நேர்காணல் முடிந்தது இந்திய கிரிக்கெட் அணி பயிற்சியாளர் அறிவிப்பு நிறுத்தி வைப்பு


நேர்காணல் முடிந்தது இந்திய கிரிக்கெட் அணி பயிற்சியாளர் அறிவிப்பு நிறுத்தி வைப்பு
x
தினத்தந்தி 10 July 2017 11:15 PM GMT (Updated: 10 July 2017 8:50 PM GMT)

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்தவர்களிடம் நேற்று நேர்காணல் நடைபெற்றது. புதிய பயிற்சியாளர் அறிவிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த அனில் கும்பிளே, கேப்டன் விராட்கோலியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த மாதம் 20–ந் தேதி அந்த பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்தார். புதிய பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பம் செய்தவற்கான காலக்கெடு நேற்று முன்தினம் முடிவடைந்தது. இதையொட்டி பயிற்சியாளர் பதவிக்கான நேர்காணல் மும்பையில் உள்ள இந்திய கிரிக்கெட் வாரிய தலைமை அலுவலகத்தில் நேற்று பிற்பகலில் நடந்தது.

கிரிக்கெட் ஆலோசனை கமிட்டி உறுப்பினர்களான முன்னாள் கேப்டன் கங்குலி, வி.வி.எஸ்.லட்சுமண் ஆகியோர் நேர்காணலை நடத்தினார்கள். மற்றொரு உறுப்பினரான தெண்டுல்கர் லண்டனில் இருந்து வீடியோ கான்பரன்ஸ் மூலம் சக உறுப்பினர்களுடன் இணைந்து ஆலோசனை நடத்தினார். ரவிசாஸ்திரி, ஷேவாக், லால்சந்த் ராஜ்புத், ரிச்சர்ட் பைபஸ் உள்பட 5 பேர் நேரில் ஆஜராகி தங்களது பயிற்சி திட்டங்கள் குறித்து விளக்கம் அளித்தனர். பில் சிமோன்ஸ் கலந்து கொள்ளவில்லை.

அவசரம் காட்ட மாட்டோம்

பயிற்சியாளர் நேர்காணல் முடிந்த பிறகு கங்குலி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–

புதிய பயிற்சியாளர் குறித்த அறிவிப்பை நிறுத்தி வைத்து இருக்கிறோம். அறிவிக்க எங்களுக்கு இன்னும் சில தினங்கள் தேவைப்படுகிறது. இந்த வி‌ஷயத்தில் அவசரம் காட்ட வேண்டாம் என்று நினைக்கிறோம். நமது அணியின் இலங்கை சுற்றுப்பயணம் தொடங்க இன்னும் சில நாட்கள் இருக்கிறது. அடுத்த பயிற்சியாளர் 2019–ம் ஆண்டு உலக கோப்பை வர தொடர வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. வீரர்களும், அவர்களுக்கு உதவியாக இருக்கும் ஊழியர்களும் ஒத்த கருத்து உடையவர்களாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம்.

பயிற்சியாளர் தேர்வு நடைமுறையில் கேப்டன் விராட்கோலி முக்கியமானவர். அணிக்கும், வீரர்களுக்கும் நலன் பயக்கும் வகையிலேயே எங்கள் முடிவு இருக்கும். பயிற்சியாளர்கள் அணுகுமுறை எப்படி இருக்கிறது என்பதை விராட்கோலி புரிந்து கொள்ள வேண்டும். பயிற்சியாளர் தேர்வு நடைமுறையில் இருந்து விராட்கோலி ஒதுங்கி இருப்பது பாராட்டுக்குரிய வி‌ஷயமாகும். விராட்கோலி வெஸ்ட்இண்டீசில் இருந்து நாடு திரும்பியதும் அவரிடம் விரிவாக விவாதிப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

நேர்காணல் முடிந்ததும் புதிய பயிற்சியாளர் நேற்று அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story