13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி: புதிய கேப்டன்களுடன் களம் இறங்கும் அணிகள்
2019 உலகக் கோப்பை போட்டியில் அணியை வழிநடத்திய ஒருவர் கூட இந்த உலகக் கோப்பைக்கு கேப்டனாக இல்லை.
புதுடெல்லி,
10 அணிகள் பங்கேற்கும் 13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) அக்டோபர், நவம்பர் மாதங்களில் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடக்கிறது. முந்தைய உலகக் கோப்பை போட்டியில் (2019) அணியை வழிநடத்திய ஒருவர் கூட இந்த உலகக் கோப்பைக்கு கேப்டனாக இல்லை. 48 ஆண்டுகால உலகக் கோப்பை வரலாற்றில் இப்படியொரு அதிசயம் இதற்கு முன்பு நிகழ்ந்ததில்லை.
2019-ம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி விராட் கோலி தலைமையில் களம் இறங்கி அரைஇறுதியுடன் வெளியேறியது. 2021-ம் ஆண்டில் கேப்டன் பதவியில் இருந்து கோலி கழற்றி விடப்பட்டார். தற்போது இந்திய அணி சொந்த மண்ணில் உலக கோப்பை சவாலை ரோகித் சர்மா தலைமையில் எதிர்கொள்கிறது.
முந்தைய உலகக் கோப்பையை இங்கிலாந்துக்கு வென்றுத் தந்து வரலாறு படைத்த அந்த அணியின் கேப்டன் இயான் ேமார்கன் கடந்த ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டுக்கு முழுக்கு போட்டதால், அதன் பிறகு பொறுப்பை ஜோஸ் பட்லர் ஏற்றார். இதே போல் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக இருந்த ஆரோன் பிஞ்ச் விடைபெற்றதால் பேட் கம்மின்ஸ் வழிநடத்துகிறார்.
வங்காளதேச அணியில் மோர்தசாவுக்கு பதிலாக தமிம் இக்பால், பாகிஸ்தான் அணியில் சர்ப்ராஸ் அகமதுவுக்கு பதிலாக பாபர் அசாம், தென்ஆப்பிரிக்க அணியில் பாப் டு பிளிஸ்சிஸ்சுக்கு பதிலாக பவுமா, இலங்கை அணியில் திமுத் கருணாரத்னேவுக்கு பதிலாக தசுன் ஷனகா, ஆப்கானிஸ்தான் அணியில் குல்படின் நைப்புக்கு பதிலாக ஹஷ்மத்துல்லா ஷகிடி ஆகியோர் கேப்டன்களாக உள்ளனர்.
வெஸ்ட் இண்டீஸ் அணியில், அந்த உலகக் கோப்பை போட்டியில் கேப்டனாக இருந்த ஜாசன் ஹோல்டர் மோசமான செயல்பாட்டால் அந்த பதவியை இழந்தார். பிறகு பொல்லார்ட் கேப்டனாக நியமிக்கப்பட்டார். அவர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஒதுங்கியதும் நிகோலஸ் பூரன் அந்த இடத்திற்கு வந்தார். கேப்டன்ஷிப்பில் இருந்து பூரனும் விலகியதால், இப்போது ஷாய் ஹோப் வெஸ்ட் இண்டீசை முன்னெடுத்து செல்கிறார்.
நியூசிலாந்து அணி 2019-ம் ஆண்டு உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்திடம் சூப்பர் ஓவரில் தோற்று கோப்பையை கோட்டை விட்டது. அந்த அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் மொத்தம் 578 ரன்கள் குவித்து தொடர்நாயகன் விருதை பெற்றார்.
இந்த தடவையும் அவரது தலைமையில் தான் நியூசிலாந்து அணி உலகக் கோப்பையை நோக்கி பயணித்தது. ஆனால் திருஷ்டி விழுந்தாற் போல் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் குஜராத் அணிக்காக பந்தை எல்லைக்கோட்டில் துள்ளி குதித்து தடுத்த போது கீழே விழுந்ததில் வலது கால்முட்டியில் வில்லியம்சனுக்கு காயம் ஏற்பட்டது.
பரிசோதனையில் கால்முட்டியில் அவருக்கு தசைநார் கிழிந்திருப்பது தெரியவந்தது. விரைவில் ஆபரேஷன் செய்யப்பட உள்ள அவர் காயத்தில் இருந்து முழுமையாக குணமடைய பல மாதங்கள் ஆகும் என்பதால் இந்த உலகக் கோப்பை போட்டியில் விளையாட முடியாத சோகத்தில் உள்ளார். அவருக்கு பதிலாக நியூசிலாந்து அணியின் கேப்டனாக டாம் லாதம் செயல்படுவார் என்று தெரிகிறது.