'கணிக்க முடியாத கிரிக்கெட்டில் எது வேண்டுமானாலும் நடைபெறலாம்'- நெதர்லாந்துக்காக விளையாடும் இந்திய வம்சாவளி வீரர்


கணிக்க முடியாத கிரிக்கெட்டில்  எது வேண்டுமானாலும் நடைபெறலாம்- நெதர்லாந்துக்காக விளையாடும் இந்திய வம்சாவளி வீரர்
x

image courtesy; AFP

தினத்தந்தி 10 Nov 2023 6:58 AM GMT (Updated: 10 Nov 2023 7:11 AM GMT)

உலகக்கோப்பை தொடரின் கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியா மற்றும் நெதர்லாந்து அணிகள் மோத உள்ளன.

பெங்களூரு,

50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதுவரை நடந்து முடிந்த லீக் ஆட்டங்களின் முடிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளன.

இதில் நாளை மறுதினம் பெங்களூருவில் நடக்கும் கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியா- நெதர்லாந்து அணிகள் மோத உள்ளன. இந்த தொடரில் நெதர்லாந்து அணி பலம் வாய்ந்த தென் ஆப்பிரிக்கா மற்றும் வங்காளதேசத்தை வீழ்த்தி அசத்தியது. மேலும் நிறைய ஆட்டங்களில் பல்வேறு தருணங்களில் சிறப்பாக செயல்பட்டது.

இருப்பினும் 8 ஆட்டங்களில் 6 தோல்விகளை பெற்றதால் லீக் சுற்றுடன் வெளியேறியுள்ள அந்த அணி கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியாவை எதிர்கொள்ள உள்ளது. இந்நிலையில் கணிக்க முடியாத கிரிக்கெட்டில் இந்தியாவை தோற்கடிப்பது உட்பட எது வேண்டுமானாலும் நடைபெறலாம் என்று நெதர்லாந்துக்காக விளையாடும் இந்திய வம்சாவளி வீரர் தேஜா நிடமானுரு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு;- "இது கிரிக்கெட் விளையாட்டுதானே. எனவே நாங்கள் இந்தியாவை தோற்கடிப்பது உட்பட அனைத்தும் சாத்தியமே. நாங்கள் எங்களுடைய ஸ்டைலில் கிரிக்கெட்டை விளையாடுகிறோம். பந்துவீச்சில் அசத்தும் சில வீரர்கள் எங்களிடம் இருக்கின்றனர். அதேபோல தரமான சுழலை எதிர்கொள்ளும் சில பேட்ஸ்மேன்களும் எங்களிடம் உள்ளனர். எனவே எங்களுக்கு கொஞ்சம் அதிர்ஷ்டம் மட்டுமே தேவை.

அதே சமயம் இந்தியா மிகவும் வலுவான அணி என்பதில் சந்தேகமில்லை. இருப்பினும் இந்த தொடரில் பல்வேறு விஷயங்கள் நடைபெற்றுள்ளன. அதில் சிறப்பாக விளையாடும் அணியே வெற்றி பெற்றது என்பதால் இது எங்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பாகும். எந்த போட்டியையும் நாங்கள் சாதாரணமாக எடுத்துக்கொள்ளவில்லை' என்று கூறியுள்ளார்.


Next Story