450 விக்கெட் வீழ்த்தி அஸ்வின் புதிய சாதனை ..! தமிழில் வாழ்த்து தெரிவித்த சச்சின் தெண்டுல்கர்


450 விக்கெட் வீழ்த்தி அஸ்வின் புதிய சாதனை ..! தமிழில் வாழ்த்து தெரிவித்த சச்சின் தெண்டுல்கர்
x

அஸ்வினுக்கு இந்திய இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நாக்பூரில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாளான இன்று, இந்திய அணியின் சுழற்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறிய ஆஸ்திரேலிய அணி, முதல் இன்னிங்சில் 177 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணி தரப்பில் ஜடேஜா 5 விக்கெட்டுகளையும், அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இதையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணியில், கேப்டன் ரோகித் சர்மா, கே.எல்.ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். அதிரடியாக ஆடிய ரோகித் சர்மா அரை சதம் கடந்தார். மறுமுனையில் நிதானமாக ஆடிய கே.எல்.ராகுல் 20 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் ஆட்டநேர முடிவில் இந்தியா 1 விக்கெட் இழப்பிற்கு 77 ரன்கள் சேர்த்திருந்தது.

சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின், ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரியை 36 ரன்களுக்கு அவுட்டாக்கினார். இது டெஸ்ட் கிரிக்கெட்டில் அவருடைய 450-வது விக்கெட் ஆகும். இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 3000 ரன்கள், 450 விக்கெட்டுகளை எடுத்த முதல் இந்தியர், முதல் ஆசிய வீரர் என்கிற சாதனையை அஸ்வின் படைத்துள்ளார். உலக அளவில் விரைவாக 450 விக்கெட்டுகள் எடுத்த வீரர்கள் வரிசையில், இலங்கை வீரர் முத்தையா முரளிதரன் முதலிடத்தில் உள்ளார். அவர் 80 போட்டிகளில் 450 விக்கெட்டுகள் வீழ்த்தி இருந்த நிலையில், அஸ்வின் 89 போட்டிகளில் 450 விக்கெட்டுகளை வீழ்த்தி இரண்டாவது இடத்தில் உள்ளார். இந்திய அளவில் முன்னாள் வீரர் அணில் கும்ளே 619 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்கள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார். இருப்பினும் அவர் 93 போட்டிகளில் 450 விக்கெட்டுகளை எடுத்த நிலையில், அஸ்வின் இந்த சாதனையை 89 போட்டிகளிலேயே எடுத்து அசத்தியுள்ளார்.

இந்த நிலையில் அஸ்வினுக்கு இந்திய இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து சச்சின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் ,

அற்புதமான மைல்கல் .. 450 விக்கெட் வீழ்த்தியதற்கு வாழ்த்துக்கள் அஸ்வின் என தெரிவித்துள்ளார்.


Next Story