'நான் வேறொருவராக இருக்க விரும்பவில்லை... நான்...' - 27 பந்துகளில் 61 ரன்கள் குவித்த பின் ரஹானே கூறியது என்ன?
நான் வேறொருவராக இருக்க விரும்பவில்லை என்று சென்னை வீரர் ரஹானே தெரிவித்துள்ளார்.
மும்பை,
ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த 12-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை முதலில் பந்து வீச்சு தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த மும்பை 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 157 ரன்கள் எடுத்தது.
158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் களமிறங்கினர். தொடக்க வீரர் கான்வே (0) ரன் எதுவும் எடுக்காமல் ஏமாற்றமளித்த நிலையில் கெய்குவாட் உடன் ஜோடி சேர்ந்த ரஹானே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
ரஹானே 19 பந்துகளில் அரைசதம் விளாசி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். இறுதியில் 27 பந்துகளில் 7 பவுண்டரி, 3 சிக்சர்களுடன் 61 ரன்கள் குவித்த ரஹானே கேட்ச் மூலம் அவுட் ஆனார்.
இறுதியில் சென்னை சூப்பர் கிங்ஸ் 18.1 ஓவரில் 3 விக்கெட் இழந்து 159 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் மும்பை இந்தியன்சை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அபார வெற்றிபெற்றது.
சென்னைக்காக களமிறங்கிய முதல் போட்டியில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ரஹானே போட்டிக்கு பின் கூறுகையில்,
எனது ஆட்டத்தால் நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். மொயீன் அலிக்கு உடல்நலம் சரியில்லை என்பது டாஸ் சுண்டுவதற்கு முன்பு தான் எனக்க்கு தெரியும். நான் இன்று களமிறங்க வேண்டும் என்று ஸ்டீபன் பிளமிங் கூறினார்.
நாங்கள் பந்துவீசும்போது ஆடுகளம் எவ்வாறு உள்ளது. பந்துவீச்சு எவ்வாறு உள்ளது என்பது குறித்து சற்று அறிந்தோம். 1650-160 ரன்களை விரட்டும்போது முதல் 6 ஓவரில் நோக்கத்துடன் விளையாட வேண்டும். சிறப்பான தொடக்கம் இருந்தால் இலக்கை சுலபமாக அடைந்துவிடலாம். நான் களமிறங்கியபோது, வழக்கமான ஆட்டத்துடன் எனது பலத்தை நம்பி விளையாடினேன்.
ஒவ்வொரு வீரரும் வித்தியாசமானவர். நான் வேறொருவராக இருக்க விரும்பவில்லை. நான் ரஹானேவாக இருக்க விரும்புகிறேன். எனக்கு தெரிந்த பாணி, எனது பலம், எனது 'டைமிங்' ஆகியவற்றை கொண்டு ஆடினேன்.
நான் என்னை நம்பினேன். நான் வெறொருவராக இருக்க விரும்பவில்லை. இது அனைத்தும் நான் நானாக இருந்து ராஹானேவாக இருந்து ரஹானேவாக விளையாடுவது தான். நான் நன்றாக உணருகிறேன்' என்றார்.