தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: பென் ஸ்டோக்ஸ் அபார சதம்


தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: பென் ஸ்டோக்ஸ் அபார சதம்
x

Image Courtesy: Twitter @ICC

தினத்தந்தி 26 Aug 2022 7:24 PM GMT (Updated: 26 Aug 2022 7:26 PM GMT)

இங்கிலாந்து அணியை விட தென் ஆப்பிரிக்கா 241 ரன்கள் பின்தங்கியுள்ளது.

மான்செஸ்டர்,

தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. தென் ஆப்பிரிக்கா அணி முதல் போட்டியில் அபார வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

2-வது டெஸ்ட் மான்செஸ்டரில் நேற்று முன்தினம் தொடங்கியது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரர்க களமிறங்கிய கேப்டன் டீன் எல்கார் 12 ரன்களில் ஆட்டமிழந்தார். சாரெல் எர்வீ 3 ரன்களில் ஆட்டமிழக்க, பீட்டர்சன் 21 ரன்கள் எடுத்திருந்த போது ஆட்டமிழந்தார்.

இதனைத் தொடர்ந்து இங்கிலாந்து பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்த வீரர்கள் பெவிலியன் திரும்பினர். நட்சத்திர வீரர்கள் ஆண்டர்சன், பிராடு கூட்டணி தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். ரபாடா மட்டும் அதிகபட்சமாக 36 ரன்கள் சேர்க்க, தென்னாப்பிரிக்க அணி 151 ரன்களுக்கு சுருண்டது.

இதனையடுத்து. இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் களமிறங்கியது அலெக்ஸ் லீஸ் 4 ரன்களிலும், ஜோ ரூட் 9 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்பிற்கு 111 ரன்கள் எடுத்து இருந்தது.

நேற்று 2-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. ஜாக் கிராலி 38 ரன்களிலும் ஆட்டமிழக்க, போப் 23 ரன்களில் போல்ட் ஆனார். இதனையடுத்து இங்கிலாந்து அணி தடுமாற, களத்துக்கு வந்த பென் ஸ்டோக்ஸ், தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இதனையடுத்து டெஸ்ட் கேப்டனாக தனது முதல் சதத்தை பென் ஸ்டோக்ஸ் பூர்த்தி செய்து 103 ரன்களில் ஆட்டமிழந்தார். இதே போன்று விக்கெட் கீப்பர் பென் ஃபோக்ஸ் பொறுப்புடன் விளையாடி முதல் சதத்தை விளாச, இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 400 ரன்களை கடந்தது.

9 விக்கெட் இழப்பிற்கு அந்த அணி 415 ரன்கள் எடுத்திருந்தபோது கேப்டன் ஸ்டோக்ஸ் முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தார். இதனை தொடர்ந்து 264 ரன்கள் பின்தங்கிய நிலையில் தென் ஆப்பிரிக்கா அணி 2-வது இன்னிங்சை தொடங்கியது.

2-வது நாள் ஆட்ட நேர முடிவில் அந்த அணி விக்கெட் இழப்பின்றி 23 ரன்கள் எடுத்துள்ளது. இங்கிலாந்து அணியை விட தென் ஆப்பிரிக்கா 241 ரன்கள் பின்தங்கியுள்ளது. 3-வது நாள் ஆட்டம் இன்று நடைபெறுகிறது.


Next Story