ஆசிய கோப்பை; இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் பாகிஸ்தான் சென்றார்...!
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது.
அமிர்தசரஸ்,
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. இந்திய அணி பாகிஸ்தான் சென்று விளையாட மறுத்து விட்டதால் இந்த போட்டி இரு நாடுகளில் நடக்கிறது.
இதற்கிடையே பாகிஸ்தானில் நடக்கும் ஆட்டத்தை பார்க்க வரும்படி இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகளுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அழைப்பு விடுத்து இருந்தது. இதனை ஏற்று இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் ரோஜர் பின்னி, துணைத்தலைவர் ராஜீவ் சுக்லா ஆகியோர் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அட்டாரி-வாகா எல்லை வழியாக நேற்று லாகூர் சென்றனர்.
17 ஆண்டுகளுக்கு பிறகு முதல்முறையாக இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் பாகிஸ்தான் சென்றுள்ளனர். அவர்களை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ஜகா அஷ்ரப் தலைமையிலான நிர்வாகிகள் வரவேற்றனர்.
பாகிஸ்தான் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் வாரிய துணைத்தலைவர் ராஜீவ் சுக்லா நிருபர்களிடம் பேசுகையில்,
'ஆசிய கோப்பை தொடரை பாகிஸ்தான் நடத்துகிறது. எங்களது இந்த பயணம் முற்றிலும் கிரிக்கெட் தொடர்பானதாகும். இதில் எந்தவித அரசியலும் கிடையாது. இந்த இரண்டு நாள் பயணத்தின் போது பஞ்சாப் மாகாண கவர்னர் எங்களுக்கு இரவு விருந்து கொடுக்கிறார். இதில் வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் அணி வீரர்கள் கலந்து கொள்கிறார்கள்.
நாம் கிரிக்கெட்டை அரசியலுடன் கலக்கக்கூடாது. இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இடையிலான போட்டி தொடரை மீண்டும் தொடங்க வாய்ப்பு உள்ளதா என்று கேட்கிறீர்கள். இருதரப்பு தொடர் குறித்த முடிவு இந்திய அரசால் எடுக்கப்படுகிறது. அரசாங்கம் என்ன பரிந்துரை செய்கிறதோ அதனை நாங்கள் அப்படியே பின்பற்றுவோம்' என்று தெரிவித்தார்.