ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய கிரிக்கெட் அணிக்கு அஷ்வினை கேப்டனாக நியமிக்க வேண்டும் - தினேஷ் கார்த்திக் கோரிக்கை...!
ஆசிய விளையாட்டு போட்டியில் கலந்து கொள்ளும் இந்திய கிரிக்கெட் அணிக்கு ரவிச்சந்திரன் அஷ்வினை கேப்டனாக தேர்வு செய்வார்கள் என நம்புவதாக தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.
சென்னை,
ஆசிய விளையாட்டு போட்டியில் கலந்து கொள்ளும் இந்திய கிரிக்கெட் அணிக்கு ரவிச்சந்திரன் அஷ்வினை கேப்டனாக நியமிப்பார்கள் என நம்புவதாக இந்திய கிரிக்கெட் அணி விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் தெரிவித்தார்.
ஆசிய விளையாட்டு போட்டி சீனாவில் உள்ள ஹாங்சோ நகரில் வரும் செப்டம்பர் 23 முதல் அக்டோபர் 8-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் இடம் பெற்றுள்ள டி20 கிரிக்கெட் போட்டிக்கு இந்திய அணியை பிசிசிஐ அனுப்ப உள்ளது.
அக்டோர் 5-ம் தேதி இந்தியாவில் ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்குவதால் ஆசிய விளையாட்டு போட்டிக்கு 2-ம் நிலை வீரர்களை உள்ளடக்கிய இந்திய அணியையே பிசிசிஐ அனுப்பக்கூடும். இந்த அணிக்கு சீனியர் பேட்ஸ்மேன் ஷிகர் தவண் கேப்டனாக நியமிக்கப்படக்கூடும் என தகவல்கள் வருகின்றன.
இந்நிலையில் ஆசிய விளையாட்டு போட்டிக்கு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக அஷ்வினை தேர்வுக்குழுவினர் தேர்வு செய்வார்கள் என நம்புவதாக தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.
சென்னையில் நேற்று நடைபெற்ற தனியார் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தினேஷ் கார்த்திக் கூறியதாவது,
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரை கருத்தில் கொண்டு ஆசிய விளையாட்டு போட்டிக்கு இந்தியா 'பி' அணியை அனுப்பும் என்று நினைக்கிறேன்.
ரவிச்சந்திரன் அஷ்வின் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியின் அமைப்பில் ஒரு பகுதியாக இல்லை என்றால், ஆசிய விளையாட்டு போட்டிக்கு அஷ்வினை கேப்டனாக பிசிசிஐ நியமிக்கும் என்று நான் நம்புகிறேன். அதற்கு அவர், தகுதியானவரே. இந்திய அணிக்காக அவர், பல ஆண்டுகளாக சிறப்பாக விளையாடி வருகிறார்.
விஜய் ஹசாரே தொடரில் தமிழக அணிக்காக விளையாடுவேன். இந்தத் தொடர் உலகக்கோப்பைக்கு பின்னர் நடைபெறுகிறது. உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நான் இருக்கமாட்டேன். மேலும் அந்த நேரத்தில் தொலைக்காட்சி வர்ணனையில் இருப்பேன்.
முஷ்டாக் அலி தொடரும், உலகக் கோப்பை தொடர் நடைபெறும் சமயத்திலேயே நடத்தப்பட உள்ளது. இந்த இரு தொடர்களும் ஐபிஎல் தொடருக்கு தயாராகுவதற்கு உதவியாக இருக்கும்.
உலகக் கோப்பை தொடரில் இந்தியாவில் நடைபெறுவதால் உள்நாட்டு ரசிகர்களின் ஆதரவு இந்திய அணிக்கு அதிகம் இருக்கும். இதுவே அழுத்தமாகவும் அமையும். 2011-ம் ஆண்டு சொந்த மண்ணில் கோப்பையை வென்றோம். 28 வருடங்களுக்கு பிறகுகோப்பையை வென்று சாதித்திருந்தோம்.
தற்போது 12 வருடங்களுக்கு பிறகு மீண்டும் சொந்த மண்ணில் விளையாடுகிறோம். இந்தத் தொடர் மிகுந்த சுவாரசியமாக இருக்கும். உலகக் கோப்பை தொடரில் தற்போதைய நிலையில் தமிழக வீரர்களில் வாஷிங்டன் சுந்தர் இடம் பெற வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.