4-வது டெஸ்ட்: அரைசதம் விளாசினார் இந்திய வீரர் துருவ் ஜூரெல்


4-வது டெஸ்ட்: அரைசதம் விளாசினார் இந்திய வீரர் துருவ் ஜூரெல்
x
தினத்தந்தி 25 Feb 2024 5:57 AM GMT (Updated: 25 Feb 2024 6:03 AM GMT)

ராஞ்சியில் நடைபெறும் 4-வது டெஸ்டில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 353 ரன்னில் ஆல்-அவுட் ஆனது.

ராஞ்சி,

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் இந்தியா-இங்கிலாந்து இடையிலான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நேற்று முன்தினம் தொடங்கியது.

'டாஸ்' ஜெயித்து முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி முதல் நாள் ஆட்டம் முடிவில் 90 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 302 ரன்கள் எடுத்திருந்தது. 31-வது சதம் விளாசிய ஜோ ரூட் 106 ரன்களுடனும், ஆலிராபின்சன் 31 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

நேற்று 2-வது நாள் ஆட்டம் நடந்தது. ஜோ ரூட், ஆலி ராபின்சன் தொடர்ந்து ஆடினர். ராபின்சன் வேகமாக மட்டையை சுழற்றினார். ஆகாஷ் தீப் வீசிய ஒரு ஓவரில் 3 பவுண்டரி விளாசிய ஆலி ராபின்சன், ரவீந்திர ஜடேஜா பந்து வீச்சில் பவுண்டரி விரட்டி தனது முதலாவது அரைசதத்தை (81 பந்துகளில்) கடந்தார்.

அபாரமாக ஆடிய ஆலி ராபின்சன் 58 ரன்னில் (96 பந்து, 9 பவுண்டரி, ஒரு சிக்சர்) ரவீந்திர ஜடேஜா பந்து வீச்சில் 'ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட்' ஆட முயற்சித்து விக்கெட் கீப்பர் துருவ் ஜூரெலிடம் கேட்ச் ஆனார். அடுத்து வந்த சோயிப் பஷீர் (0) அதே ஓவரில் பாயிண்ட் பகுதியில் நின்ற ரஜத் படிதாரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். கடைசி விக்கெட்டாக ஜேம்ஸ் ஆண்டர்சன் (0) ரவீந்திர ஜடேஜா பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனார். நடுவரின் இந்த முடிவை எதிர்த்து செய்த அப்பீல் வீணானது.

104.5 ஓவர்களில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 353 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. ஜோ ரூட் 274 பந்துகளில் 10 பவுண்டரியுடன் 122 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய அணி தரப்பில் ரவீந்திர ஜடேஜா 4 விக்கெட்டும், ஆகாஷ் தீப் 3 விக்கெட்டும், முகமது சிராஜ் 2 விக்கெட்டும், ஆர்.அஸ்வின் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

இதைத்தொடர்ந்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேப்டன் ரோகித் சர்மா ஆகியோர் களம் இறங்கினர். இங்கிலாந்து பவுலர்கள் துல்லியமாக பந்து வீசி நெருக்கடி கொடுத்தனர். ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு அனுகூலமாக இருந்ததுடன், பந்து சமமற்ற முறையில் பவுன்சும் ஆனது. கடந்த டெஸ்டில் சதம் விளாசிய ரோகித் சர்மா (2 ரன்) 3-வது ஓவரில் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்து வீச்சை தடுத்து ஆட முயற்சித்தார். ஆனால் பந்து அவரது பேட்டில் உரசியபடி விக்கெட் கீப்பர் பென் போக்ஸ் கையில் சிக்கியதால் வெளியேறினார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜேம்ஸ் ஆண்டர்சனின் விக்கெட் எண்ணிக்கை 697 ஆக அதிகரித்தது.

இதனையடுத்து சுப்மன் கில், ஜெய்ஸ்வாலுடன் கைகோர்த்தார். இருவரும் நேர்த்தியாக அடித்து ஆடி அணியின் ஆரம்ப சரிவை சமாளித்தனர். ஸ்கோர் 86 ரன்னை எட்டியபோது சுப்மன் கில் 38 ரன்னில் (65 பந்து, 6 பவுண்டரி) சோயிப் பஷீர் சுழலில் எல்.பி.டபிள்யூ. ஆனார். இந்த முடிவை எதிர்த்து கில் செய்த அப்பீலுக்கு பலன் கிட்டவில்லை.

அடுத்து ரஜத் படிதார் களம் புகுந்தார். அதன் பிறகு விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் வீழ்ந்தன. நிலைத்து நின்று சிறப்பாக ஆடிய ஜெய்ஸ்வால் 89 பந்துகளில் தனது 3-வது அரைசதத்தை எட்டினார். அவருடன் இணைந்த ரஜத் படிதார் 17 ரன்னிலும், 2 சிக்சர் தூக்கி அசத்திய ரவீந்திர ஜடேஜா 12 ரன்னிலும் சோயிப் பஷீர் சுழலில் விக்கெட்டை பறிகொடுத்தனர். பொறுப்புடன் ஆடிய தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் 73 ரன்னில் (117 பந்து, 8 பவுண்டரி, ஒரு சிக்சர்) சோயிப் பஷீர் சுழலில் போல்டு ஆனார். அடுத்து வந்த சர்பராஸ் கான் (14 ரன்), ஆர்.அஸ்வின் (1 ரன்) ஆகியோர் நிலைக்கவில்லை.

8-வது விக்கெட்டுக்கு குல்தீப் யாதவ், விக்கெட் கீப்பர் துருவ் ஜூரெலுடன் இணைந்தார். இருவரும் நிதானமாகவும், நேர்த்தியாகவும் செயல்பட்டு விக்கெட் சரிவை தடுத்து நிறுத்தினர். இதன்படி நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் இந்திய அணி 73 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 219 ரன்கள் எடுத்தது.

துருவ் ஜூரெல் 30 ரன்களுடனும், குல்தீப் யாதவ் 17 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இங்கிலாந்து தரப்பில் சுழற்பந்து வீச்சாளர்கள் சோயிப் பஷீர் 4 விக்கெட்டும், டாம் ஹார்ட்லீ 2 விக்கெட்டும், வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இந்திய அணி 134 ரன்கள் பின்தங்கிய நிலையில் இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. அதில் இந்திய வீரர்கள் துருவ் ஜூரெல் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களை சேர்த்தனர். இந்நிலையில் குல்தீப் யாதவ் 28 ரன்களில் போல்ட் ஆகி வெளியேறினார். அடுத்ததாக துருவ் ஜூரெலுடன் ஆகாஷ் தீப் ஜோடி சேர்ந்தார்.

மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த துருவ் ஜூரெல் தனது அரை சதத்தை பதிவு செய்து அசத்தினார். தற்போது இந்திய அணி 100 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 287 ரன்கள் எடுத்து விளையாடி வருகின்றது. அதில் துருவ் ஜூரெல் 80 ரன்களுடனும், ஆகாஷ் தீப் 3 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

இந்திய அணி தற்போது இங்கிலாந்து அணியை விட 60 ரன்கள் பின் தங்கி உள்ளது. ஆடுகளம் சுழலுக்கு சாதமாக மாறி வருகிறது. இதனால் தற்போதைய நிலையில் இங்கிலாந்தின் கையே ஓங்கி இருக்கிறது.


Next Story