இந்தியா வென்ற 2013 சாம்பியன்ஸ் டிராபி ஒரு கோப்பையே கிடையாது - மைக்கேல் வாகன் அதிருப்தி


இந்தியா வென்ற 2013 சாம்பியன்ஸ் டிராபி ஒரு கோப்பையே கிடையாது - மைக்கேல் வாகன் அதிருப்தி
x

இந்தியா கடைசியாக வென்ற 2013 சாம்பியன்ஸ் டிராபியை உண்மையான ஐ.சி.சி. கோப்பையாக கருத முடியாது என்று மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

சர்வதேச கிரிக்கெட்டில் முதன்மை அணியாக திகழும் இந்தியா கடைசியாக எம்.எஸ். தோனி தலைமையில் 2013 சாம்பியன்ஸ் டிராபியை வென்றது. ஆனால் அதன் பின் கடந்த பத்து வருடங்களாக ஒரு ஐ.சி.சி. கோப்பையை கூட வெல்ல முடியாமல் இந்தியா திணறி வருகிறது. ஐ.சி.சி. தொடர்களில் லீக் சுற்றில் அபாரமாக விளையாடும் இந்தியா அழுத்தமான நாக் அவுட் சுற்றில் தோல்வியை சந்தித்து கோப்பைகளை எதிரணிக்கு தாரை வார்த்து வருகிறது.

குறிப்பாக கடந்த வருடம் சொந்த மண்ணில் நடந்த 2023 உலக கோப்பையில் தொடர்ச்சியாக 10 வெற்றிகளை பெற்ற இந்தியா கடைசியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பைனலில் தோல்வியை சந்தித்தது.

இந்நிலையில் இந்தியா கடைசியாக வென்ற 2013 சாம்பியன்ஸ் டிராபியை உண்மையான ஐ.சி.சி. கோப்பையாக கருத முடியாது என முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார். எனவே அபாரமான திறமை இருந்தும் 2011-க்கு பின் ஐ.சி.சி. கோப்பையை வெல்ல முடியாமல் இந்தியா தடுமாறுவதாக அதிருப்தியை வெளிப்படுத்தும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு:-

"இந்தியா நிறைய கோப்பைகளை வென்றிருக்க வேண்டும். கடைசியாக அவர்கள் 2013-ம் ஆண்டு கோப்பையை வென்றார்கள் அல்லவா? ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தானே? உண்மையாக அது ஒரு கோப்பையே கிடையாது. தற்போது உலக கோப்பை மற்றும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் நடைபெறுகிறது. ஆனால் கடந்த வருடம் இந்தியா அந்த 2 தொடரின் இறுதிப்போட்டியிலும் தோற்றது. இருப்பினும் இந்தியாவில் ஏராளமான திறமைகள் இருக்கின்றன.

சமீபத்தில் ரோகித் சர்மாவை ஒருநாள் உலக கோப்பையின்போது நான் சந்தித்தேன். அவர் இந்தியாவை நவீன கிரிக்கெட்டுக்கு தகுந்தாற்போல் மிகவும் ஆக்ரோஷமான வழியில் விளையாட வைத்தார். ஆனால் அனைத்தையும் சரியாக செய்த அவருடைய தலைமையில் இறுதிப்போட்டியில் இந்தியா தோற்றது. அந்த வகையில் ஆக்ரோஷமாக விளையாடும் வழியில் ரோகித் சர்மா நன்றாகவே செயல்பட்டார்.

ஆரம்பக் காலங்களில் கங்குலி இந்தியாவை மிகவும் கடினமான அணியாக மாற்றினார். விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டை விருப்பத்துடன் பார்க்க வைத்தார். அங்கே கண்டிப்பாக எம்.எஸ். தோனியும் இருப்பார். வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் அவரை விட சிறந்தவர் இருக்க முடியாது. எனவே தற்போது உள்ள ஐ.சி.சி. கோப்பைகளில் இந்தியா 2 – 3 வென்றிருக்க வேண்டும் என்று நான் கருதுகிறேன்" எனக் கூறினார்.


Next Story