டி20-யில் 'நோ பால்' வீசுவது குற்றம் ஆனால்....' - டோனியின் எச்சரிக்கைக்கு பின் சென்னை வீரர் தேஷ்பாண்டே அதிரடி கருத்து


டி20-யில் நோ பால் வீசுவது குற்றம் ஆனால்.... - டோனியின் எச்சரிக்கைக்கு பின் சென்னை வீரர் தேஷ்பாண்டே அதிரடி கருத்து
x

வீரர்கள் புதிய கேப்டன் தலைமையில் விளையாட நேரிடும் என்று சென்னை கேப்டன் டோனி எச்சரிக்கை விடுத்திருந்தார்.

சென்னை,

16-வது ஐபிஎல் தொடர் கடந்த 31-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் சென்னை சேப்பாக்கத்தில் நேற்று நடைபெற்ற 6வது லீக் ஆட்டத்தில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் - கேஎல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மோதின.

இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 217 ரன்கள் குவித்தது. சிறப்பாக ஆடிய தொடக்க வீரர் ருதுராஜ் கெய்குவாட் 57 ரன்கள் சேர்ந்தார். இதனை தொடர்ந்து களமிறங்கிய லக்னோ 20 ஓவரில் 7 விக்கெட் இழந்து 205 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் லக்னோவை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை அபார வெற்றிபெற்றது.

இதனிடையே, நேற்றைய போட்டியில் சென்னை பந்து வீச்சாளர்கள் அதிக 'எக்ஸ்ட்ரா' ரன்களை வாரிக்கொடுத்தனர். 3 நோபால்கள், 2 லெக்பைஸ், 13 வையிட் என மொத்தம் 18 ரன்களை எக்ஸ்ட்ராவாக சென்னை பந்துவீச்சாளர்கள் வாரி வழங்கினர்.

அதிலும் குறிப்பாக, சென்னை பந்துவீச்சாளர் துஷார் தேஷ்பாண்டே 4 ஒயிட், 3 நோபால் என மொத்தம் 7 எக்ஸ்ட்ரா ரன்களை வழங்கினார்.

போட்டிக்கு பின் பேசிய சென்னை கேப்டன் டோனி, பந்துவீச்சாளர்கள் ஒரு நோபாலும் வீசக்கூடாது, குறைவான ஒயிட்களையே வீச வேண்டும். நாங்கள் கூடுதலாக நிறைய பந்துகளை வீசியுள்ளோம். அதை நிறுத்தவேண்டும். அவ்வாறு நிறுத்தாவிட்டால் வீரர்கள் வெறொரு கேப்டன் தலைமையில் தான் விளையாட நேரிடும் என்று எச்சரிக்கை விடுத்தார்.

ஐசிசி-யின் புதிய விதிப்படி, போட்டிகளில் ஒரு அணி குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்துவீசி முடிக்காவிட்டால் முதல் முறை அந்த அணியின் கேப்டனுக்கு 12 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.

2-வது முறையும் குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்து வீசி முடிக்காவிட்டால் அந்த அணியின் கேப்டனுக்கு 24 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.

3-வது முறையும் அந்த அணி குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்துவீசி முடிக்காவிட்டால் அந்த அணியின் கேப்டன் அடுத்து வரும் ஒரு ஆட்டத்தில் விளையாட முடியாது.

ஐசிசியின் புதிய விதியை மனதில் வைத்து சென்னை கேப்டன் டோனி பந்துவீச்சாளர்கள் எக்ஸ்டாக்களை வீசுவதை குறைக்க வேண்டும் என்று எச்சரிக்கும் வகையில் கூறினார்.

இந்நிலையில், சேப்பாக்கம் போட்டிக்கு பின் சென்னை வேகப்பந்து வீச்சாளர் துஷார் தேஷ்பாண்டே செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அதிக எக்ஸ்ட்ராக்கள் வீசப்பட்டது குறித்து அவர் பேசினார்.

தேஷ்பாண்டே கூறுகையில், நான் நிகழ்காலத்தை உறுதியாக நம்புபவன். கடந்தது கடந்துவிட்டது. டி20 கிரிக்கெட்டில் நோ பால் வீசுவது குற்றம் ஆனால் நான் அதைப்பற்றியே நினைத்துக்கொண்டிருந்தால் நான் மேலும் 10 எக்ஸ்ட்ரா ரன்கள் கொடுத்துவிடுவேன். மேலும், ஆட்டத்தின் முடிவு எந்த வழியிலும் சென்றிருக்கும். ஆகையால், சிறந்த ஆட்டத்தை (Comeback) கொடுப்பதில் நான் கவனம் செலுத்துகிறேன். அணிக்காக வெற்றியை பெற்றுத்தருவாய் என்று எனக்கு நானே கூறிக்கொள்வேன்' என்றார்.


Next Story