தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டி20 கிரிக்கெட்: 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரை ஆஸ்திரேலிய அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.
கேப்டவுன்,
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் மற்றும் 5 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையே முதலில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது
முதலாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 111 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆஸ்திரேலியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இதனைத் தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கு இடையேயான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மிட்செல் மார்ஷ் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் செய்தது.
தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ஆர்.ஹெண்ட்ரிக்ஸ் 3 ரன்களில் அவுட் ஆகி வெளியேற, அடுத்து களமிறங்கிய வான் டெர் டசென் 6 ரன்களில் விக்கெட்டை இழந்தார். இதையடுத்து மற்றொரு தொடக்க வீரர் பவுமாவுடன் கேப்டன் மார்க்ரம் ஜோடி சேர்ந்தார்.
இதில் பவுமா 35 ரன்களில் கேட்ச் ஆகி வெளியேறினார். அரை சதத்தை நோக்கி முன்னேறிய மார்க்ரம் 49 ரன்களில் கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார். அடுத்து வந்த டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 27 ரன்கள் எடுத்து போல்ட் ஆனார். இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் தென் ஆப்பிரிக்கா அணி 8 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் சேர்த்தது.
ஆஸ்திரேலிய அணியில் பெஹ்ரெண்டார்ப் 2 விக்கெட்டுகளும், அபாட் மற்றும் நாதன் எலீஸ் தலா 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி விளையாடியது.
தொடக்க ஆட்டக்காரர்களாக மேத்யூ ஷார்ட்-டிரேவிஸ் ஹெட் களமிறங்கினர். இதில் டிரேவிஸ் ஹெட் 18 ரன்களில் கேட்ச் ஆகி வெளியேற, அடுத்து களமிறங்கிய கேப்டன் மிட்செல் மார்ஷ், மேத்யூ ஷார்ட்டுடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி தென் ஆப்பிரிக்காவின் பந்துவீச்சை நாளா பக்கமும் சிதறடித்தது.
25 பந்துகளில் அரை சதத்தைக் கடந்த மேத்யூ ஷார்ட், 30 பந்துகளில் 7 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் விளாசி 66 ரன்களில் ஆட்டமிழந்தார். மறுபுறம் அதிரடி காட்டிய மிட்செல் மார்ஷ், 39 பந்துகளில் 8 பவுண்டரிகள், 6 சிகஸ்ர்களுடன் 79 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.
இதையடுத்து ஆஸ்திரேலிய அணி 14.5 ஓவர்களில் 165 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை ஆஸ்திரேலிய அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.