வருடாந்திர தரவரிசை பட்டியல்: இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி முதலிடத்திற்கு முன்னேற்றம்


வருடாந்திர தரவரிசை பட்டியல்: இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி முதலிடத்திற்கு முன்னேற்றம்
x

டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் ஆஸ்திரேலியாவை பின்னுக்கு தள்ளி இந்திய அணி முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது.

துபாய்,

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) சார்பில் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் முதல் வாரத்தில் அணிகளின் வருடாந்திர தரவரிசை பட்டியல் வெளியிடப்படுவது வழக்கம். இதில் கடந்த 3 ஆண்டுகளில் ஒவ்வொரு அணிகளும் ஆடிய போட்டிகள் கணக்கில் எடுத்து கொள்ளப்படும். இதன்படி புதுப்பிக்கப்பட்ட டெஸ்ட் அணிகளின் தரவரிசை வெளியிடப்பட்டது.

புதிய தரவரிசையில் 2019-20-ம் ஆண்டு நடந்த டெஸ்ட் போட்டி முடிவுகள் நீக்கப்பட்டன. 2020-ம் ஆண்டு மே மாதத்தில் இருந்து நடந்த போட்டிகள் கணக்கில் எடுத்து கொள்ளப்பட்டுள்ளது. அதாவது 2020-ம் ஆண்டு மே முதல் 2022-ம் ஆண்டு மே மாதம் வரையிலான போட்டிகள் 50 சதவீதமும், அதன் பிறகு இந்த சீசனுக்கான போட்டிகள் 100 சதவீதமும் கணக்கிடப்பட்டு இருக்கிறது. இதன் அடிப்படையில் தரவரிசையில் சில மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.

119 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் இருந்த இந்தியா (121 புள்ளி) 2 புள்ளி அதிகரித்து முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது. 2021-ம் ஆண்டு டிசம்பருக்கு பிறகு இந்திய அணி 'நம்பர் ஒன்' அந்தஸ்தை எட்டியிருக்கிறது. இதுவரை 122 புள்ளிகளுடன் முதலிடம் வகித்த ஆஸ்திரேலிய அணி (116 புள்ளி) 8 புள்ளிகள் சரிந்து 2-வது இடத்துக்கு தள்ளப்பட்டது. மற்ற அணிகளின் வரிசையில் மாற்றமில்லை. 20 ஓவர் போட்டி தரவரிசையில் இந்திய அணி முதலிடத்தில் நீடிக்கிறது.


Next Story