2வது டி20 போட்டி; இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோதல்


2வது டி20 போட்டி;   இந்தியா -  ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோதல்
x
தினத்தந்தி 7 Jan 2024 6:32 AM IST (Updated: 7 Jan 2024 6:34 AM IST)
t-max-icont-min-icon

இந்தியா-ஆஸ்திரேலியா பெண்கள் அணிகள் இடையிலான 2-வது டி20 போட்டி நவிமும்பையில் உள்ள டி.ஒய்.பட்டீல் ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது.

மும்பை,

அலிசா ஹீலி தலைமையிலான ஆஸ்திரேலிய பெண்கள் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான ஒரே ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடரை இந்திய அணி கைப்பற்றியது. இதையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா கைப்பற்றியது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதலாவது ஆட்டம் நவிமும்பையில் நடைபெற்றது.

இந்த ஆட்டத்தில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இந்தியா-ஆஸ்திரேலியா பெண்கள் அணிகள் இடையிலான 2-வது டி20 போட்டி நவிமும்பையில் உள்ள டி.ஒய்.பட்டீல் ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை முதல்முறையாக கைப்பற்ற இந்திய அணி தீவிரம் காட்டும். அதேநேரத்தில் இன்றைய ஆட்டத்தில் தோற்றால் தொடரை இழக்க நேரிடும் என்பதால் வெற்றிக்காக ஆஸ்திரேலிய அணி வரிந்து கட்டும். எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.

இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்போர்ட்ஸ் 18 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.


Next Story