்றில் இடம் பிடித்தது என்றால் மிகையல்ல.


பவுண்டரி அடிப்படையில் சாம்பியனை தீர்மானித்தது சர்ச்சையை கிளப்பியதையடுத்து ஐ.சி.சி. விதிமுறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டது. இனி சமனில் முடிந்தால் முடிவு கிடைக்கும் வரை சூப்பர் ஓவர் கடைபிடிக்கப்படும் என்று அறிவித்தது.


5 சதம் அடித்து ரோகித் சர்மா சாதனை


இந்த உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்திய வீரர் ரோகித் சர்மா 9 ஆட்டங்களில் 5 சதம் உள்பட 648 ரன்கள் குவித்து முதலிடம் பிடித்தார். ஒரு உலகக் கோப்பையில் 5 சதம் அடித்த முதல் வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார். அவர் தென்ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், இங்கிலாந்து, வங்காளதேசம், இலங்கைக்கு எதிராக சதம் விளாசி இருந்தார். இதற்கு முன்பு இலங்கையின் சங்கக்கரா 2015-ம் ஆண்டு உலகக் கோப்பையில் 4 சதம் அடித்ததே சாதனையாக இருந்தது. அதை ரோகித் முறியடித்தார்.


Next Story