இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்ட்: முதல் நாள் ஆட்டநேர முடிவில் பாகிஸ்தான் 145/2


இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்ட்: முதல் நாள் ஆட்டநேர முடிவில் பாகிஸ்தான் 145/2
x

image courtesy: Pakistan Cricket twitter

இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் முதல் நாள் ஆட்டநேர முடிவில் பாகிஸ்தான் 2 விக்கெட்டுக்கு 145 ரன்கள் எடுத்துள்ளது.

கொழும்பு,

இலங்கைக்கு சென்றுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. காலேயில் நடந்த முதலாவது டெஸ்டில் பாகிஸ்தான் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இலங்கை - பாகிஸ்தான் அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி கொழும்பில் உள்ள எஸ்.எஸ்.சி. ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது. இலங்கை அணியில் இரு மாற்றமாக கசுன் ரஜிதா, விஷ்வா பெர்னாண்டோ நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக அசிதா பெர்னாண்டோ மற்றும் புதுமுக இடக்கை வேகப்பந்து வீச்சாளர் தில்ஷன் மதுஷன்கா சேர்க்கப்பட்டனர்.

'டாஸ்' ஜெயித்த இலங்கை கேப்டன் கருணாரத்னே பேட்டிங்கை தேர்வு செய்தார். அவுட் பீல்டு ஈரப்பதம் காரணமாக சற்று தாமதமாக தொடங்கிய இந்த டெஸ்டில் முதலில் பேட் செய்த இலங்கை வீரர்கள் பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சில் திணறினர். தொடக்க வீரர் நிஷான் மதுஷ்கா 4 ரன்னில் ரன்-அவுட் ஆனார். குசல் மென்டிஸ் (6 ரன்), மேத்யூஸ் (9 ரன்), கருணாரத்னே (17 ரன்) வரிசையாக வேகப்பந்து வீச்சுக்கு இரையானார்கள். 36 ரன்னுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்த இலங்கை அணியை தினேஷ் சன்டிமாலும், தனஞ்ஜெயா டி சில்வாவும் ஓரளவு மீட்டனர்.

அணியின் ஸ்கோர் 121-ஐ எட்டிய போது சன்டிமால் (34 ரன்), நசீம் ஷா வீசிய 'ஷாட்பிட்ச்' பந்தை தூக்கியடித்து கேட்ச் ஆனார். இதன் பிறகு பின்வரிசை பேட்டர்களை சுழற்பந்து வீச்சாளர் அப்ரார் அகமது காலி செய்து முற்றிலும் சீர்குலைத்தார். விக்கெட் கீப்பர் சமரவிக்ரமா (0), தனஞ்ஜெயா டி சில்வா (57 ரன், 68 பந்து, 9 பவுண்டரி, ஒரு சிக்சர்), ரமேஷ் மென்டிஸ் (27 ரன்) அவரது சுழல் வலையில் சிக்கினர். பெரும்பாலான இலங்கை பேட்ஸ்மேன்களின் ஷாட்தேர்வு மோசமாக இருந்தது. அதே சமயம் பாகிஸ்தான் பந்துவீச்சு மட்டுமின்றி பீல்டிங்கிலும் கலக்கியது.

முடிவில் இலங்கை அணி முதல் இன்னிங்சில் 48.4 ஓவர்களில் 166 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இந்த மைதானத்தில் 2001-ம் ஆண்டுக்கு பிறகு இலங்கையின் குறைந்த ஸ்கோர் இதுவாகும். பாகிஸ்தான் தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் அப்ரார் அகமது 4 விக்கெட்டும், வேகப்பந்து வீச்சாளர் நசீம் ஷா 3 விக்கெட்டும் சாய்த்தனர்.

அடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் ஆட்ட நேர முடிவில் 28.3 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 145 ரன்கள் எடுத்து நல்ல நிலையில் உள்ளது. இமாம் உல்-ஹக் 6 ரன்னிலும், ஷான் மசூத் 51 ரன்னிலும் கேட்ச் ஆனார்கள். அப்துல்லா ஷபிக் 74 ரன்களுடனும் (99 பந்து, 7 பவுண்டரி, 2 சிக்சர்), கேப்டன் பாபர் அசாம் 8 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இன்று 2-வது நாள் ஆட்டம் நடைபெறும்.


Next Story