நியூசிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட்; முதல் நாள் ஆட்ட நேர முடிவில் தென் ஆப்பிரிக்கா 220/6


நியூசிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட்; முதல் நாள் ஆட்ட நேர முடிவில் தென் ஆப்பிரிக்கா 220/6
x

Image Courtesy: @ICC

நியூசிலாந்து தரப்பில் ரச்சின் ரவீந்திரா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

ஹாமில்டன்,

தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இதில் முதல் போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2வது டெஸ்ட் போட்டி ஹாமில்டனில் இன்று தொடங்கியது. இந்த ஆட்டத்துக்கான டாசில் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதையடுத்து தென் ஆப்பிரிக்காவின் தொடக்க ஆட்டக்காரர்களாக நீல் பிராண்ட், க்ளைட் பார்டுயின் ஆகியோர் களம் இறங்கினர்.

இதில் க்ளைட் பார்டுயின் டக் அவுட் ஆனார். இதையடுத்து ரேனார்ட் வான் டோண்டர் களம் இறங்கினார். இதில் நீல் பிராண்ட் 25 ரன்னிலும், ரேனார்ட் வான் டோண்டர் 32 ரன்னிலும் அடுத்து வந்த சுபைர் ஹம்சா 20 ரன்னிலும், டேவிட் பெடிங்காம் 39 ரன்னிலும், கீகன் பீட்டர்சன் 2 ரன்னிலும் அடுத்தடுத்து அவுட் ஆகினர்.

இதையடுத்து ருவான் டி ஸ்வார்ட் மற்றும் ஷான் வான் பெர்க் ஜோடி சேர்ந்தனர். இருவரும் நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தனர். இதில் ருவான் டி ஸ்வார்ட் அரைசதம் அடித்து அசத்தினார். இறுதியில் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் தென் ஆப்பிரிக்கா 89 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 220 ரன்கள் எடுத்தது. நியூசிலாந்து தரப்பில் ரச்சின் ரவீந்திரா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். 2ம் நாள் ஆட்டம் நாளை நடைபெறுகிறது.


Next Story