தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் திருவள்ளூர் வீரன்ஸ் அணியின் ஆலோசகராக முரளிதரன் நியமனம்


தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் திருவள்ளூர் வீரன்ஸ் அணியின் ஆலோசகராக முரளிதரன் நியமனம்
x
தினத்தந்தி 15 July 2017 10:00 PM GMT (Updated: 15 July 2017 7:21 PM GMT)

தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் திருவள்ளூர் வீரன்ஸ் அணியின் ஆலோசகராக முரளிதரன் நியமனம் அறிமுக நிகழ்ச்சி சென்னையில் நடந்தது.

சென்னை,

2-வது தமிழ்நாடு பிரீமியர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னை, நெல்லை, திண்டுக்கல் ஆகிய இடங்களில் வருகிற 22-ந் தேதி முதல் ஆகஸ்டு 20-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் பங்கேற்கும் 8 அணிகளில் ஒன்றான திருவள்ளூர் வீரன்ஸ் அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்து ஜாம்பவான் முரளிதரன், பயிற்சியாளர் பரத் அருண் ஆகியோரின் அறிமுக நிகழ்ச்சி சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நேற்று நடந்தது. அணியின் உரிமையாளரான வி.பி.சந்திரசேகர் இருவரையும் அறிமுகம் செய்து வைத்தார். பின்னர் முரளிதரன் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

இந்த போட்டி தொடர் இளம் வீரர்களுக்கு சிறந்த வாய்ப்பாகும். இதில் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் ஐ.பி.எல். மற்றும் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளது. டி.என்.பி.எல். தொடர் தமிழக வீரர்களுக்கு கிடைத்துள்ள அருமையான வாய்ப்பாகவே நான் கருதுகிறேன். ஐ.பி.எல். போட்டி தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி திரும்பி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. கடந்த 7 ஆண்டுகளாக நான் இலங்கை கிரிக்கெட்டுடன் நெருங்கிய தொடர்பில் இல்லை. அதனால் அங்கு நடக்கும் பிரச்சினைகள் குறித்து நான் கருத்து சொல்வது சரியாக இருக்காது. எல்லா அணிகளுக்கும் ஏற்படும் பிரச்சினை தான் இலங்கை அணிக்கும் தற்போது நேர்ந்துள்ளது. விரைவில் அதனை அவர்கள் சரி செய்து விடுவார்கள். அடுத்து நடைபெற இருக்கும் இலங்கை சுற்றுப்பயணத்தில் இந்திய அணிக்கே வெற்றி வாய்ப்பு உள்ளது. எனினும் கிரிக்கெட்டில் எது வேண்டுமானாலும் நடைபெறலாம். 2011-ம் ஆண்டு உலக கோப்பை இறுதிப்போட்டியில் இலங்கை அணி, இந்தியாவிடம் தோல்வி கண்ட ஆட்டத்தில் மேட்ச் பிக்சிங் நடந்து இருக்கலாம் என்று ரணதுங்கா சொல்லி இருப்பது சிலருக்கு இடையிலான பிரச்சினையே காரணமாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். இந்த விவகாரத்துக்குள் நான் செல்ல விரும்பவில்லை.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story