ஐசிசி கோப்பையை வென்றால் தான் தரமான அணியா...? - இந்திய அணிக்கு ஆதரவாக குரல் கொடுத்த பாக். முன்னாள் வீரர்...!


ஐசிசி கோப்பையை வென்றால் தான் தரமான அணியா...? - இந்திய அணிக்கு ஆதரவாக குரல் கொடுத்த பாக். முன்னாள் வீரர்...!
x

Image Courtesy: AFP

இந்திய அணி இந்த ஆண்டு இந்தியாவில் நடக்கும் ஒருநாள் உலக கோப்பைக்காக தீவிரமாக தயாராகிவருகிறது.

கராச்சி,

இந்திய அணி தற்போது இந்தியாவில் நடக்கும் ஒருநாள் உலக கோப்பைக்காக தீவிரமாக தயாராகிவருகிறது. 2013-ம் ஆண்டுக்கு பின் இந்திய அணி கடந்த 10 ஆண்டுகளாக எந்த ஐசிசி கோப்பையையும் வென்றதில்லை. 2015 மற்றும் 2019 ஒருநாள் உலக கோப்பைகளில் அரையிறுதியில் தோல்வி கண்டு தொடரை விட்டு வெளியேறியது.

2017-ல் நடந்த சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியில் பாகிஸ்தானிடம் தோலி கண்டு கோப்பையை இழந்தது. எனவே இந்த ஆண்டு இந்தியாவில் நடக்கும் ஒருநாள் உலக கோப்பையை வெல்ல வேண்டிய அழுத்தம் இந்திய அணிக்கு உருவாகியுள்ளது. அதனால் அதற்காக தீவிரமாக தயாராகி வருகிறது.

கேப்டன் டோனிக்கு பிறகு 2013-ம் ஆண்டுக்கு பின் கடந்த 10 ஆண்டுகளாக எந்த கேப்டனும் இந்திய அணிக்கு ஐசிசி கோப்பையை வென்று கொடுக்கவில்லை என்ற விமர்சனம் இருந்து வருகிறது. 10 ஆண்டுகளாக ஒரு உலக கோப்பையைக்கூட ஜெயிக்காதது குறித்து விவாதிக்கப்படுகிறது.

இந்நிலையில், ஐசிசி உலக கோப்பையை ஜெயிப்பது மட்டுமே கிரிக்கெட் அல்ல என்பதை உணர்த்தும் விதமாக இந்திய அணிக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார் பாகிஸ்தான் முன்னாள் வீரர் கம்ரான் அக்மல். இதுகுறித்து கம்ரான் அக்மல் பேசியதாவது:-

இந்திய அணி 10 ஆண்டுகளாக ஐசிசி கோப்பையை ஜெயிக்கவில்லை என்று பேசப்படுகிறது. ஒவ்வொரு முறையும் ஐசிசி கோப்பையை ஜெயித்துக்கொண்டே இருக்க முடியாது.

ஐசிசி கோப்பையை ஜெயிப்பது மட்டுமே முக்கியம் என்றால், இதுவரை ஒருமுறை கூட உலக கோப்பையை கைப்பற்றாத தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எல்லாம் தடை தான் விதிக்க வேண்டும். இந்திய அணி மிகச்சிறந்த கிரிக்கெட் அணி. வித்தியாசமான முறையில் விளையாடி வருகிறது.

இவ்வாறு கம்ரான் அக்மல் கூறியுள்ளார்.


Next Story