2-வது ஒருநாள் போட்டி; வங்காளதேசத்தை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய நியூசிலாந்து..!


2-வது ஒருநாள் போட்டி; வங்காளதேசத்தை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய நியூசிலாந்து..!
x

image courtesy; twitter/@ICC

வங்காளதேச கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று ஆடி வருகிறது.

வெலிங்டன்,

வங்காளதேச கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று ஆடி வருகிறது. இதில் இவ்விரு அணிகளுக்கு இடையே முதலில் ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது.

அதன்படி ஏற்கனவே நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றிருந்தது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையேயான 2-வது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த வங்காளதேச அணியில் தொடக்க ஆட்டக்காரர் சவுமியா சர்க்கார் தவிர மற்ற வீரர்கள் நியூசிலாந்து பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் விரைவில் ஆட்டமிழந்தனர். தனி ஆளாக போராடிய சவுமியா சர்க்கார் சதமடித்து அசத்தினார். அவருக்கு சிறிது நேரம் ஒத்துழைப்பு கொடுத்த முஷ்பிகுர் ரஹீம் 45 ரன்கள் அடித்தார்.

மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். இறுதியில் 49.5 ஓவர்கள் வரை தாக்குப்பிடித்த வங்காளதேச அணி 291 ரன்களில் ஆல் அவுட் ஆனது. வங்காளதேச அணி தரப்பில் அதிகபட்சமாக சவுமியா சர்க்கார் 169 ரன்கள் அடித்தார். நியூசிலாந்து அணி தரப்பில் ஜேக்கப் டபி மற்றும் வில்லியம் ஓரோர்கே ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இதனையடுத்து 296 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் வலுவான அடித்தளம் அமைத்து கொடுத்தனர். அதனால் எந்தவித சிக்கலுமின்றி இலக்கை நோக்கி பயணித்த நியூசிலாந்து அணி 46.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி பெற்றது. நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக ஹென்றி நிக்கோல்ஸ் 95 ரன்கள் அடித்தார். வங்காளதேச அணி தரப்பில் அதிகபட்சமாக ஹசன் மஹ்மூத் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை நியூசிலாந்து 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.


Next Story