வெளிநாட்டில் சிறப்பாக ஆடும் அணி என்பதை களத்தில் நிரூபித்து காட்டுங்கள் - பயிற்சியாளர் ரவிசாஸ்திரி மீது ஷேவாக் பாய்ச்சல்


வெளிநாட்டில் சிறப்பாக ஆடும் அணி என்பதை களத்தில் நிரூபித்து காட்டுங்கள் - பயிற்சியாளர் ரவிசாஸ்திரி மீது ஷேவாக் பாய்ச்சல்
x
தினத்தந்தி 4 Sep 2018 11:30 PM GMT (Updated: 4 Sep 2018 7:59 PM GMT)

இந்திய பயிற்சியாளர் ரவிசாஸ்திரியை விமர்சித்துள்ள ஷேவாக், ‘பேச்சை குறைத்து விட்டு வெளிநாட்டில் சிறப்பாக ஆடும் அணி என்பதை களத்தில் நிரூபித்து காட்டுங்கள்’ என்று கூறியுள்ளார்.

புதுடெல்லி,

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி 1-3 என்ற கணக்கில் பறிகொடுத்துள்ள நிலையில், அது குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் ஷேவாக், டி.வி. சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

‘உலக கிரிக்கெட் அரங்கில் சிறந்த வெளிநாட்டு அணியாக இந்தியாவால் விளங்க முடியும். அதற்குரிய திறமை எங்களிடம் இருக்கிறது’ என்று தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி சொல்லி வருகிறார். சிறந்த வெளிநாட்டு அணி என்பதை மைதானத்தில் செயல்பாட்டின் மூலம் உருவாக்க வேண்டுமே தவிர, ஒரு அறையில் உட்கார்ந்து கொண்டு அது பற்றி பேசுவதன் மூலம் அல்ல. ஒருவர் தனது விருப்பப்படி எதை வேண்டுமானாலும் பேசலாம். ஆனால் களத்தில் பேட் பேச வேண்டும். இல்லாவிட்டால் வெளிநாடுகளில் ஆதிக்கம் செலுத்தும் அணி என்ற பெயரை ஒருபோதும் எடுக்க முடியாது.

இங்கிலாந்துக்கு எதிரான தொடரை கைப்பற்ற இந்தியாவுக்கு பொன்னான வாய்ப்பு கிடைத்தது. அதை இந்திய வீரர்கள் கோட்டை விட்டு விட்டனர். முதலாவது டெஸ்டில் 194 ரன்கள் இலக்கை கூட எட்ட முடியாமல் 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தோம். சவுதம்டனில் நடந்த 4-வது டெஸ்டில் 60 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தோம்.

அன்னிய மண்ணில் டெஸ்டில் எப்படி வெற்றி பெற வேண்டும் என்ற கலையை சவுரவ் கங்குலியின் கேப்டன்ஷிப்பிலேயே கற்றுக்கொண்டு விட்டோம். ஆனால் தொடரை தான் வசப்படுத்த முடியாமல் தவிக்கிறோம். அது தான் இன்னும் நமக்கு பிரச்சினையாக இருக்கிறது.

முன்பு பேட்ஸ்மேன்கள் நிறைய ரன்கள் குவிப்பார்கள். பவுலர்கள் 20 விக்கெட்டுகளை வீழ்த்த மாட்டார்கள். ஆனால் இப்போது நிலைமை மாறி விட்டது. பந்து வீச்சாளர்கள் இரண்டு இன்னிங்சையும் சேர்த்து 20 விக்கெட்டுகளையும் சாய்த்து தங்களது பணியை சரியாக செய்கிறார்கள். ஆனால் பேட்ஸ்மேன்கள் போதுமான ரன்களை எடுப்பதில்லை. கடைசி சில டெஸ்டுகளில் ஒரு இன்னிங்சில் நாம் 300 ரன்களை கூட கடக்கவில்லை.

தோல்விக்கு பிறகு, ‘நாங்கள் முயற்சிக்கிறோம், வெற்றிகரமாக முடிக்க இயலவில்லை அல்லது அடுத்த முறை தொடரை வெல்ல முயற்சிப்போம்’ என்று கூறுவது மிகவும் எளிது. கடந்த 10 ஆண்டுகளாக நாம் இதைத் தான் திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டு இருக்கிறோம். ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்க ஆகிய நாடுகளில் கடந்த 10 ஆண்டுகளில் நாம் எந்த டெஸ்ட் தொடரையும் வெல்லவில்லை. இவ்வாறு ஷேவாக் கூறியுள்ளார்.

கவாஸ்கர் கருத்து

இந்திய முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் அளித்த ஒரு பேட்டியில், ‘டோனியிடம் இருந்து கேப்டன்ஷிப்பை விராட் கோலி பெற்ற போது அவர் மீது நிறைய எதிர்பார்ப்பு காணப்பட்டது. விராட் கோலி வித்தியாசமான அணுகுமுறையை கொண்டவர், வெளிநாட்டு தொடரில் இந்திய அணியை புதிய பாதையில் பயணிக்க வைப்பார் என்றே அனைவரும் நினைத்தனர். ஆனால் பேட்ஸ்மேனாக ஜொலிக்கிறாரே தவிர, கேப்டன்ஷிப்பில் எதிர்பார்ப்பை நிறைவேற்ற தவறி விட்டார்.

இங்கிலாந்து தொடரில் கோலி இதுவரை 544 ரன்கள் குவித்து இருக்கிறார். அவரை தவிர்த்து இன்னொரு இந்திய பேட்ஸ்மேன் 400 முதல் 450 ரன்களுக்கு மேல் எடுத்திருந்தால் இங்கிலாந்து தொடரை இந்திய அணி இழந்திருக்காது. இந்திய அணி விராட் கோலியைத்தான் அதிகமாக சார்ந்து இருக்கிறது. எல்லா நேரமும் விராட் கோலியே தனி வீரராக போராடி அணிக்கு வெற்றியை கொண்டு வர முடியாது. அவரும் மனிதர் தானே’ என்றார்.

அஸ்வின் மீது ஹர்பஜன் சாடல்

இந்திய மூத்த சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங் கூறுகையில், ‘சவுதம்டனில் நடந்த 4-வது டெஸ்டில் ஆடுகளம் ‘ஆப்-ஸ்பின்னர்’களுக்கு நன்கு உதவிகரமாக இருந்தது. அதனால் தான் இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் மொயீன் அலி நிறைய விக்கெட்டுகளை (மொத்தம் 9 விக்கெட்) அள்ளினார். மொயீன் அலி, நமது சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினை விட சிறப்பாக செயல்பட்டதால் தான் அந்த டெஸ்டில் தோல்வியை சந்திக்க நேர்ந்தது. நமது சுழற்பந்து வீச்சாளர்களை விட, இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர்கள் அபாரமாக செயல்பட்டதை நான் பார்த்தது அதுதான் முதல் முறையாகும். அஸ்வின் தாக்கத்தை ஏற்படுத்தாததன் விளைவு இப்போது தொடரை 1-3 என்ற கணக்கில் இழந்து நிற்கிறோம்.

அஸ்வின் நேர்த்தியான பந்து வீச்சாளர், இந்திய மண்ணில் நிறைய சாதித்து இருக்கிறார். ஆனால் இங்கு தேவையான நேரத்தில் சோபிக்க தவறிவிட்டார். 3-வது நாளில் அவர் 2-3 விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்தால், இந்தியா 160-170 ரன்களை தான் இலக்காக எதிர்கொள்ள வேண்டியது இருந்திருக்கும். அதை எளிதில் எட்டியிருக்க முடியும்’ என்றார்.

Next Story