'சிறந்த கேப்டன் கோலி; மோசமான கேப்டன் ஜோ ரூட்' - இயான் சேப்பல் விமர்சனம்


சிறந்த கேப்டன் கோலி; மோசமான கேப்டன் ஜோ ரூட் - இயான் சேப்பல் விமர்சனம்
x
தினத்தந்தி 30 Jan 2022 10:14 PM GMT (Updated: 30 Jan 2022 10:14 PM GMT)

விராட் கோலி, கேப்டன் ஜோ ரூட் ஆகியோரின் கேப்டன்ஷிப்பை ஒப்பிட்டு ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் இயான் சேப்பல் பேட்டி அளித்துள்ளார்.

சிட்னி, 

சமீபத்தில் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகிய விராட் கோலி, ஆஷஸ் தொடரில் படுதோல்வியை தழுவிய இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் ஆகியோரின் கேப்டன்ஷிப்பை ஒப்பிட்டு ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் இயான் சேப்பல் இணையதளம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலி மிகச்சிறந்த கேப்டன் என்பதில் சந்தேகமில்லை. அவர் களத்தில் தனது ஆக்ரோஷத்தையும், அதீத ஆர்வத்தையும் எப்போதும் குறைத்து கொண்டதில்லை. இப்போதும் இந்திய அணியை உயரிய நிலையில் வழிநடத்தும் திறமை அவரிடம் உண்டு. 2018-19-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவிலும், 2021-ம் ஆண்டில் இங்கிலாந்திலும் டெஸ்ட் தொடரை வென்றது அவரது குறிப்பிடத்தக்க சாதனைகளாகும். 

கிட்டத்தட்ட சொந்த மண்ணில் தோற்கடிக்க முடியாத அணியாக வலம் வந்தது. சவுரவ் கங்குலி, டோனி ஆகியோரின் வழியை பின்பற்றி இந்த 7 ஆண்டுகளில் இந்திய கிரிக்கெட்டை மேலும் வலுப்படுத்தினார். அண்மையில் தென்ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரை இழந்தது தான் அவருக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக இருந்திருக்கும்.

ஜோ ரூட்டோ கேப்டன் பதவியில் தோல்வி அடைந்து விட்டார். இத்தனைக்கும் அவர் தான் இங்கிலாந்து அணியில் அதிகமான போட்டிகளுக்கு கேப்டனாக இருந்தவர். ரூட்டை பொறுத்தவரை சிறந்த பேட்ஸ்மேன். ஆனால் ஒரு மோசமான கேப்டன். இவ்வாறு இயான் சேப்பல் கூறியுள்ளார்.

Next Story