“உலகின் சிறந்த பேட்ஸ்மேன் விராட்கோலி” - ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் இயான் சேப்பல் புகழாரம்
உலகின் சிறந்த பேட்ஸ்மேன் விராட்கோலிதான் என்று ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் இயான் சேப்பல் புகழாரம் சூட்டியுள்ளார்.
புதுடெல்லி,
இந்த காலகட்டத்தில் உலகின் சிறந்த பேட்ஸ்மேன் விராட்கோலி என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் இயான் சேப்பல் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் இயான் சேப்பல் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
கிரிக்கெட்டுக்குரிய பாரம்பரியமான ஷாட் மற்றும் அபாரமான உடல் தகுதியின் மூலம் இந்த காலகட்டத்தில் உலகின் சிறந்த பேட்ஸ்மேனாக விராட்கோலி விளங்குகிறார். விராட்கோலி, ஸ்டீவன் சுமித் (ஆஸ்திரேலியா), கேன் வில்லியம்சன் (நியூசிலாந்து), ஜோரூட் (இங்கிலாந்து) ஆகிய நால்வரில் விராட்கோலியே மூன்று வடிவிலான போட்டியிலும் சந்தேகத்துக்கு இடமின்றி சிறந்தவர் ஆவார். 3 வடிவிலான போட்டியிலும் விராட்கோலியின் சாதனை நம்ப முடியாத வகையில் இருக்கிறது. அதிலும் குறிப்பாக குறுகிய வடிவிலான போட்டியில் அவரது சாதனை அற்புதமானது.
விராட்கோலியின் பேட்டிங் அணுகுமுறை எனக்கு ரொம்பவும் பிடித்ததாகும். கடந்த முறை இந்திய அணி ஆஸ்திரேலிய வந்து விளையாடிய போது விராட்கோலியை பேட்டி கண்டோம். அப்போது அவர் குறிப்பாக 20 ஓவர் போட்டியில் புதிய ஷாட்களை ஆடுவது இல்லை ஏன்? என்பது குறித்து விளக்கம் அளித்தார். அத்துடன் டெஸ்ட் போட்டியில் அதுபோன்ற ஷாட்கள் புகுவதை தான் விரும்பவில்லை என்றும் கூறினார். நான் விளையாடிய காலத்தில் சிறந்த அதிரடி ஆட்டக்காரர் விவியன் ரிச்சர்ட்ஸ் (வெஸ்ட்இண்டீஸ்). சாதாரணமான ஷாட்களையே ஆடும் அவர் இடைவெளி பார்த்து அந்த திசையில் பந்தை விரட்டுவார். வேகமாக ரன்களை சேர்ப்பார். அவரை போலத்தான் விராட்கோலியும் விளையாடுகிறார். பாரம்பரிய கிரிக்கெட் ஷாட்களை ஆடுகிறார். அதனை உண்மையிலேயே நன்றாக விளையாடுகிறார்.
மற்றவர்களிடம் இருந்து விராட்கோலியை வேறுபடுத்தி தனித்துவமாக காட்டுவது அவரது உடல் தகுதி மற்றும் ரன்னுக்காக ஓடும் வேகம் ஆகியவையாகும். உடல் தகுதி அவரது ஆட்ட முன்னேற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. அவரது சில செயல்பாடுகள் மிகவும் அருமையாக இருக்கிறது.கேப்டன்ஷிப்பை பொறுத்தமட்டில் விராட்கோலியின் சிறப்பம்சம் என்னவென்றால் தோல்வியை கண்டு அஞ்சமாட்டார். வெற்றி பெற முயற்சிக்கும் போது தோல்வி அடைந்தால் கூட அதனை பொருட்படுத்தமாட்டார். எந்த தருணத்திலும் வெற்றியையே முன்னிறுத்துவார். விராட்கோலியின் இந்த அணுகுமுறை எனக்கு பிடித்ததாகும். அந்த அணுகுமுறையை தான் எல்லா கேப்டனும் கடைப்பிடிக்க வேண்டும். கேப்டன் பதவியை ஏற்கையில் அவர் மிகவும் உணர்ச்சிகரமானவராக இருந்தார். அதனால் அவரது கேப்டன்ஷிப் பாதிக்கப்படும் என்று நான் நினைத்தேன். ஆனால் அவர் தனது இந்த குணத்தையே கேப்டன்ஷியில் சிறந்து விளங்க சாதகமாக பயன்படுத்தி கொண்டார். அவர் மிகவும் புத்திசாலித்தனமான கிரிக்கெட் வீரர் என்று அவர் கூறினார்.
Related Tags :
Next Story