ஆஷஸ் முதல் டெஸ்ட்: 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி வெற்றி


தினத்தந்தி 20 Jun 2023 6:24 PM GMT (Updated: 20 Jun 2023 8:18 PM GMT)

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி வெற்றிபெற்றது.

லண்டன்,

இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் தொடரின் முதல் போட்டி இங்கிலாந்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 8 விக்கெட் இழப்பிற்கு 393 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 386 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

7 ரன்கள் முன்னிலையுடன் 2-ம் இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி நேற்று 4-ம் நாள் ஆட்டத்தின்போது சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஜோ ரூட் மற்றும் ஹாரி ப்ரூக் தலா 46 ரன்கள் சேர்த்து அவுட் ஆகினர். பென் ஸ்டோக்ஸ் 43 ரன்கள், ஒல்லி ராபின்சன் 27 ரன்கள் எடுத்தனர். இறுதியில், இங்கிலாந்து அணி 2வது இன்னிங்சில் 273 ரன்னில் ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலியா சார்பில் பேட் கம்மின்ஸ், நாதன் லயன் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதையடுத்து, 281 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் உஸ்மான் கவாஜா, டேவிட் வார்னர் ஜோடி நிதானமாக ஆடியது. அணியின் எண்ணிக்கை 61 ஆக இருக்கும்போது வார்னர் 36 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய லாபுசேன் 13 ரன்னிலும், ஸ்டீவன் ஸ்மித் 6 ரன்னிலும் அவுட்டாகினர்.

இறுதியில், நான்காம் நாள் முடிவில் ஆஸ்திரேலியா 3 விக்கெட் இழப்புக்கு 107 ரன்கள் எடுத்தது. கடைசி நாளான இன்று ஆஸ்திரேலியா வெற்றி பெற 174 ரன்கள் தேவைப்பட்டது.

இந்த சூழலில் 5வது ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. போட்டி நடைபெறும் பர்மிங்காமில் மழை பெய்ததால் தாமதம் ஏற்பட்டது. பின்னர் மழை நின்ற பின் போட்டி தொடங்கியது. அப்போது ஆஸ்திரேலியா அணியின் சார்பில் களமிறங்கிய ஸ்காட் போலண்ட் 20 ரன்களும், டிராவிஸ் ஹெட் 16 ரன்களும், கேமரான் கிரீன் 28 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

மறுமுனையில் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த உஸ்மான் கவாஜா 65 ரன்களுக்கு போல்ட் ஆகி வெளியேறினார். அவரைத்தொடர்ந்து அலெக்ஸ் கேரி 20 ரன்களுக்கு வெளியேறினார். இதனிடையே தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஆஸ்திரேலியா கேப்டன் பேட் கம்மின்ஸ் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார்.

கேப்டன் கம்மின்ஸ் கடைசி கட்டத்தில் தடாலடியாக மட்டையை சுழற்றி களத்தில் பரபரப்பை உருவாக்கினார். டென்ஷனும் எகிறியது. இறுதி ஒரு மணி நேரத்தில் இங்கிலாந்தின் சாதுர்யமான பீல்டிங் வியூகத்தை கம்மின்ஸ்- லயன் ஜோடி திறம்பட தகர்த்து அட்டகாசப்படுத்தியது.

இறுதியில் பேட் கம்மின்ஸ் 44 (73) ரன்களும், நாதன் லயன் 16 (28) ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். முடிவில் ஆஸ்திரேலியா அணி 92.3 ஒவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 282 ரன்கள் எடுத்தது.

இங்கிலாந்து அணியின் சார்பில் அதிகபட்சமாக ஸ்டுவர்டு பிராட் 3 விக்கெட்டுகளும், ராபின்சன் 2 விக்கெட்டுகளும், மொயின் அலி, ஜோ ரூட் மற்றும் பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

இதன்மூலம் இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி வெற்றிபெற்றது. இதனைத்தொடர்ந்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற புள்ளிக்கணக்கில் ஆஸ்திரேலியா அணி முன்னிலை பெற்றுள்ளது. 2-வது டெஸ்ட் வருகிற 28-ந்தேதி லண்டன் லார்ட்சில் தொடங்குகிறது.



Next Story