விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் போட்டி: மராட்டிய அணிக்கு கேப்டனான சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்


விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் போட்டி: மராட்டிய அணிக்கு கேப்டனான சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்
x
தினத்தந்தி 8 Dec 2021 11:54 AM GMT (Updated: 8 Dec 2021 11:54 AM GMT)

விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இன்று மத்தியப் பிரதேசத்துடன் மராட்டிய அணி தனது முதல் போட்டியில் ஆடிவருகிறது.

மும்பை,

20-வது விஜய் ஹசாரே கோப்பைக்கான உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர் இன்று முதல் வருகிற 27-ந் தேதி வரை நடக்கிறது. இதன் லீக் சுற்று ஆட்டங்கள் மும்பை, கவுகாத்தி, திருவனந்தபுரம், சண்டிகார், ராஜ்கோட், ராஞ்சி ஜெய்ப்பூர் ஆகிய 7 நகரங்களில் நடக்கிறது. ‘நாக்-அவுட்’ சுற்று ஆட்டங்கள் ஜெய்ப்பூரில் அரங்கேறுகிறது.

இந்த போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை, 5 முறை சாம்பியனான தமிழ்நாடு உள்பட 38 அணிகள் கலந்து கொள்கின்றன. அவை 6 பிரிவாக பிரிக்கப்பட்டு இருக்கின்றன. லீக் சுற்று முடிவில் எலைட் பிரிவில் முதலிடம் பிடிக்கும் 5 அணிகள் நேரடியாக கால்இறுதிக்கு முன்னேறும். ‘பிளேட்’ பிரிவில் முதலிடம் பிடிக்கும் அணி, எலைட் பிரிவில் 2-வது இடம் பிடிக்கும் அணிகள் கால்இறுதிக்கு முந்தைய சுற்றில் மோதும். இதில் வெற்றி பெறும் 3 அணிகள் கால்இறுதியை எட்டும்.

இதில் எலைட் குரூப் டி-யில் மராட்டிய அணி, மத்திய பிரதேஷ், சட்டிஸ்கர், கேரளா, உத்தராகண்ட், சண்டிகர் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன. இதில் 20 வீரர்கள் கொண்ட மராட்டிய அணிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். மற்றொரு ஐ.பி.எல். நட்சத்திரம் ராகுல் திரிபாதி, துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்று மத்தியப் பிரதேசத்துடன் மராட்டிய அணி தனது முதல் போட்டியில் ஆடிவருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த  மத்தியப் பிரதேச அணி, 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 328 ரன்கள் எடுத்துள்ளது. அடுத்து பேட்டிங் செய்து வரும் மராட்டிய அணி, தற்போது வரை 25 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்து தொடர்ந்து விளையாடி வருகிறது. 

Next Story