ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இருந்து ஹர்பஜன்சிங் விலகல் - சென்னை அணிக்கு மேலும் ஒரு சறுக்கல்


ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இருந்து ஹர்பஜன்சிங் விலகல் - சென்னை அணிக்கு மேலும் ஒரு சறுக்கல்
x
தினத்தந்தி 5 Sep 2020 12:38 AM GMT (Updated: 5 Sep 2020 12:38 AM GMT)

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இருந்து சென்னை அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங், சொந்த காரணங்களுக்காக விலகினார்.

மும்பை,

8 அணிகள் இடையிலான 13-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 19-ந்தேதி முதல் நவம்பர் 10-ந்தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய இடங்களில் நடக்கிறது. இதையொட்டி கடந்த 21-ந்தேதி துபாய் சென்ற டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அங்கு 6 நாட்கள் தனிமைப்படுத்துதல் நடைமுறை முடிவடைவதற்குள் கொரோனா பிரச்சினையில் சிக்கியது. சென்னை அணி வீரர்கள் தீபக் சாஹர், ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் உதவியாளர்கள், வலை பயிற்சி பவுலர்கள் என்று 13 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டது பரிசோதனையில் தெரியவந்தது. இதையடுத்து இந்த 13 பேரும் மேலும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். சென்னை அணி பயிற்சியை தொடங்குவதும் தாமதம் ஆனது.

எஞ்சிய வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு கூடுதலாக இரண்டு முறை கொரோனா பரிசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டது. இதன்படி 2-வது கட்ட பரிசோதனை முடிவில் எந்த வீரர்களுக்கும் கொரோனா தொற்று இல்லை என்பதை குறிக்கும் ‘நெகட்டிவ்’ முடிவு வந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக சென்னை அணி வீரர்கள் துபாயில் முதல்முறையாக நேற்று உற்சாகமாக பயிற்சியில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மேலும் ஒரு பின்னடைவாக மூத்த சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங் நேற்று ஐ.பி.எல். போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். ஏற்கனவே துணை கேப்டன் சுரேஷ் ரெய்னா கொரோனா அச்சத்தால் விலகியது சலசலப்பை உருவாக்கிய நிலையில், அந்த வரிசையில் ஹர்பஜன்சிங்கும் இணைந்துள்ளார்.

இது குறித்து ஹர்பஜன்சிங் கூறுகையில், ‘இந்த ஆண்டு ஐ.பி.எல். போட்டியில் விளையாடுவதில்லை என்ற முடிவை சென்னை அணி நிர்வாகத்திடம் தெரிவித்து விட்டேன். இந்த கடினமான காலக்கட்டத்தில் தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த முடிவை எடுத்திருக்கிறேன். சிலவேளைகளில் விளையாட்டை விட குடும்பமே முக்கியமாகி விடும். இப்போது எனது குடும்பத்தினர் மீதே முழு கவனமும் உள்ளது. நிலைமையை புரிந்து கொண்டு எனது முடிவுக்கு ஆதரவளித்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகத்துக்கு நன்றி கடன்பட்டுள்ளேன்.

இந்த ஐ.பி.எல். சீசனில் சென்னை அணி மீண்டும் ஒரு முறை அசத்தும் என்று நம்புகிறேன். நான் இந்தியாவில் இருந்தாலும் எனது மனமெல்லாம் அமீரகத்தில் உள்ள அணியுடனே இருக்கும்’ என்றார்.

40 வயதான ஹர்பஜன்சிங் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் மும்பை மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 160 ஆட்டங்களில் விளையாடி 150 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். சென்னை அணி அவரை ரூ.2 கோடிக்கு ஏலத்தில் எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஹர்பஜன்சிங், ரெய்னாவுக்கு பதிலாக மாற்று வீரர்கள் விரைவில் அறிவிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story