4வது டி-20 போட்டி: 3 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி திரில் வெற்றி


4வது டி-20 போட்டி: 3 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி திரில் வெற்றி
x

இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டி-20 போட்டியில் 3 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றிபெற்றது.

கராச்சி,

இங்கிலாந்து அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 7 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் இதுவரை 3 போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. 3 போட்டிகளின் முடிவில் 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில் தொடரின் 4வது ஆட்டம் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சைத்தேர்வு செய்தது. இதன்படி பாகிஸ்தான் அணி பேட்டிங் செய்தது. அந்த அணியின் சார்பில் முதலாவதாக களமிறங்கிய முகமது ரிஸ்வான் மற்றும் கேப்டன் பாபர் அசாம் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ரன்ரேட்டை உயர்த்தினர்.

இறுதியில் பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஒவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ரிஸ்வான் 88 (67) ரன்களும், பாபர் அசாம் 36 (28) ரன்களும் எடுத்தனர். இங்கிலாந்து அணியின் சார்பில் அதிகபட்சமாக டாப்லே 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதனைத்தொடர்ந்து 167 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணியின் சார்பில் பிலிப் சால்ட் மற்றும் ஹேல்ஸ் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். பாகிஸ்தான் அணியின் சிறப்பான பந்து வீச்சால் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்தன. இருந்த போதும் இங்கிலாந்து அணியின் டுக்கெட் 33 ரன்களும், பூருக் 34 ரன்களும் எடுத்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். அடுத்து களமிறங்கிய கேப்டன் மொயின் அலி 29 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கி அதிரடி காட்டிய டேவ்சன் 34 (17) ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய வீரர்களும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தார்.

இறுதியில் அடில் ரஷித் 3 ரன்கள் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். முடிவில் இங்கிலாந்து அணி 19.2 ஒவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 163 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் அணியின் சார்பில் அதிகபட்சமாக முகமது நவாஸ் மற்றும் ஹரிஸ் ரூப் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளும், ஹஸ்நைன் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இதன்மூலம் இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டி-20 போட்டியில் 3 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றிபெற்றது.

இதன்படி 7 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் 2-2 என்ற கணக்கில் பாகிஸ்தான், இங்கிலாந்து அணிகள் சமநிலையில் உள்ளன.


Next Story