2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 182 ரன்கள் வெற்றி இலக்கு
இந்திய அணிக்கு எதிரான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 182 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
பிரிட்ஜ்டவுன்,
வெஸ்ட் இண்டீஸ்- இந்தியா அணிகளுக்கிடையிலான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி பிரிட்ஜ்டவுனில் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் கேப்டன் ரோகித் சர்மா , விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. இதனால் இந்திய அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா செயல்படுகிறார். இந்திய அணியில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது.
பின்னர் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக சுப்மன் கில்லும், இஷான் கிஷனும் களமிறங்கினர். இருவரும் அணிக்கு சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். இந்த ஜோடியில் சுப்மன் கில் 34 ரன்கள் வெளியேற அவரைத்தொடர்ந்து, இஷான் கிஷன் அரைசதம் அடித்திருந்தநிலையில் 55 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அடுத்துவந்த பேட்ஸ்மேன்கள் வருவதும் போவதுமாய் இருந்தனர். அதில் அக்சர் படேல்(1), ஹர்திக் பாண்ட்யா(7), சாம்சன்(9), ஜடேஜா (10), சிறிது தாக்குப்பிடித்த சூர்யகுமார் யாதவ் (24), ஷர்துல் தாக்கூர் (16), உம்ரன் மாலில் (0) முகேஷ் குமார் (6) ரன்களும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
முடிவில் இந்திய அணி 40.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 181 ரன்கள் எடுத்தது. குல்தீப் யாதவ் 8 ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். வெஸ்ட் இண்டீஸ் அணியின் சார்பில் அதிகபட்சமாக மோட்டி மற்றும் ஷெப்பர்டு ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளும், ஜோசப் 2 விக்கெட்டுகளும் எடுத்தனர்.
இதனைத்தொடர்ந்து 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்க உள்ளது.